Tuesday, May 24, 2016

தோட்டத் தொழிலாளர்கள் 2500 ரூபாவுக்கு உரித்துடையவர்கள் அல்ல

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபாய் சம்பள உயர்வுக்கு உரி;த்துடையவர்களாக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி. இராஜதுரை இது பற்றி தெரிந்திருந்தும் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏமாற்று வித்தையாகும் என்று தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது. இதனால் சொல்லொணா துன்ப துயரங்களை தொழிலார்கள் அனுபவித்து வருகின்றார்கள் இந்நிலையில் இவர்களுக்குரிய சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல் தொழிற்சங்கவாதிகளின் கடமையாகும். 

தொழிலாளர்களின் நலன்கருதி அரசியல் தொழிற்சங்க பேதம் பாராது இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனினும் இங்கு சில அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. 

2016ம் ஆண்டின் கைத்தொழில் பிணக்குகள் சட்டம் மிகவும் முக்கியமானது. இச்சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை ஒன்று இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபா சம்பள உயர்வுக்கு உரித்துடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது. 

எனவே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தெரிந்திருந்தும் ஒப்பந்தம் இல்லாமல் போக வேண்டுமென்றால் இரு சாராரில் ஒரு சாரார் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். எனினும் நிலைமை இன்னும் அவ்வாறு அமையவில்லை. கூட்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் மேலாக காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மற்றும் பிரதான கட்சிகளும் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து வருகின்றன. இதனடிப்படையில் விரைவில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டு ஒப்பந்தம் நடைமுறை இல்லையென்று கூறிவிட முடியாது 

இதேவேளை குறைந்தபட்ச வேதன சட்டத்திற்கமைய தொழிலாளர்களுக்கு தொழில் தருநர்களால் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வேதனத் தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதனடிப்படையில் குறைந்த பட்ச மாதாந்த வேதனம் பத்தாயிரம் ரூபாய் எனவும் நாள் ஒன்றுக்கான அடிப்படை சம்பளம் 400 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இச்சட்டமும் கூட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது. 

கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்ற கருத்தினை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மையுமாகும்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக காலத்துக்குக் காலம் உரிய சம்பள உயர்வினை பெற்றுக்­கொ­டுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையும் பொறுப்புமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. கூட்டு ஒப்பந்தத்தினை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பதனை விடுத்து நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் அமைச்சு பதவிகளின் ஆளுமையின் ஊடாகவும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினையும் விசேட கொடுப்பனவுகளையும் ஏதேனும் ஒரு வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் முனைதல் வேண்டும். அதைவிடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற முனைவது தவறான விடயமாகும் என்றார். 

No comments: