Friday, November 14, 2014

மலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்போம்


மலையகத்தில் பதுளை மீரியபெத்த என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற மண்சரிவினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கரங்களை நீட்டும் முகமாகவும், மரணித்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிக்காகவும் இந்திய வம்சாவழித் இலங்கைத் தமிழர் (SLTCIO) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பொன்று எனக்கு கிடைத்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் இந்த உழைக்கும் மக்களின் நலன்களில் நீண்ட காலமாகவே எனக்கிருந்த ஈடுபாடு என்னை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை இழுத்துச் சென்றது.
 
புலம் பெயர் தேசம் ஒன்றில் முதல்? தடவையாக மலையக மக்களின் நிகழ்வு ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரநிதிகள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் பேச்சுக்களில் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நிதிகளாகவும், பொருட்களாகவும் சேர்த்து அனுப்புதல் என்பதுவும் இந்த நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்தது. மேலும் மலையக மக்களின் பிரச்சனையை மலையக மக்கள் தவிர்ந்த ஏனை வடக்கு, கிழக்கு மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு ஏற்பாடாகவும் இதனைப் பார்க்கலாம் என்ற கருத்துக்களையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.
இந்த கூட்டதை ஒழுங்கு செய்தவர்கள் யாவரும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால், இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கை முறைகளுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு அந்த வர்க்க குணாம்சத்துடன் வாழ்க்கை நடாத்துகின்றனர் என்ற செயற்பாடுகளே இங்கு மேலோங்கி இருந்தது. மக்களின் துயரத்தை பகிரும் ஒரு நிகழ்வில் ஒரு கொண்டாட்டத் தன்மை சற்று தலைதூக்கியிருந்தது என் பார்வையில் வருந்தத்தக்கதாக உணரப்பட்டது. இது எனது மனவலையிலிருந்து இருந்து உதிர்ந்தவைதான். வேறு எந்த குறை கூறும் நோக்கம் கொண்டு இங்கு நான் இதனைப் பதிவு செய்யவில்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடையே என்னையொத்த மனவலையின் பிரதி பலிப்பு இருந்ததை நான் உணர்ந்தும் கொண்டேன். இது திட்டமிட்டு நடைபெற்ற தவறு அல்ல? மாறாக ஏதேச்சையாக நடைபெற்ற தவறு என்ற எண்ணமும் என் மனவலையில் போராட்டமாக இன்றும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தமிழ் (பேசும்) மக்கள் என்ற உணர்வலைகள் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைவது என்ற இனத்துவ உணர்வுகளே மேலோங்கியிருக்கக் காணப்பட்டது. இலங்கையின் தலமைத்துவ வர்க்கமான இந்த அடிமட்ட உழைக்கும் மக்களின் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவம் இங்கே சற்றே மறைந்திருந்தது காணக் கூடியதாக இருந்தது. மேலும் வடக்கு, கிழக்கில் இந்த உழைக்கும் மக்களின் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் நாடு கடந்த தமிழீழம், மாநகர கவுன்சிலர், தேர்தலில் எதிர்காலத்தில் நிற்கப் போகின்றவர்கள் என்ற மேற்தட்டு வர்க்க செயற்பாட்டாளர்களே இவர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது இவர்களின் வர்க்கக் அடிப்படையிலான ஐக்கிய முன்னணித் தந்திரோபாயக் கண்ணோட்டத்தில் உள்ள தப்புத் தாளங்களையே எடுத்தியம்பி நின்றன.
இந்த அமைப்பின் பெரும்பாலான செயற்பாட்டாளர்களிடம் இருந்த ‘வெள்ளந்தித்தனம்’ மலையக உழைக்கும் அடிமட்ட மக்களுக்கான விடுதலைக்கான நட்புச்சக்திகளை இனம் காணுவதில் தவறான போக்கிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக என்னால் உணரப்பட்டது. இந்நிகழ்வின் பிரமுகர்களாக மீண்டும், மீண்டும் (கவனிக்க மீண்டும் மீண்டும்)) இனம் காட்ட பேசப்பட்ட பேச்சுக்கள், செயற்பாடுகள் போன்றவற்றின் வெளிப்படும் சேதியின் அடிப்படையில் இதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். நம்பிக்கையுடன் பலகாலமாக என்னால் அவதானிக்கப்பட்டு வந்த மலையக சகாக்கள் சிலர் பேச்சுக்கள் கூட ஏமாற்றம் அழிப்பதாகவே இருந்தது. காரணம் இவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரமுகர்கள் என்று அதிகமாக முதன்மைப்படுத்தி சுட்டிக் காட்டி பேசிய பேச்சுக்கள் ஆகும். இந்த நிகழ்விற்கு பெருமை சேர்ப்பவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துவதில் இவர்கள் இந்த பிரமுகர்களிடம் தொங்கிக்கொண்டு இருப்பதாகவே இவர்கள் தம்மை காட்டிக் கொண்டனர்.

இவர்களின் இந்த பேச்சு, செயற்பாடுகள் ஒரு ஆரோக்கியமான தடங்களாக மலையக பெரும்பான்மை அடிமட்ட மக்களின் விடிவிற்கு அமையப் போவது இல்லை. ஒரு நல்ல முயற்சிற்கான நிகழ்வு சரியான நட்பு சக்திகளை அடையாளப்படுத்தாமல் எங்கேயோ இழுத்துச் செல்லப்படுவது போன்ற உணர்வலையை என்னிடம் இருந்து பிரித்தெடுக்க என்னால் முடியவில்லை என்பதை இங்கு மன வருத்ததுடன் பதிவு செய்ய விருப்புகின்றேன். ஒரு துயர் பகிர்வு நிகழ்வில் ‘யாரும்’ கலந்து கொள்ள அனுமதிப்பது இதற்கான சபை நாகரிகம், மரியாதை என்பது வேறு. மாறாக இவர்களே, இவர்களாலே இந்த துயர் பகிர்வு பெருமை, முழுமை அடைகின்றது என்ற கருத்தியல் அப்படையில் நடந்து கொள்வது வேறு.

மலையக மக்களின் வாழ்க்கைகான சமூகப் புரட்சி வெற்றியளிக்க வேண்டுமாயின் அங்கும், இங்கும் இந்த மக்களின் நலன்களில் உண்மையான அக்கறையுள்ளவர்களின் தலைமைத்துவத்தை உருவாக்கி நண்பர்கள் யார், நட்பு இல்லாத சக்திகள் யார்? என்பதை சரியாக இனம் கண்டு அவர்களுடன் ஐக்கிய முன்னணி அமைத்தல் வேண்டும். புரட்சிகரமாக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த மக்கள் அணிதிரட்டி வழி நடத்தி சரியான நட்பு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு இணைந்து இந்த மக்களின் தலமையில் போராடினால், செயற்பட்டாலே அது சாத்தியம் ஆகும். இதில் மனிதத்துவமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் மாறாக இனம், மொழி, மதம் முன்னிலை பெற்றலால் வேணும் என்றால் உசுப்பேத்தி தேர்தலில் வெற்றி பெற்று தொண்டமான்காளாக வர உதவுமே தவிர இந்த மக்களின் நிரந்தர வடிவிற்கான செயற்பாடாக அமையப் போவதில்லை.
 
என்ன இன்னும் ஒரு ஆறுமுகம், செந்தில்களை மலையகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர் தேசங்கள் எல்லாம் உருவாக்க முடியுமே தவிர மலையக மக்களுக்கான விடிவு கிடைக்க உதவப் போவதில்லை. இந்த நிகழ்வில் உங்களால் முன்னிலைப்படுதப்பட்ட பிரமுகர்கள் மனோகணேசன், விக்னேஸ்வரன் வகையறாக்கள் என்பதை கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உணரப்படக் கூடாது என்ற அக்கறையில் இங்கு இதனைப் பதிவு செய்கின்றேன். இதில் நாங்கள் யாரும் தவறிவிடக் கூடாது என்பதை ஈழவிடுதலைப் போராட்டதின் முடிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம். இந்த துயர் பகிர்வு நிகழ்வுகளில் மேலோங்கி நின்ற தவறான சில விடயங்களை இங்கு பதிவு செய்கின்றேன். இந்நிகழ்வைப் பார்த்தால் அது ‘மௌனிக்கப்பட்டவர்’களின் சாம்பலில் இருந்து புறப்பட விளையும் தவறான நட்பு, நடப்புக்களையே எனக்கு உணர்த்தி நிற்கின்றது.

- சாகரன்-

No comments: