Tuesday, September 22, 2009

பெருந்தோட்ட மாணவர்களின் கணிதத் திறன் வீழ்ச்சியடைந்திருப்பதேன்?

பெருந்தோட்டப் புற பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையின் போது, கணிதப் பாடம் தொடர்பான சித்தி வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதைக் காணலாம். இலங்கையின் பரீட்சை விதிகளுக்கு அமைய ஒரு மாணவன் க.பொ.த. உயர் தரத்திற்கு கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளுக்குச் செல்ல வேண்டுமானால் க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயமான ஒரு நிபந்தனையாகும். ஆனால் இக் கணிதப் பாடத்தை ஆண்டு 1-11 வருடங்கள் தொடர்ச்சியாக இம்மாணவர்கள் கற்றப் பின் இறுதியாக நடைபெறும் க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் அநேகமான மாணவர்கள் சித்தியடையத் தவறி விடுவதை வருடம் தோறும் அவதானிக்கலாம். ஏன் இந்த நிலை இந்நிலைக்கான காரணகர்த்தா யார்? இந்த கணிதப் பாடப் பெறுபேறுகளை அதி கரிப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை நோக்கும் போது பல்வேறு தகவல்கள் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கையின் பரீட்சை விதிகளின் படி கணிதப் பாடத்தில் சித்தி பெறாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இப்பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோர்களும், பணிப்பாளர் விடயத்துக்கு பொறுப்பானவர் அதிபர் போன்றோர்கள் அதிக கரிசனை எடுத்து கணிதப் பாட பரீட்சைப் பெறுபேற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடம் தோறும் பரீட்சைப் பெறுபேறுகள் வந்தவுடன் அவசர அவசரமாக கருத்தரங்குகளை வைப்பதும் கலந்துரையாடல்களை, நடத்துவதும், ஆசிரியர்கள், மாணவர்களை, பாடசாலை அதிபர்களை விமர்சிப்பதும் பொருத்தமற்ற ஒரு விடயமாகும், இந்த பெறுபேறு வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதை உணர வேண்டும்.
ஆசிரியர்கள் முன்வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம். ஆரம்பக் கல்வியின் போது செயற்பாடுகளுடன் கூடிய கல்வி நிலை, எண்ணக்கரு விளக்கம் என்பன மிகமிக குறைவு இதற்கு காரணம் வீட்டுச் சூழல், பெற்றோர்கள், கணிதப்பாட அறிவு குறைந்த பயிற்றப்படாத ஆசிரியர்கள், மற்றும் தொடர்ச்சியான கணித அறிவு மட்டம் கணிப் பிடப்படாமை, வாசிப்பு திறனையும் அதிகரித்தால் தான் கணிதப் பாடத்தையும் விளங்கச் செய்ய முடியும்.
கணித எண்ணக் கருவில் முக்கியமான கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், என்பவற்றை ஆரம்பத்தில் இருந்து சரியாகவும் முறையாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எண் இடப் பெறுமானங்களைச் சரியாக மாணவர்களுக்கு புரிந்து கொள் ளும் வகையில் கற்பிக்க வேண்டும். சில மாணவர்களுக்கு 4,5,6,7,ம் வகுப்புகளில் கூட இடப் பெறுமானம் தெரிவது இல்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
மீள அறிவுறுத்தல் இன்மை, கணிதம் பற்றிய மனப்பாங்கு எதிர்மறையாக இருத்தல் கணிதப் பாடம் கஷ்டம் (கடினம்) என ஆரம்பத்திலேயே நினைத்தல், சுயசிந்தனை இண்மை, தொடர்ச்சியாக முயற்சிக்காமை, பிறழ்வான நடத்தை, சந்தேகங்களை உடனுக்குடன் கேட்காமை, கணிதப் பாடத்தின் முக்கியத்துவம் புரியாமை. சில ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளில் உள்ள குறைபாடுகள். கணித பாட அறிவை வளர்க்கக் கூடிய வாய்ப்புகள் இப்பிரதேச பாடசாலைகளில் குறைவாகக் காணப்படுகின்றமை. கணிதப் பாடத்தில் திறமையில்லாத மாணவர்கள் வகுப்பறையிலும், சக மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்க ளிடத்திலும் கவனிப்பாரற்ற நிலையில் விடப்படு கின்றார்கள். இதனால் இம்மாணவர்கள் உள ரீதியாகப்
பாதிக்கப்படுகின்றார்கள். கணிதப் பாடத்தில் திறமை குறைந்த மாணவர்களே தரம் 8-9 வகுப்புக்களில் இடை விலகலுக்கு உட்படுகின்றார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். க.பொ.த. சதாரணத் தரத்திற்கான சில அடிப்படைக் கணக்குகள் இந்த வகுப்பில்தான் தொடங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்கள் உடல் ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் வயதும் இவ்வயதே என்பதும் சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் கணிதப் பாடத்திற்கான ஆரம்ப எண்ணக் கருக்களை முறையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கணித பாடத்தில் ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டும். கணிதப் பாடத்தில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை 6-11 வரையான வகுப்புகளுக்கு உள்ளவர்களை அனுப்பும் போது குறிப்பிட்ட ஆசிரியர்களின் கணிதப்பாடம் சம்பந்தமான பின் புலத்தை அறிந்து அனுப்ப வேண்டும். கணிதப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாமல், பணம் மட்டுமே முக்கியம் என்று டியூஷன் நடத்தாது, உங்களை நம்பி வரும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி கற்பிப்பதோடு, இப்பாடத்தை ஒரு விருப்பமான பாடமாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். 144 மாணவர்கள் பரீட்சை எடுத்து 100 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி பெறவில்லை என்றால் கோளாறு எங்குள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய முன்வரவேண்டும்.
கொட்டகலை இரா.சிவலிங்கம்
தினகரன் வாரமஞ்சரி

Thursday, September 17, 2009


தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.
2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் கொழும்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் இ.தொ.கா சார்பில் ஆறுமுகன் தொண்டமான், ல.தே.தோ.தொ.ச சார்பில் கே.வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக அதாவது எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையையும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.
தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

  • தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும்,
  • 75 வீத வருகைக்கான கொடுப்பனவு- 90 ரூபா,
  • உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.


  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து எடை போடும் காட்சி1900ம் ஆண்டின் முற்பகுதியில்
  • இடிந்த கிணற்றில் குடி தண்ணீர் எடுத்துச் செல்லும் மலையகத்து பெண் தொழிலாளர்கள். அன்று தொடக்கம் இன்றுவரை இந்த மக்களின் வாழ்வு இந்த இடிந்த கிணறு போலவே செப்பனிடப்படாது, செழிப்பற்றுக் கிடக்கின்றது. எந்த" பெருந்தேசியங்களும், கதையாடல்களும், போராடல்களும்" இவர்களின்பால் என்ன அக்கறை செலுத்தின
  • கங்காணிகளும், தோட்டத் தொழிலாளர்களும். 1870இல்

Wednesday, September 16, 2009


தோட்டப் பகுதிகளில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

தமக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 405 ரூபா சம்பள உயர்வை எதிர்த்தும், 500 ரூபாவே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச சுமார் 1500 தோட்டதொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் மலையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள் - வீரகேசரி
உத்தேச சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை தொடர்பாக மலையக மக்கள் முன்னணி- பெ.சந்திரசேகரன், தொழிலாளர் ஐக்கிய முன்னணி- எஸ்.சதாசிவம், தொழிலாளர் தேசிய சங்கம் - பி.திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் -ஆர்.சந்திரசேகரன், பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக சங்கம் - இ.தம்பையா, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஆர்.முரளிதரன் ஆகிய ஆறு தொழிற்சங்கங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி தெரிவித்துள்ள பத்திரிகை அறிக்கையில்
  • அடிப்படை சம்பளம் 500 ரூபாவாக இருக்க வேண்டுமென்ற அனைத்து தொழிற்சங்கங்களின் முடிவுக்கு மாறாக 290 ரூபாவை அடிப்படை சம்பளமாக ஆக்கியிருப்பது தொழிலாளர்களின் உழைப்பையும் விலைவாசி ஏற்றத்தையும் உதாசீனப்படுத்துகிறது
  • ஏனைய கொடுப்பனவுகளோடு 405 ரூபா வழங்கப்படுமென தெரிவித்திருப்பது தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார சுமையை புரிந்து கொள்ளாததாகவே அமைந்திருக்கிறது.
  • அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமான சம்பள கொடுப்பனவுகள் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை என்பது தெளிவானதாகும்.

எனவே பின்வரும் கோரிக்கைகளை முன் வைப்பதாக மேற்படி ஆறு தொழிற்சங்கங்களும் தெரிவிக்கின்றன.

  • அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 500 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும். • தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்படும் சம்பள உயர்வு கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களையும் அலட்சியப்படுத்துவதாகவே அமைவதால் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் இக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக இக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் யாவும் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
  • இந்த ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் நிராகரிப்பதனாலும் முற்றாக எதிர்ப்பதனாலும் தொழிலமைச்சர் இதில் ஒப்பமிடுவதை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • 500 ரூபா அடிப்படை சம்பளத்திற்காக தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் தொழிலாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

இந்த விவகாரத்தில் அரசு பார்சையாளராக இல்லாமல் சமூக நியாயபூர்வமான தீர்வுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க மலையக தொழிற்சங்கங்கள் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவதென்று கொழும்பில் ஒன்று கூடிய மலையக தொழிற்சங்கங்கள் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம் ஆகியன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பி. திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதென்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் பங்குபற்றுமாறு கோருவது எனவும் இந்த சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெ. சந்திரசேகரன் தெரிவித்தார்

Tuesday, September 15, 2009

மலையகம் தந்த பாடம்
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
-சாகரன்-
கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள்.
அக்கால கட்டத்தில் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரைக்கும் வீதிகள் ஏதுமற்ற நிலை இருந்தது. தலைமன்னாரில் இருந்து மலையகம் செல்வதற்கான வீதிகளை தாமே நிர்மாணித்து, தாம் நிர்மாணித்த பாதை வழியே நடந்தே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை அம்மக்கள் கொண்டிருந்தனர். இப்பாதை நிர்மாணிப்பில் பல ஆயிரக்கணக்க மக்கள் தமது உயிரை மாய்த்தக் கொண்டு ஏதுமற்றவர்களாக எரியூட்டப்பட்டனர் என்பதே சோக வரலாறு. மன்னார் மண்ணுக்கு உரமாக்கப்பட்டனர். இராமாணயத்தில் அனுமான் தனது பரிவாரங்களுடன் இணைந்து இலங்கைக்கு கடல் வழியே பாதை அமைத்ததாக கதைகள் கூறுகின்றன. அது உண்மையோ, பொய்யோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வாழும் நூற்றாண்டில் தலைமன்னாரில் இருந்து மலையகம் வரை பாதையமைத்து தமது உயிரை தியாகம் செய்த வரலாறு எமது மலையக மக்களுக்கே சேரும். இவர்களே உண்மையில் வரலாற்று நாயகர்கள். ஆமாம் இலங்கையில் நாம் கண்ட வரலாற்று நாயகர்கள்.