Monday, November 2, 2015

சம்பள உயர்வு கோரி போராட்டம்

இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாயை பெற்றத்தர வேண்டுமென கோரி,  ஹட்டன், எபோட்சிலி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தினர். இன்று 02-11-2015 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக கண்துடைப்பு வேலைகளை கைவிட்டு மலையக அரசியல்வாதிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இன்று தொழிலாளர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் முயற்சியை கைவிரித்துவிட்டு தொழிலாளர்களின் உணர்வை மதித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
தொழிலாளர்களின் உணர்வை மதிக்காமல் தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள் இழுபறி நிலையில் ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்யையும் முன்னெடுத்து செல்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற செயல்பட வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபாய் சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வை பெற்றுத்தராத பட்சத்தில் தொழிலாளர்களாகிய நாம் தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் “சந்தாப் பணத்தையும் நிறுத்துவோம்” என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தீபாவளியை முன்னிட்டு 15000 ரூபாயை முற்பணமாக தரவேண்டும்.  தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை 7 பேச்சுக்கள் நடைபெற்றுவிட்டன. வாக்களியுங்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம். ஆனால், இதுவரை சம்பள உயர்வு பெற்றுகொடுக்கப்படவில்லை.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயத்தில் தலையிட்டு சம்பள உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல்  8 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம் என தொழிலாளர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.

 தீபாவளியை முன்னிட்டு சம்பளத்தை முன்கூட்டி வழங்கவும்  
எதிர்வரும் 10ஆம் திகதி தீபாவளி என்பதால் பாடசாலை மாணவர்களுக்கு 9ஆம் திகதி விடுமுறை வழங்குமாறும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் இது குறித்து தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானுமுனிப்பிரிய மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோரின் கவனத்துக்குக் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளத்தை முன்கூட்டி பெற்றுக்கொடுக்குமாறு, இரத்தினபுரி தமிழ் ஆசிரியர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  
சித்திரைத் திருநாளையொட்டி அரசாங்க சேவையாளர்களுக்கு மாதாந்த சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படுவது போன்று, தமிழர்களின் முக்கிய திருநாளான தீபாவளி திருநாளை முன்னிட்டும் அரசாங்க சேவையாளர்களுக்கு முன்கூட்டி சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார் கணபதி இராமச்சந்திரன்  




No comments: