Sunday, August 16, 2009

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

மேல் கொத்மலை திட்டத்தால் பாடசாலை கட்டிடத்ததை இழந்துள்ள தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான மாற்றுக் கட்டிடம் பல்வேறு குறைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், பழைய மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றிலேயே இயங்கி வந்தது. இப்பாடசாலை கட்டிடம் மேல் கொத்மலைத் திட்டத்தின் விளைவாக அப்புறப்படுத்தப்படவுள்ளதால் புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் புதிய பாடசாலை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், மேலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிருவாகத்தினர் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதிகாரிகளால் வழங்கப்பட்ட அளவில் புதிய பாடசாலை அமைக்கப்படவில்லை. வகுப்பறைகள் சுமார் 20 மாணவர்கள் மாத்திரம் கற்கக்கூடிய வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலை கட்டிடத்தைச் சூழ பற்றைக்காடுகள் காணப்படுகின்றன. கட்டிடத்தின் உட்புறத்தில் நீர் வழந்தோடும் முறை ஏற்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு மதில்களும், ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான மலசல கூடங்கள், மாணவர் தொகைக்கேற்ப மலசலகூடங்கள் முறையாக அமைக்கப்படவில்லை. பாடசாலை வளாகத்தினுள் பொது பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிய ஆலமரத்துக்கு அருகில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கான புதிய விளையாட்டு மைதானம் உறுதிப்படுத்தப்படவில்லை. இவை போன்று பல்வேறு குறைபாடுகளுடனேளே பொறுப்பேற்றுள்ளது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 28ம் திfகி பாடசாலைக்கு விஜயம் செய்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மேல் கொத்மலை திட்ட அதிகாரிகள் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து புதிய பாடசாலை அமைப்புத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்த பிறகே தலைவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தினை அப்புறப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்கத்தினர் பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீதரன்
தினக்குரல்

No comments: