Sunday, August 16, 2009

வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான கலந்துரையாடல்

இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கம், செங்கொடி பெண்கள் இயக்கத்தின் தலைமையில் வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கச் செய்வதற்கான கலந்துரையாடலொன்றை அண்மையில் கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடத்தியது. இக் கலந்துரையாடலுக்கு பிரதி தொழில் ஆணையாளர் உபாலி விஜயவீரவும், பெண்கள் மற்றும் குழந்தை தொழிலாளர் பிரிவின் செயலாளர் பர்ல்வீரசிங்ஹ உட்பட பல்வேறு தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ.ஏ இராமையாவின் வரவேற்புடன் கூட்டம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பெண்கள் குழந்தை தொழிலாளர் பிரிவு செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில் இன்று இலங்கையில் வீட்டு வேலை தொழிலாளர்களில் குழந்தைகளின் அளவு குறைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடையும் அதேநேரம் எமது தொழிலாள பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. எனவே எமது இக் கலந்துரையாடல் அதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செங்கொடி சங்கத்தின் தலைவரும், செங்கொடி பெண்கள் இயக்கத்தின் தலைவருமான மேனகா கந்தசாமி இலங்கையில் வீட்டு வேலை தொழிலாளர்கள் இன்று முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்க, அவர்களது உரிமைகளை வென்றெடுக்க எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏனைய தொழிற்சங்க தலைவர்களிடம் அபிப்பிராயங்கள் அறியப்பட்டன.
இதனையடுத்து தொழில் ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில் வீட்டு வேலை தொழிலாளர்களின் இப் பிரச்சினைகள் தொடர்பாக தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், இவர்களை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு வீட்டு வேலை தொழிலாளர்களை பதிவு செய்தல் தொடர்பாகவும், வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயிப்பது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த செயற்பாடுகளை செயற்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக் குழுவில் சட்ட ஆலோசகராக பீ. நவரத்ன, மேனகா கந்தசாமி, D.W சுபசிங்ஹ, M.R. ரசூடின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments: