Tuesday, June 28, 2016

தொழிலாளர்கள் அடக்கப்படுவதும் உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் முதலாளித்துவத்தின் சக்தி

முதலாளித்துவம் சக்திபெற்றிருப்பதன் காரணத்தினாலேயே உழைக்கும் வர்க்கத்தினர் அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. நீதி நியாயம், சுகந்திரம் அவர்களுக்கு இல்லாது போகிறது என்று லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் 52 நாடுகளைச் சேர்ந்த 121 பிரதிநிதிகள் கூடி தொழிலாளர்கள் இன்று சர்வதேச ரீதியில் அனுபவித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள இராமநாதன் மாநாடு பற்றி தெரிவக்கையில் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று சகல நாடுகளிலும் தொழிலாளர்கள் நீதி நியாயமின்றி அடக்குமுறை ஆட்சி அமைப்பின் கீழ் உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகின்றனர். இன்று இலங்கையின் சகல துறைகளிலும் குறிப்பாக தோட்டத் தொழில்துறையில் தொழிலாளர்கள் சமயா சமய ஊழியர்களாகவும் கொந்தராத்து முறை தொழிலாளர்களாகவும் வெளியார் உற்பத்தி முறைத் தொழிலாளர்களாகவும் தொழிற்சங்க உரிமைகளை இழந்து போதிய தொழில் வாய்ப்பில்லாமல் உரிய வேதனமின்றி நடத்தப்படுகின்றனர். இன்று உலகளாவிய ரீதியில் இவ்வாறான நிலைமையே மேலோங்கி வருகின்றது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு உலகளாவிய ரீதியில் முதலாளித்துவம் மிகவும் சக்திபெற்று தொழிலாளர் வர்க்கம் வீழ்ச்சிப் பாதையை நோக்கி இழுத்துச் செல்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

ஒரு காலத்தில் தொழிலாளர் வர்க்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்ந்த மேற்கத்திய நாடுகளிலும் கூட தற்போது தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியில் பலமிழந்து தமது உரிமைகளையும் பறிகொடுத்து வருகின்றனர். தொழிலாளர்களுக்குச் சாதகமாக உள்ள சட்டங்கள் மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாற்றியமைத்து தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகளை அபகரிக்கும் நடவடிக்கைகளையே முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. ஆசிய நாடுகளிலும் இந்நிலைமையே பரவியுள்ளது.

எனவே உலகளாவிய ரீதியில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு முதலாளித்துவ ஆட்சி முறைமைக்கு எதிராக போராட தாயார்படுத்தப்பட வேண்டுமெனயும் இதன் மூலமே தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் அதே சமயம் தாம் போராடி வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதெனவும் கூறிய அவர் நமது நாட்டுப் பெருந்தோட்டத் தொழிலாளர் விடயத்தில் இது பொருத்தமானதெனவும் குறிப்பிட்டார்.

No comments: