Tuesday, October 20, 2015

மாலை நேரத்தில் விடுமுறை : தொழிலாளர்கள் கோரிக்கை

மலையகத்தில் நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு தொழிற்சங்க அதிகாரிகள் தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு விடுமுறையை பெற்றுகொடுக்க முன்வர வேண்டுமென தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மலையகத்தில் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதாகவும் இடி, மின்னலுக்கு மத்தியில் தாம் மிகுந்த அச்சத்துடன் தொழில்புரிந்து வருவதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் நிலையை கருத்திற்கொண்டு மாலை நேரத்தில் விடுமுறை வழங்குவதாகவும் பல தோட்ட நிர்வாகங்கள் இவ்வாறு தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க முன்வருதில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தேயிலை மலைகளில் கற்பாறைகள் அதிகம் காணப்படுவதால் இவை மழைக் காலங்களில்  சரிந்து விழும் அபாயம் காணப்படுவதுடன்  மண்மேடுகளும் சரிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் மலையகத்தில் பெய்த மழையினாலும் வீசிய காற்றினாலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தனர். அத்தோடு இடி, மின்னல் தாக்கத்தினால் சிலர் தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.எனவே, இவற்றை கருத்தில் கொண்டு மலைக்காலங்களில் மாலை நேரத்தில் விடுறை வழங்குவதற்கான ஏற்பாடுகளை உரியவர்கள் மேற்கொள்ள வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

No comments: