Friday, January 8, 2016

மெத்தகந்த தோட்ட மக்களுக்கு பலவந்தமாக காணிகள்

பலாங்கொடை மெத்தகந்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் அமைத்துகொடுத்தக்கப்படவுள்ள வீடுகளுக்கு தோட்ட நிர்வாகம் காணிகளை ஒதுக்கி கொடுப்பதற்கு முன்வராவிட்டால் அத்தோட்டத்திலே பலவந்தமாக காணிகளை பிரித்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலாங்கொடை பிரதேச செயலாளர் சம்பிக நிரோஷ் தர்மபால, 'மெத்தகந்த  தோட்டத்தில் மண்சரிவால பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் அவர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான போதிய காணிகளை மேற்படி தோட்ட நிர்வாகம் வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க முடியாதுள்ளது' என்றார்.   

'மேற்படி தோட்டத்தில் போதிய காணிகள் கிடைக்குமாக இருந்தால் விரைவில் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும். எனவே காணிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  அவர் கூறினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே  சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'தோட்ட மக்கள்  வியர்வை சிந்தி, அரும்பாடுபட்டு கம்பனிக்கு இலாபத்தை பெற்று கொடுக்கின்றார்கள். ஆபத்தான நிலைமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம்  முன்வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடையூராக உள்ளன. 

குறிப்பாக தோட்ட மக்கள் தமக்கான மலசலகூடங்களை அமைத்துகொள்வதென்றாலும் அதற்கான இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை என நான் அறிந்துகொண்டேன். பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களின் முன்னேற்றத்துக்கு தோட்ட நிர்வாகம் தடையாகவுள்ளது.   தோட்ட மக்கள் குறித்து தோட்ட நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை. இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வராவிட்டால் மக்களால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் என்ற வகையில்,  மெந்தகந்த தோட்ட மக்களுக்கு அந்த தோட்டத்திலே காணிகளை பலவந்தமாக பெற்றுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்' என அவர் கூறினார்.

Tuesday, January 5, 2016

தோட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொத்­மலை எல்­பொடை தோட்டத் தொழி­லா­ளர்கள் நேற்று திங்­கட்­கி­ழமை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் நட­வ­டிக்­கையை கண்­டித்தே இப் பணிப் பகிஷ்­க­ரிப்பு இடம்­பெற்­றது. எல்­பொடை தோட்டம் நான்கு பிரி­வு­களைக் கொண்ட ஒரு தோட்­ட­மாகும். இத்­தோட்­டத்தின் பரப்பும் அதி­க­மா­னது. இங்கு ஒரு தோட்டப் பிரிவில் 5 தொடக்கம் 6 உத்­தி­யோ­கத்­தர்கள் ஏற்­க­னவே கட­மை­யாற்­றி­யுள்­ளனர். எனினும் அண்மைக் கால­மாக உத்­தி­யோ­கத்தர் குறைப்பு கணி­ச­மாக இடம்­பெற்­றது. இதன் கார­ண­மாக தோட்­டங்களை பரா­ம­ரிப்­பது முதல் நிர்­வாக ரீதி­யான செயற்­பா­டுகள் வரை அனைத்து மட்­டங்­க­ளிலும் திருப்­தியற்ற நிலைமை மேலெ­ழுந்­துள்­ளது.
 
மேலும் தேயிலைச் செடிகள் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமை கார­ண­மாக உற்­பத்தி வீழ்ச்சி நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சில தேயிலை மலைகள் காடாக இருப்­ப­தா­கவும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து சுட்­டிக்­காட்­டு­கின்றார். அத்­தோடு கம்­ப­னி­யி­னரின் சில முறை­யற்ற போக்­குகள் எல்­பொடை தோட்­டத்தின் எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்கி இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரிவிக்­கின்றார்.
 
தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக தாம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­வ­தாக தொழி­லா­ளர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இதனால் பாரிய பின்விளை­வுகள் ஏற்­படும் என்­பதும் அவர்­களின் கருத்­தாக உள்­ளது. இந்­நி­லையில் தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதை கண்­டித்து தொழி­லா­ளர்கள் காலை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். இந்­நி­லையில் இ.தொ.கா. வின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து தோட்ட நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டார். இப் பேச்­சு­வார்த்­தையின் போது விரைவில் கம்­ப­னி­யி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தாக தோட்ட நிர்­வாகம் செல்­ல­முத்­து­விடம் உறு­தி­ய­ளித்­தது. இதனை தொடர்ந்து பணிப் பகிஷ்­க­ரிப்பு கைவி­டப்­பட்­டது. தோட்ட நிர்வாகம் தோட்ட உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை விரைவில் உறுதியளித்தவாறு நிரப்பவில்லையாயின் எதிர்காலத்தில் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென்றும் தோட்­டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் என்றும் பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை ஒப்­ப­டைத்­து­விட்டு தாரா­ள­மாக அவர்கள் வெளியேறிச் செல்­லலாம் என்று உயர் கல்வி, நெடுஞ்­சா­லைகள் போக்­கு­வ­ரத்து அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல புஸல்­லாவை நக­ரத்தை அண்­மித்த பிர­தே­சங்­களில் நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்கும் அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் தொடர்­பா­கவும் புதிய பாதை­க­ளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும்  இடம்­பெற்­ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே  தெரி­வித்தார். இங்கு மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ். இரா­ஜ­ரட்ணம், நகர வர்த்­த­கர்கள், பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர். அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு தோட்டக் கம்­ப­னி­க­ளுக்கு வச­தி­களும் போதிய பணமும் இருக்­கின்­றது. ஆகவே 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும்.
 
அதனால் தொழி­லா­ளர்­களின் காலத்­தையும் நாட்டின் காலத்­தையும் வீணாக்­காமல் கட்­டாயம் 1000 ரூபா சம்­ப­ளத்தை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று கம்­ப­னி­க­ளுக்கு கூறு­கிறேன். தற்போது தோட்­டங்­களை குத்­கைக்கு பெற்று முறை­யாக நிர்­வ­கித்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் வழங்க தயா­ரான நிலையில் பல நிறு­வ­னங்கள் போட்டி போட்­டுக்­கொண்டு இருக்­கின்­றன. அவர்­களைக் கொண்டு தோட்­டங்­களை நிர்­வ­கித்து தோட்ட மக்­களின் வாழ்­வா­த­ாரத்தை உயர்த்த முடியும். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை கொடுத்­து­விட்டு தாரா­ள­மாக வீடு செல்­லலாம். 
 
நாட்டில் நல்­லாட்சி நடை­பெ­று­வதால் ஊட­கங்­க­ளுக்கு தற்­போது செய்­திகள் இல்லை. முன்னர் அப்­படி அல்ல. தினந்­தோறும் கடத்­தல்கள், கொலைகள். வெள்ளை வேன் கலா­சாரம் என அனைத்தும் இருந்­தன. அப்­போது செய்தி இருந்­தது. தற்­போது அவை இல்லை. 1977 ஆம் ஆண்டு கிளி­நொச்­சியில் விஞ்­ஞான பிரி­விற்­கான பல்­க­லை­க்க­ழக பிரிவு அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்டப்­பட்டு 30 வரு­டங்­க­ளுக்கு பின் 2015 ஆம் ஆண்டே திறக்­கப்­பட்­டது. 
 
பல்­க­லை­க்க­ழகம் அமைத்து திறக்க 30 வரு­டங்­க­ளுக்கு மேல் காலம் செல்ல காரணம் யுத்தம் இடம்பெற்று வந்தமையாகும். இதனால் இளைஞர், யுவதிகள் பலர் இறந்துள்ளனர். இவ்வாறான நிலைமைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாகவே ஜனாதிபதியும் பிரதமரும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் புதிய நாட்டை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

நன்றி- வீரகேசரி
 

Saturday, January 2, 2016

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது காலத்தின் கட்டாய தேவை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் சேமநலன்கள் தொடர் பாக  தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மிடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்படு ம்  கூட்டு ஒப்பந்தம் வரலாற்றில் முதல் தடவையாக ஒன்பது மாதங்கள் கடந்தும் கைச்சாத்திட முடியாத நிலை இன்னும் தொடர்கிறது. 

ஏனைய தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடாமல் புள்ளிவிபரச் சான்றுகளை ஆராயாமல் தன்னிச்சையாக இ.தொ.கா. எடுத்த முடிவின் விளைவுதான் இந்தக் காலதாமதத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. அன்று கம்பெனிகளுக்கு பெருந்தோட்டங்களை தாரை வார்க்கும்போது இ.தொ.கா. வும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், கூட்டுத்தொழிற்சங்கமும் வாழ்க்கைச் செலவுப் புள்ளியை நிறுத்த துணை போகாமல் இருந்திருந்தால் இன்று தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்திருக்கும். 

2013 ம் ஆண்டு ஒரு அ.மெ டொலர் 90 ரூபாவிலிருந்து 140 ஆக கூடியுள்ளது.இதன் மூலம் பணவீக்கமும், பணப்பெறுமதி குறைப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இன்று மக்களுடைய வாழ்க்கைச்சுமை கூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பலவிதமான சம்பள முறையை உருவாக்கியுள்ளது. 

தோட்டங்கள் தனியார் மயமாக்களின் பின்னர் வாழ்க்கைச் செலவுப் புள்ளியினை நிறுத்தி முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இச் சம்பள முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. 

1) அடிப்படைச் சம்பளம்
2) பெயரளவிலான சம்பளம்
3) கேள்விக்குட்படுத்தப்பட்ட சம்பளம்
அடிப்படைச் சம்பளம்

2001 தொடக்கம் 2009 வரையும் அடிப்படைச் சம்பளம் 33 வீதமாக கூட்டப்பட்டது. ஆனால் 2011 தொடக்கம் 2013 வரை இது 18 வீதமானது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது இந்த 18 வீதமும் உண்மையான சம்பள உயர்வு அல்ல. இன்று அடிப்படைச் சம்பளமாக அரச துறையில் 20086 +10000 வழங்கப்படுகின்றது. அதேபோல தனியார் துறையில் 9660 + 2500 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆனாலும் தனியார் துறையினருக்கு இவ் அடிப்படைச் சம்பளம் போதாது எனவும் 15000 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும் போராடுகின்றனர். ஆனால் தோட்ட தொழிலாளர்கள் 20 நாட்கள் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளமும், 25 நாட்கள் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளமும் பின்வருமாறு.
450 x 20 = 9000.00
450 x 25 = 11250.00

இதிலிருந்து தெரிவது என்னவெனில் ஏனைய தொழிலாளர்களை விட தோட்டத் தொழிலாளர்களுக்கு 66 வீதம் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. அடிப்படைச் சம்பளத்திற்கு மட்டும்தான் ஈ.பி.எப், ஈ.ரி.எப். வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் பின்போடப்பட்டு வருவது கம்பெனிகளுக்கே ஆதாயமாகின்றது. புதிய ஒப்பந்தத்தில் கூட்டப்பட்ட தொகைக்கு ஊழியர் சேமலாப நிதியும், ஊழியர் நம்பிக்கை நிதியும் கிடைக்க வாய்ப்பில்லை. அதே சமயம் கூட்டப்பட்ட தொகை நிலுவை மொத்தமாக கிடைக்கப்போவதில்லை. நிலுவைக்கான வட்டியும் சேர்க்கப்படப் போவதில்லை. இவை கம்பெனிகளுக்கே இலாபத்தைக் கொடுக்கும்.
 
நிறை அதிகரிப்பு

1970ல் 14 இறாத்தல் கொழுந்து பறிக்கவேண்டும் என்றிருந்த நிலை படிப்படியாக 14 கிலோவாக மாறி இன்று ஒரு நாட்சம்பளத்திற்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் 3 முறை கொழுந்து நிறுக்கும்போது ஒவ்வொரு முறைக்கும் 2 கிலோ வீதம் கழிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் 5 கிலோ கழிக்கப்படுகிறது. ஆகவே ஒருநாட் சம்பளத்திற்கு தொழிலாளி ஒருவர் 24 கிலோ கொழுந்தெடுக்க வேண்டியுள்ளது. 

24 கிலோ பச்சை கொழுந்து தேயிலையில் 6 கிலோ கறுப்புத் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ தேயிலை “டஸ்ட் நம்பர் 1” 600 ரூபாவாக விற்கப்படுகிறது. அதனடிப்படையில் தொழிலாளியொருவர் நாளொன்றுக்கு ரூபா 3600 கம்பெனிகளுக்கு உழைத்துகொடுக்கிறார். சந்தையில் 50 கிராம் தேயிலைப் பொதி ஒன்றின் விலை 55 ரூபாவாகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ தேயிலையின் விலை ரூபா 1100. பதனிடப்பட்ட பச்சைத் தேயிலை ஒரு கிலோ 1000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை 1.8 கிராம் வீதம் பைகளுக்குள் அடைக்கப்படும்போது அதன் எடை 2 கிராமாக மாறுகின்றது.- 

20 பைகளை கொண்ட பெட்டியொன்றின் எடை 40 கிராமாக உள்ளது. இதன் சந்தை விலை ரூபா 150 ஆகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ (25 பெட்டிகள்) ரூபா 3750இற்கு விற்கப்படுகின்றது. தேயிலை சிறிய பக்கெட் ஒன்று 10 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதன்மூலம் ஒரு கிலோ தேயிலை ரூபா 5000இற்கு விற்கப்படுகின்றது. ஏலத்திலோ இடைத்தரகர்களோ இன்றி நேரிடையாக தொழிற்சாலைகளிலும் தேயிலை இதே விலைகளின் அடிப்படையில் விற்கப்படுகின்றது. 

இதனால் கம்பெனிகள் நோகாமலே இலாபம் பெறுகின்றனர் என்பதே உண்மையாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்போது இதன் விலை 8 மடங்காக அதிகரிக்கின்றது. உற்பத்தியில் மட்டுமல்லாது சந்தைப்படுத்தல், மதிப்புக்கூட்டல் என்ற தலங்களிலும் இதே கம்பெனிகள்தான் பின்னணியில் இயங்குகின்றன. ஆகவே கம்பெனிகளுக்கு நட்டம் என்ற நிலை ஏற்பட வாய்ப்பேயில்லை. தொழிலாளருக்கோ நுகர்வோருக்கோ எவ்வித இலாபமுமில்லை. 

உள்நாட்டில் ஒரு தனிநபர் சராசரி வருடமொன்றிற்கு 1.33 கிலோ தேயிலையை நுகர்கின்றார். இலங்கையின் சனத்தொகை 21 மில்லியன் என எடுத்துக்கொண்டால் 279,300,000 (28 மில்லியன்) கிலோ தேயிலை வருடமொன்றிற்கு விற்பனையாகின்றது. இதன்படி ஒரு கிலோ ரூபா 600 வீதம் எதுவித வரியுமின்றி விற்கப்படுவதன் மூலம் வருடத்திற்கு 16.800 மில்லியன் ரூபா வருவாயாக பெறப்படுகின்றது. மொத்த தேயிலை உற்பத்தியில் இது 10 வீதமும் இல்லை. மிகுதி 90 வீதமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
 
ஏற்றுமதி வருமானம்

2014ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இதில் தேயிலை மூலமாக 1.7 பில்லியன் அமெரிக்க டொலரும், 35 வீதம் இறப்பர் மூலம் 460 மில்லியன் அமெரிக்க டொலரும், 65வீதம் உள்நாட்டு தெங்கு பொருட்கள் மூலம் 538 மில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இதைத் தவிர குத்தகைக்கு காணி வழங்கல், இரத்தினக்கல் அகழ்வதற்கு குத்தகைக்கு விடுதல், மரங்களை விற்பனை செய்தல், போன்ற பல்வேறு வழிகளிலும் வருமானத்தை தேடுகின்றனர்.

அதுமட்டுமல்ல சாலை ஓரங்களில் தேயிலை நிலையங்களை அமைத்து தேநீர், தேயிலை என வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்திலேயே தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக ஒரு முகாமையாளர் கூறினார். ஆகவே நஷ்டத்தில் இயங்குகின்றோம் என்று அங்கலாய்ப்பதில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
 
விடுமுறை நாட்கள்

இலங்கையில் கூடிய நாட்கள் வேலை செய்து குறைந்த சம்பளம் பெறும் ஒரு சமூகமொன்று உள்ளதென்றால் அது மலையகத் தொழிலாளர்களேயாவர். வருடத்திற்கு 4 நாட்கள்தான் சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படுகின்றது. இதைத் தவிர ஆகக்கூடிய வேலை நாட்களுக்கு 17 நாட்கள் சம்பளத்துடன்கூடிய போனஸ் விடுமுறை வழங்கப்படுகின்றது. பொதுத் துறையினருக்கு 171 நாட்கள் விடுமுறையும், தனியார் துறையினருக்கு 119 நாட்கள் விடுமுறையும் மாதச் சம்பளத்துடன் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளருக்கு ஆகக்கூடியது 21 நாட்கள்தான் சம்பளத்துடன்கூடிய விடுமுறை உரித்தாகின்றது. 347 நாட்கள் வேலைக்கு செல்லும் கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. கடின உழைப்பை பொறுத்தவரை ஒரு மனிதனால் 300 நாட்களுக்குகூட முழுமையாக ஈடுபட முடியாது.
 
ஒன்றரை நாட்சம்பளம்

ஒரு சில மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் போயா, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வேலை வழங்கப்படுகின்றது. ஏனைய நாட்களில் 18 கிலோ பறிக்க வேண்டியவர்கள் இத்தினங்களில் 25 கிலோ கொழுந்தெடுக்கவேண்டும். எடை போடும்போது 6 கிலோ கழிக்கப்பட்டால் மொத்தம் 31 கிலோ கொழுந்தெடுக்கவேண்டும். அடிப்படைச் சம்பளம் 450 உம் அதனுடன் அந்தச் சம்பளத்தின் பாதியும் சேர்த்து ரூபா 675 கொடுக்கப்படுகின்றது. வேறு கொடுப்பனவுகள் இதனுடன் சேர்க்கப்படுவதில்லை.

இந்த நாட்களில் இவர்கள் 7.75 கிலோ கறுப்புத் தேயிலையை பெற்றுக்கொடுக்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்திற்கு ஒருவர் 4650 ரூபாவை ஈட்டிக்கொடுக்கின்றார். மேதின போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட 8 மணித்தியால வேலை, ஞாயிறு ஓய்வு போன்ற நன்மைகளை இழப்பது பற்றி தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். மே தினத்தன்றும் வேலைக்குப் போவது அவர்களின் உரிமையை கேளிக்குள்ளாக்குகின்றது என்பது பற்றியும் அவர்கள் சிந்திக்கவேண்டும்.
 
மேலதிக கொழுந்து

வருமானத்தை கூட்டுகின்றது என்ற எண்ணத்தில் மேலதிகமாக கொழுந்தெடுக்கும் தொழிலாளருக்கு ஒன்று புரிய வேண்டும். வழக்கமாக பெயருக்கு எடுக்கும் கொழுந்துக்கு (18 கி) ரூபா 620 கிடைக்கின்றது. அதன்படி ஒரு கிலோவிற்கு 34.4 ரூபா கிடைக்கின்றது. மேலதிக கிலோவிற்கு ரூபா 20 கிடைக்கின்றது. இதனால் ஆதாயம் பெறுவது கம்பெனிகள்தான். உழைப்பு சூறையாடப்படுவதேயன்றி ஊதியம் அதிகரிப்பதில்லை. புதிய சம்பள ஒப்பந்தத்தில் மேலதிக கிலோவிற்கு 40 ரூபா வழங்கப்படவேண்டும்.
 
ஒப்பந்தங்கள் தேவையா?

சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்வாங்கப்பட்டுள்ளது. 80 வீதமான தொழிலாளர்களால் இதைப் பெற முடிவதில்லை. இதனால் கம்பெனிகளுக்கே ஆதாயமாகும். அத்துடன் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படுவதில்லை. இதனால் தொழிற்சங்க பிளவுகளும் அவற்றிற்கு இடையே முரண்பாடுகளும் ஏற்படும். தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துப்போகின்ற நிலைமைக்கும் இது வித்திடுகிறது. ஆகவே இந்த தேவையற்ற அநீதியான முறைமையை தொடர்வது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகவேயிருக்கும். 

தொழிலாளர்கள் இன்று தங்களுக்கு 800 ரூபா அடிப்படைச் சம்பளமும் வாழ்க்கைச் செலவு புள்ளியை மீண்டும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இம்மாதத்திற்குள் இந்த கோரிக்கை உள்வாங்கப்பட்டு தீர்வுகாணப்படாவிட்டால் போராட்டங்களில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் சம்பள ஒப்பந்தங்களுக்கு தேவையிருக்காது. விலைவாசி உயரும்போது சம்பளமும் தானாக கூடும்.
 
அரசாங்கம்

நல்லாட்சி, வெளிப்படையான செயற்பாடுகள், கணக்கு காட்டுதல் எனக்கூறிவரும் அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினையில் தலையிட வேண்டும். ஆரம்பத்தில் 19 வீதமான தங்கள் பங்குகளை அரசாங்கம் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது 100 வீதமான பங்குகளை அநேகமான கம்பெனிகள் தம்மகத்தே வைத்துக்கொண்டுள்ளன என்பதுதான் உண்மை. ஆகவே பெருந்தோட்ட சட்டபூர்வமான அதிகாரச் சபை ஒன்றை நிறுவி கம்கெனிகள் கூறும் நட்டம் உண்மையானதா என்று ஆராய வேண்டும். 

இந்தக் கம்பெனிகள் தங்கள் அங்கத்துவ கம்பெனிகளுக்கு கொடுக்கும் நிருவாக முகவர் கட்டணம் எவ்வளவு? உயர் மட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கும் சலுகைகளும் (வாகனம், பங்களா,வெளிநாட்டுப்பயனங்கள்) சம்பளமும் எவ்வளவு என்பது தொழிலாளருக்கத் தெரியாது. இவை உற்பத்திச் செலவில் காட்டபபடுகின்றது. அதனால் உற்பத்திச் செலவு அதிகரித்தும் இலாபம் குறைக்கப்பட்டும் காட்டப்படுகின்றது என்பதும் அவர்கள் அறியாத ஒன்று. குறுந்தோட்டத் தொழிலாளருக்கு இந்தச் செலவுகள் எதுவுமில்லை.
 
அணுகுமுறையில் மாற்றம் 

 பெருந்தோட்டத்துறையை தக்கவைப்பதானால் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். ஒரு குடும்பத்திற்கு 1ஹெக்டயர் வீதம் 35 வருட குத்தகை அடிப்படையில் தேயிலைக் காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலமாக தற்போது ஒரு ஹெக்டயருக்கு 1300 கிலோ உற்பத்தியை 3000ம் கிலோவாக அதிகரிக்க முடியும். வேற்றுக் காணிகளில மாற்றுப் பயிர்களை பயிர் செய்ய முடியும். 

தனிப் பணப்பயிர் நாட்டில் கால நிலை மாற்றத்துக்கு ஏதுவாகின்றது. அதுமட்டுமல்ல மேல் மண் அரிப்புக்கும் வித்திடுகிறது. இதனால் பாரிய மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் தோன்றுகிறது. பாரிய அளவில் பயன்படுத்தும் கிருமிநாசினிகள், இரசாயன கலவைகள் மண் வளத்தைக் குறைப்பதுடன் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றது. ஆகவே சிறு தோட்டங்களின் நிருவாக அமைப்பு முறையை அமுல்படுத்தி சம்பளம் முதல் அனைத்து இயற்கை அனர்த்தங்களில் இருந்தும் விடுபட முடியும். 

இது தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளருக்கு வழங்குவதும் கூட்டுறவு அமைப்பு முறையில் பயிற்சி அளிப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது. நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வரை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுத்தடிக்கப்படு​ேமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி நடக்குமானால் தொழிலாளர் வெளியிடங்களுக்கு வேலைக்காக செல்லும் நிலையில் அதிகரிப்பு ஏற்படும். 

ஒரு கால கட்டத்தில் வேலைக்கு ஆளே இல்லாத நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் இதில் உடனடியாக தலையிட்டு எதிர்வரும் மாத்திற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். முன்பிருந்தது போல் முக்கூட்டு ஒப்பந்தமாக, தொழிலாளரின் அருமையையும் காணியின் பெருமையையும் உணர்ந்த ஒப்பந்தமாக வெளிவர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Friday, January 1, 2016

அமரர் பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம்

மலையகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு மலையக தமிழ் மக்களின் குறிப்பாக, மலையக தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு, காணிப்பிரச்சினை மிக முனைப்பாக பேசப்படுகின்ற கால கட்டமிது. வீட்டுரிமையும், காணியுரிமையும், மலையகத் தலைவர்களினதும், மலையக அமைப்புக்களினதும் மலையக தமிழ் மக்களினதும் ஏகோபித்த கோரிக்கையாக மாறியுள்ள இன்றைய கால கட்டத்தில், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும், மலையக தலைவர்களின் தனித்துவமானவருமான பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுவது சாலப் பொருத்தமானதாகும்.

மலையக வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பாக மலையக மக்களினதும், சந்திரசேகரன் உட்பட மலையக தலைவர்களினதும் கவனம் கடந்த இரு தசாப்தங்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான பிரச்சினைக்கு உந்து சக்தியாக அதனை தேசிய, சர்வதேச மயமாக்குவதற்கு மீறியாபெத்தை மண்சரிவு அவலம் மிக முக்கிய உந்துசக்தியாக விளங்கியது. இந்த நிகழ்வே மலையக மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை தொடர்பாக இன்னொரு பாய்ச்சலை ஏற்படுத்தியது.

முதன் முதல் மலையக தமிழ் மக்களுக்கு மலையக வரலாற்றில், இலவசமாக காணியுரிமையும் வீட்டுரிமையும் வழங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்பட்டது. மீறியபெத்தை அனர்த்தம் மலையக வீடமைப்பில், லயன்முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தோட்ட நிருவாகங்களுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தினாலும், இந்தத் தோட்டப்புற வீடமைப்பு அல்லது மலையக வீடமைப்பு, காணியுரிமை என்ற விடயத்தில் மலையக மக்கள் முன்னணியினதும், அதன் தலைவர் பெ.சந்திரசேகரன் தனி நபர் பாத்திரமும், ம.ம.முயின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடமுடியாதது.

ஆனால் படிப்படியாக இந்த காணியுரிமை, வீட்டுரிமை விடயங்களில் தலைவர் சந்திரசேகரனினதும், மலையக மக்கள் முன்னணியினதும் பங்களிப்பு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருது புலப்படுகின்றது.

அண்மையில் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான ஒரு ஆய்வு கலந்துரையாடல் நடைபெற்றபோது மலையகத்தின் காணியுரிமை வீட்டுரிமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதிலுள்ள தடைகள், பிரச்சினைகள் மற்றும் கட்டப்பட்ட வீடுகள் தொடர்பாக ஆய்வாளரொருவர் ஆவணத்தையும் சமர்ப்பித்தார். அப்போது மலையகத்தில் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் சிலாகித்து பேசப்பட்டு, மறைந்த தலைவர் சந்திரசேகரனின் பெயர் குறிப்பிடப்படாத போது, கட்டுரையாசிரியர் அதனை சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட ஆய்வு கலந்துரையாடலை ஒழுங்கு படுத்தியவருக்கு சந்திரசேகரனின் பாத்திரத்தை மறக்க வேண்டிய, மறுக்க வேண்டிய தேவை இல்லாத போதும், ஒரு விடயம் தெளிவாக தெரிகின்றது.

மலையக வீட்டுரிமை, காணியுரிமை விடயங்களில் ம.ம.மு தலைவர் பெ. சந்திரசேகரனின் பெயர் படிப்படியாக மறைந்தும், மறைக்கப்பட்டும் வருகின்றது. மலையக வீடமைப்பில் காணியுரிமையைப் பொறுத்தவரையில், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் பெயர் மறக்கமுடியாது. அது மலையக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்றாகும். மலையக வீடமைப்பு பற்றி ஆய்வு செய்யும் போது, எந்த ஆய்விலும் மறைந்த தலைவர் சந்திரசேகரனின் வீடமைப்பு திட்டத்திற்கு நிச்சயமாக ஆய்வில் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்படும். சந்திரசேகரனின் பாத்திரத்தை புறந்தள்ளிவிட்டு மலையக காணியுரிமை, வீட்டுரிமை வரலாற்றை பார்க்க முடியாது.

ஆகவே அவரது 6வது சிரார்த்த தினம் எதிர்வரும் 2016 ஜனவரி முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும்போது, காணி வீட்டுரிமையில் அவரது பங்களிப்பு நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மூத்த தொழிற்சங்க, அரசியல்வாதி 1977ம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் 17 வருடங்கள் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்தபோதும், கொட்டக்கலையில் சௌமியபுரத்தில் 20 வீடுகளையும், ரொசால்லை மாணிக்கவத்தையில் 20 வீடுகளுமாக 17 வருடங்களில் 40 வீடுகளையே வீடமைப்பில் இலங்கையில் சாதனை நிகழ்த்தியதாக கூறப்படும் பிரேமதாச ஆட்சிக் காலத்தில் நிர்மானித்திருந்தார். அது மாத்திரமன்றி தோட்டப்புற வீடமைப்பு பற்றி அவருக்கு ஒரு தொலைநோக்கு இருக்கவில்லை.

லயன்முறை ஒழிக்கப்படவேண்டுமென்று பலராலும் வலியுறுத்தப்பட்டபோது அவர் லயன் வீடுகளையும், அதனை சூழவுள்ள காணிகளையும், தோட்டத் தொழிலாளருக்கு உரிமையாக்க வேண்டுமென்று கோரியிருந்தார். ஆனால் 1994ம் ஆண்டிலிருந்து 1998ம் ஆண்டுவரை சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்மானத்துறை பொது வசதிகள் அமைச்சின், தோட்டப்புற வீடமைப்பு பிரதியமைச்சராக இருந்த மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் கிட்டத்தட்ட 20,000 வீடுகளுக்கான காணிகளை பெற்று தனித்தனி வீடுகள் காணியுரிமை, வீட்டுரிமையுடன் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

 எந்த புள்ளிவிபரமுமின்றி எழுந்தமானமாக அவர் இந்த நான்கு வருடங்களில் (94- முதல் 98 வரை) ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிமுடித்தார் என்று துணிந்து கூறலாம். அவர் கட்டிய வீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வீடுகள் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அமைக்கப்படவில்லை. காலி, மாத்தறை, மொனராகலை, பதுளை, கண்டி, மாத்தளை குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, போன்ற பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் கூறுவது போல மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் என்று அர்த்தப்படுத்துவது போல் அல்லாமல் பல மலையக மாவட்டங்களில், கொழும்பு மாவட்டத்தில் கூட தோட்டப்பகுதிகளில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. தனது குறுகிய கால வாழ்க்கையில் மூத்த மலையகத் தலைவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்தவர் மறைந்த தலைவர் சந்திரசேகரனாவார்.

 அமரர் பெ.சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையான பிரச்சினைககளான காணி, வீட்டுரிமை மட்டுமன்றி, 1948ம் ஆண்டிலிருந்து இழுபறியாக 2003ம் ஆண்டுவரை இழுத்தடிக்கப்பட்ட பிரஜா உரிமை பிரச்சினை தொடர்பாகவும், இந்திய கடவுச்சீட்டு பெற்று இந்தியா செல்ல விரும்பாத ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் கடவுச்சீட்டு பெற்றவர்களின் பிரச்சினையிலும் துணிகரமாக குரல்கொடுத்து வந்தார்.

1991ம் ஆண்டு தலவாக்கலையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களின் கடவுச்சீட்டை சேகரித்து எரித்து, அதன் காரணமாக 02 வாரங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிவந்தது.

இதன் பிறகு நாடற்றோர் பிரச்சினையை தீர்ப்பதிலும் பிரஜா உரிமை பிரச்சினையை முற்று முழுதாகத் தீர்ப்பதிலும் இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டியது, தலைவர் சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையிலான பிரச்சினைகளில் துணிவாகவும் தீர்க்க தரிசனத்துடனும் செயல்பட்டவர்.

மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தனி நபர் என்ற அடிப்படையில், மலைய மக்களின் பிரச்சினையில் கூடுதலான அக்கறை கொண்டவராகவும் மலையக மக்கள் முன்னணி என்ற அடிப்படையில், மலையக மக்கள் பிரச்சினைகளில் தலைமைப் பாத்திரம் ஏற்றவராகவும்செயல்பட்டார்.

இதில் மலையக மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினையும் பிரஜா உரிமை பிரச்சினையும், மிக முக்கியமானது. இதில் வீட்டுரிமை காணியுரிமை பிரச்சினையை பொறுத்தவரையில் மலையகத்தில் ஏனைய தலைவர்களைவிட, முன்னோடியாக செயல்பட்டவர் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. இவ்வகையில் அமரர் சந்திரசேகரனின் பங்களிப்பு காத்திரமானது. 

அ. லோறன்ஸ்

Thursday, December 31, 2015

கலப்புத் தேர்தல் முறை - சிறுபான்மை பிரதிநிதித்துவங்களுக்கு ஆபத்து!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போதைய நிலைவரத்தின்படி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதமே நடத்தப்படுமென அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெற்றாலும் தேர்தல் முறைக்கு கொண்டு வரப்படவுள்ள விகிதாசார, தொகுதி வாரி என்பன கலந்த திருத்தத்திற்கு அதாவது உத்தேச அரசியலமைப்பிற்கான 20வது திருத்தச் சட்டத்தின் படியே நடத்தப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி சபை தேர்தல் விசேடமாக வட்டார (வார்ட்) முறையின் அடிப்படையிலேயே நடைபெறும்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பற்றி பேசப்படும் சூழ்நிலையில் இரண்டு பிரதான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஒன்று ஒரு உள்ளூராட்சி சபை பிரதேச எல்லைக்குள் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை ஒப்பீட்டு ரீதியில் உறுதி செய்து வருவது விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஆகும்.

விகிதாசார முறையும் தொகுதிவாரி முறையும் கலந்த தேர்தல் முறை அறிமுகம் செய்யப்படும்போது எண்ணிக்கையில் சிறுபான்மையான சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவடைய அல்லது இல்லாமல் போகக்கூடும். அதிலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வட்டாரங்களிலிருந்து உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்படின் சிறுபான்மை சமூகத்தினர் அந்த வட்டாரத்தில் செறிவாக வாழாத விடத்து அவர்களின் பிரதிநித்துவம் இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும்.

இரண்டாவது பிரச்சினையாவது உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்திற்குரிய புவியியல் பிரதேச எல்லைக்குள் பெருந்தோட்டக் குடியிருப்புகள் அடக்கப்படாதபடியால் அவை அமைந்துள்ள பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதற்கு தடைகள் இருக்கின்றன.

பிரதேச சபைகள் என்ற உள்ளூராட்சி அமைப்பிற்குள்ளேயே பெருந்தோட்டப் பகுதிகள் உள்ளடங்குகின்றன. அதற்கான தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடங்கலான மலையக மக்கள் வாக்களிப்பதை மட்டுமே உரிமையாக கொண்டுள்ளனர்.

பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 33 பிரதானமாக தோட்டக் குடியிருப்புகளை பிரதேச சபைகளின் அபிவிருத்தி வேலைகளை உட்கிடையாக தடுக்கிறது. இச்சட்டம் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது (1987 இல்) அப்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த மலையகத்தவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அவர்கள் அப்பிரிவினூடாக தோட்டப் பிரதேச அபிவிருத்திகளுக்கு போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமன்றி அடுத்தவர்களின் அபிப்பிராயங்களுக்கு செவிசாய்க்காமை பண்பாட்டின் வெளிப்பாடுமாகும்.

அடுத்தவர்கள் சரியான கருத்துக்களை முன்வைத்தாலும் அதனை பொது மக்கள் நன்மை கருதி கூட ஏற்காத தான்தோன்றித்தனமே அவர்களிடம் காணப்பட்டது. அந்த மலையக எம்.பிக்களிடம் 1986, 1989 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பிரசாவுரிமை சட்டத்திருத்தங்கள் பற்றிக்கூட தெரிவிக்கவில்லை.

மலையகப் பகுதிகளில் மூன்று அல்லது நான்கு பிரதேச சபைகள் மலையகத்தில் உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது. தலைவர்கள், பிரதித் தலைவர்களாக மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் தோட்டப் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள அவர்களுக்கு பிரதேச சபைகளின் கீழ் அதிகாரமோ ஆணையோ கிடையாது.

தோட்டப் பகுதிகளின் சில இடங்களில் பாதைகளும், பாலங்களதும் பிரதேச சபைகளுக்கூடாக அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்காக செலவழிக்கப்பட்ட நிதி அவற்றுக்கென ஒதுக்கப்பட்டதல்ல. மாறாக வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும்.

இந்த நிலைமை மாற வேண்டுமெனின் பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதாவது தோட்டப் பகுதிகளை பிரதேச சபை அபிவிருத்தி திட்டங்களிலிருந்து உட்கிடையான ஒதுக்க வைத்திருக்கும் பிரிவு 33 ஐயும் அதனோடு தொடர்புடைய பிரிவுகளையும் திருத்த வேண்டும். தோட்டப் பகுதிகளிலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்றும் தோட்டக் குடியிருப்புகளை சட்டபூர்வமான மக்கள் குடியிருப்புகளில் ஒன்றான அங்கீகரிப்பதாகவும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

தோட்டக் குடியிருப்புகளை இலங்கையின் குடியிருப்புகளில் ஒன்றாக அங்கீகரித்தால் அபிவிருத்திகளை ஈர்த்துக் கொள்ளும் தகுதி மலையகத் தமிழ் மக்களுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் மலையகத் தமிழ், மக்கள் ஏனைய பிரஜைகளுக்கு அல்லது சமூகங்களுக்கு சமமாக நடத்தப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.

வாக்களித்து தாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் ஆளும் பிரதேச சபைகளின் பயனாளிகளாக தாங்கள் அங்கீகரிக்கப்படாவிட்டால் தங்களது வாக்குரிமையால் என்ன என்பதுடன் வாக்குரிமை இருந்தும் இல்லாத நிலையில் இருப்பதாக மலையகத் தமிழ் மக்கள் விசனமடைந்துள்ளனர்.
இலங்கையின் அரசியல் பிரதிநிதித்துவ முறையில் உள்ளூராட்சி சபைகளை மக்களுடன் நேரடி தொடர்புடைய மக்கள் நாளாந்த தேவைகளுக்கான நாளாந்த அலுவல்களுக்கான சபையாக இருக்கின்றன.

தோட்டக் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்படவில்லை. (அவை நகரக் குடியிருப்புகளாக இருக்க முடியாது) அவ்வாறு கிராமக் குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும் வேறு விசேடமான இன்னொரு குடியிடிருப்பாகவாவது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மலையகத் தமிழ் மக்களுக்கென தோட்ட உட்கட்டமைப்பு என்ற அமைச்சொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இல்லாமலாக்கப்பட்டது. தற்போது புதிய கிராமங்கள் உருவாக்குதல் அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதன் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திணைக்களங்கள் எதுவும் இல்லை. அவ்வமைச்சு காணி, வீடமைப்பு போன்ற அமைச்சுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டின் ஏனைய மக்களை ஏறக்குறைய நூறாண்டு காலத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதனால் இச்சமூகத்திற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாகிறது.

அந்த அடிப்படையில் புதிய கிராமங்கள் உருவாக்கும் அமைச்சு சுதந்திரமாக செயற்படுவதற்கு அதிகாரங்களும், திணைக்களங்களும், நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
அதனூடாக மலையகத் தமிழ் மக்களுக்கு சொந்த வீடுகள், காணிகள் கிடைப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டு உட்கட்டமைப்புகளுடன் பிரத்தியேக குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெருந்தோட்டங்களின் பெரும்பாலானவை தனியார் கம்பெனிகளால் முகாமை செயற்படுகின்றன. இதனால் தோட்ட எல்லைக்குள் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதை கம்பெனிகள் நிர்வாகங்கள் அதிகமாக விரும்பவில்லை. அவை தோட்ட குடியிருப்புகள், தோட்ட உட்கட்டமைப்பு போன்றன அவற்றின் பிரத்தியேக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென விரும்புகின்றன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் தோட்டக்காணிகளின் பூரணமான சொந்தம் அல்லது உரித்து தோட்டக் கம்பெனிகளிடமே இருக்கின்றன. நீண்டகால குத்தகைக்கு அல்லது முகாமை செய்வதற்கு தோட்டங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள கம்பெனிகள் இந்நாட்டின் இன்னொரு மக்கள் பிரிவினரான மலையகத்தில் மக்களுக்கு பிரதேச சபைகளினூடான அபிவிருத்திகள் சென்றடைவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று மலையகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளின் அபிவிருத்திகள் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

ஆகவே பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உரிய திருத்தங்களை செய்து மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ, பொருளாதார சமூக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நன்றி- தினகரன்

Tuesday, December 22, 2015

சம்பள உயர்வு வழங்காவிடின் தோட்டங்களை கையளியுங்கள்

தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்க்ஷ்மன் கிரியெல்ல தோட்ட கம்பனிகளை வலியுறுத்தியுள்ளார்.
பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் லக்க்ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில் நடைபெற்றது. இங்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட அமைச்சர், சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
புதிய அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கமைய அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கியிருக்கிறோம்.இவர்களுக்கு மட்டுமன்று நாட்டிற்கு அமைதியாக சேவையாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு துரிதமாக  சம்பள உயர்வு வழங்குமாறு தோட்ட கம்பனிகளிடம் வலியுறுத்துகிறேன். இல்லாவிட்டால் சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தெரிவிக்கிறேன். நாம் எந்த சவாலையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சில தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களை நிர்வகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வெள்ளைளைக்காரர்களின் காலத்தில் ஒவ்வொரு கம்பனிக்கும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் வீதமே தோட்டங்களுக்குக்கு இருந்தன.ஆனால் இன்று நிலைமை முற்றாக மாறியிருக்கிறது.
 சில தோட்ட உரிமையாளர்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் காணியிருக்கிறது. சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைக்கின்றனர்.தோட்டங்களினூடாக வருமானம் கிடைக்காவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளியுங்கள்.
 பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப் பேற்க தயாராாக உள்ளனர். அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள். பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது.
தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தோட்ட கம்பனிகளிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருப்பதன் ஊடாக மக்கள் ஆணை குறித்து தெளிவாகிறது.குரோத அரசியலை கைவிட்டு நாட்டை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு சகல அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.