Friday, January 8, 2016

மெத்தகந்த தோட்ட மக்களுக்கு பலவந்தமாக காணிகள்

பலாங்கொடை மெத்தகந்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் அமைத்துகொடுத்தக்கப்படவுள்ள வீடுகளுக்கு தோட்ட நிர்வாகம் காணிகளை ஒதுக்கி கொடுப்பதற்கு முன்வராவிட்டால் அத்தோட்டத்திலே பலவந்தமாக காணிகளை பிரித்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலாங்கொடை பிரதேச செயலாளர் சம்பிக நிரோஷ் தர்மபால, 'மெத்தகந்த  தோட்டத்தில் மண்சரிவால பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் அவர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான போதிய காணிகளை மேற்படி தோட்ட நிர்வாகம் வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க முடியாதுள்ளது' என்றார்.   

'மேற்படி தோட்டத்தில் போதிய காணிகள் கிடைக்குமாக இருந்தால் விரைவில் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும். எனவே காணிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  அவர் கூறினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே  சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'தோட்ட மக்கள்  வியர்வை சிந்தி, அரும்பாடுபட்டு கம்பனிக்கு இலாபத்தை பெற்று கொடுக்கின்றார்கள். ஆபத்தான நிலைமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம்  முன்வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடையூராக உள்ளன. 

குறிப்பாக தோட்ட மக்கள் தமக்கான மலசலகூடங்களை அமைத்துகொள்வதென்றாலும் அதற்கான இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை என நான் அறிந்துகொண்டேன். பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களின் முன்னேற்றத்துக்கு தோட்ட நிர்வாகம் தடையாகவுள்ளது.   தோட்ட மக்கள் குறித்து தோட்ட நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை. இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வராவிட்டால் மக்களால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் என்ற வகையில்,  மெந்தகந்த தோட்ட மக்களுக்கு அந்த தோட்டத்திலே காணிகளை பலவந்தமாக பெற்றுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்' என அவர் கூறினார்.

No comments: