Wednesday, July 8, 2015

தேயிலை தொழிற்சாலைகள் இயங்கவில்லை

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதால் 23 பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் தோட்ட அதிகாரிகள் வேலைக்கு செல்லாததால் தொழிற்சாலைகள் தற்காலிகமாக இயங்காமல் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் குறைவான கொழுந்து பறிப்பதனால் கம்பனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோட்டங்களில் பணிபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்களை தொழிலில் ஈடுபட வேண்டாமென முதலாளிமார் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதனையடுத்து தங்களுக்கு மலையக தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தங்களின் பாதுகாப்புக்காக தோட்ட நிர்வாகத்திலிருந்து விலகி கொள்ளப்போவதாகவும் மேற்படி தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் தொடர்ந்தால் வேலை வழங்க முடியாது

தொழிலாளர்களால் 1000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டமானது சட்டத்துக்கு முரணானது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் வேலை வழங்க முடியாத நிலை ஏற்படுமென்பதுடன் சம்பளம் வழங்க முடியாதுபோகுமென 21 பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் பேச்சாளர் முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட பிரிவு பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சத்தியாக்கிரகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்ககோரி தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இன்று (08-07-2015) சத்தியாகிர போராட்டத்தை முன்னெடுத்தனர். தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments: