Saturday, August 15, 2009

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணியில் டிரஸ்ட் நிறுவனம்

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி பொறுப்பு 1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு, வீடமைப்பு, அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு, சிறுவர் பராமரிப்பு, சுகாதார நலன்கள், முதியோர் பராமரிப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
கொழும்பை பிரதான அலுவலகமாகவும் கண்டி, பதுளை, இரத்தினபுரி, காலி, ஹட்டன், நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பிராந்திய அலுவலகங்களையும் கொண்டும் இயங்கி வருகிறது.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அமைச்சு, பிரதான தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனிகள் ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தோட்டத் துறையை அபிவிருத்தி செய்யும் அதேவேளையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் தொடர்ந்து கற்பதற்கான உதவிகளைச் செய்து வருவதுடன் க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியளித்து அவர்களை ஊக்குவித்து வருகிறது.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி பொறுப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும் விருது வழங்கும வைபவமும் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தலைவர் ஆர். யோகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்திராணி சுகததாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறந்த முகாமைத்துவம், சிறந்த தேயிலைத் தொழிற்சாலை, தொழிலாளருக்கான சிறந்த வீடமைப்பு, சிறந்த குழந்தை நலன் அபிவிருத்தி நிலையம், சிறந்த சுகாதார பராமரிப்பு நிலையம், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் சிறந்த முறையில் பங்களிப்பைச் செய்த தோட்ட முகாமையாளர், சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
p. வீரசிங்கம்

நன்றி- தினகரன்

No comments: