Tuesday, September 15, 2009


பொகவந்தலாவையில் பதற்ற நிலை தொடர்கிறது

சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த கொட்டியாக்கலை, பொகவான, குயினா, கில்லானி, செல்வக்கந்தை உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த சகல தொழிலாளர்களும் எவ்வித தொழிற்சங்க, அரசியல் கட்சி பேதமின்றி நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் (15-09-2009) ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்றனர். பேரணி பொகவந்தலாவை கல்லூரி வீதிக்குச்சென்ற போது, ஊர்வலத்தினர் மீது இனந் தெரியாதவர்கள் கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அவர்களும் திருப்பித் தாக்குதல் மேற்கொண்டனர். பொகவந்தலாவை நகர மத்தியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொகவந்தலாவை நகருக்கூடான சகல போக்குவரத்துக்களும் பல மணிநேரம் தடைபட்டன. இதனைத் தொடர்ந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை எல்லை மீறிச்செல்லவே பொலிஸார் 10 க்கும் மேற்பட்ட கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


இதனால் மறியலிலில் ஈடுபட்டவர்கள் எதிர்த்து நின்ற போதும் புகை மண்டலம் பரவியதால் தொழிலாளர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். சிதறி ஓடினர். உடனடியாகப் பொகவந்தலாவை நகரின் சகல கடைகளும் இழுத்து மூடப்பட்டன. பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையிட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.

No comments: