Sunday, June 21, 2015

மலையகத்தில் கடும் மழை இயல்புநிலை பாதிப்பு


மத்திய மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால் இரண்டு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் முற்றாக சேதமடைந்துவிட்டது. அப்பிரதேசமெங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதாக அப்பிரதேச அனர்;த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வாகன சாரதிகள் மற்றும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட செயலாளரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பயணிகள் ரயில் ஹட்டன்- ரொசல்ல என்ற புகையிரத நிலையத்துக்கு இடையில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. குறிப்பாக ரயில் எஞ்சின் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, நுவரெலியா நகருக்கு அருகிலுள்ள கலுகெல, பொனவிஸ்டா, கெலேகால, சாந்திபுரம், மீப்பிலிமான, சீத்தாஎலிய உட்பட்ட கிராமங்களில் வீசிய பலத்த காற்றினால் வீட்டுக் கூரைகள் பெரும் சேதமடைதுள்ளதுடன் பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் விவசாய உற்பத்திகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரக்கறி தோட்டங்களில் மழை நீர் நிரம்பி யுள்ளதாலும் மண்சரிவுகள் ஏற்பட்டதாலும் மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் தற்போது குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மழை மற்றும் காற்று அதிகரித்து காணப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளதாக சுற்றுலா துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments: