Tuesday, May 24, 2016

இருப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டோம்

மத்துகம வோகன் தோட்டம் கீழ்ப்பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 14 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறி தோட்ட வைத்தியசாலையில் சென்று தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டபோது “மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புக்களை விட்டு வெளியேறமாட்டோம்” என தோட்டக்குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

2012, 2013, 2014 ஆகிய காலப்பகுதிகளில் இங்கு ஏற்பட்ட மண்சரிவையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து இப்பகுதியில் மேலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு வசித்துவரும் குடும்பங்களை வேறு இடத்துக்கு சென்று குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு 2014ம் ஆண்டு ஜீன் மாதம் கடிதம் மூலம் தோட்ட நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கியிருந்தது.  

இதற்கி­ணங்க 100 நாள் ஆட்சியில் காணி ஒதுக்கப்பட்டு வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டிய பாதுகாப்பான வசதியான இடத்துக்கு மாறாக தோட்ட நிர்வாகம் தெரிவு செய்திருந்த காணியை விரும்பாத குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வீட்டுத்திட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக அமைச்சர்களான பி. திகாம்பரம், மனோகணேசன், வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் பல தடவைகள் கொண்டு வந்தும் நேரில் சந்தித்து எடுத்துக் கூறிய போதிலும் இதுவரை எந்த ஒரு பலனும் கிட்டாது கைவிடப்பட்டு விட்டது.

மீரியபெத்த சம்பவத்தையடுத்து விழிப்படைந்த தோட்ட நிர்வாகம் இங்கு வசித்து வந்த குடும்பங்களை வெளியேற்றி பின்னர் மீண்டும் லயன் குடியிருப்புகளுக்கு திருப்பி அனுப்பியது. தற்பொழுது நிலவி வரும் காலநிலை காரணமாக அச்சமடைந்துள்ள தோட்ட நிர்வாகம் மீண்டும் வெளியேறுமாறு கேட்டுள்ளது.

காலநிலை மோசமடையும் போது வெளியேறு என்று கூறுவதும் காலநிலை வழமைக்குத் திரும்பியதும் மீண்டும் பழைய இடத்துக்கே போ என்று கூறுவதும் வாடிக்கையாகி விட்டது.
எங்களுக்கான வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்தால் வெளியேறுவோம். அல்லாவிடின் மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு மடிந்து போனாலும் பரவாயில்லை. நாங்கள் வெளியேறப் போவதில்லை. மண்சரிவு ஏற்­பட்டு புதையுண்டு போகும் நிலை ஏற்படுமேயானால் அதற்கான முழுப் பொறுப்பையும் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், ட்ரஸ்ட் நிறுவனம், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் மலையக தலைவர்களுமே ஏற்க வேண்டும்.

எனவே அத்தகையதொரு துரதிர்ஷ்ட நிலை ஏற்படும் முன்னர் மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் இது குறித்து விசேட கவனம் செலுத்தி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என ஆபத்தை எதிர்நோக்கியுள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: