Sunday, August 17, 2014

மாறிவரும் மலையகம்

மலையகம் இன்னும் மாறவில்லை, மாற்றம்பெறவில்லை என கொக்கரிப்பதில் எவ்விதமான நியாயங்களும் யதார்த்தத்தில் இல்லை. மலையகம், ஒவ்வொரு துறைகளிலும் ஏதோவொரு மாற்றத்தை கண்டுகொண்டுதான் இருக்கின்றது.
கல்வி, விளையாட்டு, இலக்கியம், பொருளாதாரம் மற்றும் மலையக மக்களின் வாழ்க்கை முறைமை இவையாவற்றிலும் ஏதோவொரு மாற்றங்கள் ஏற்பட்டுகொண்டுதான் இருக்கின்றன.

மலையக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள். மக்களின் மாற்றம் தங்களுடைய இருப்புக்கு ஆப்பாகிவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

அரசியல் வாதிகளே! மலையகம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது என கூறிகொண்டிருக்கின்றனர்.

மலையக மக்களை படம்பிடித்து காட்டுகின்ற அரச சார்ப்பற்ற நிறுவனங்களும் மலையக மக்களின் மாற்றம் ஏற்படவில்லை என்ற தோரணையிலிருந்து மீளவில்லை எனலாம்.

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானதாக இல்லை. ஆனால். மலையகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் ஆலமர விருட்சமாகவேண்டும் என்பதே, மலையகத்தின் பால் கருணை கொண்டிருக்கின்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.

மதுவுக்கு மலையக மக்கள் அடிமையாகிவிட்டனர் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிகொண்டே செல்கின்றது.

மதுபான சாலைகளை மூடுமாறும் புதிதாக மதுபான சாலைகளை திறக்கவேண்டாம் என்றும் கோரிக்கைகளை விடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற அளவுக்கு மலையக மக்கள் விழிப்படைந்துள்ளனர்.
 நாட்டில் போதைப்பொருட்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்படுகின்ற நிலையில், மலையகத்தில் மது பாவனையின் வீதம் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற முதுமொழிக்கு ஏற்றவகையில், மஸ்கெலியா பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வுகளின் ஊடாக மலையகத்தில் மது பாவனையாளர்களுக்கு  மதுபானம் கசக்கின்ற உண்மை வெளியாகியுள்ளது.

மது தொடர்பில் பல உற்சாகமான அபிப்பிராயத்தை கொண்டிருந்த அந்த மக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி மதுச்சாலைகள் திறப்பதற்கு எதிராக மக்கள், குறிப்பாக வீட்டுச்சுமையை தங்களுடைய தலையில் சுமக்கின்ற பெண்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை மலையகத்தில் அன்றாட செய்தியாகிவிட்டது.

குறிப்பாக ஹட்டன், மஸ்கெலியா, தலவாக்கலை போன்ற பகுதிகளில் மதுபான சாலைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுபாவனைக்கு எதிராகவும் பெண்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவமொன்று பொகவந்தலாவையில் அண்மையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவையில் தற்போது தலைவிரித்தாடுகின்ற சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றே அண்மையில் அங்கு நடத்தப்படவிருந்தது. அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அங்குள்ள மதுபான சாலைகளுக்கு எதிராக நடத்தப்படவிருப்பதாக கூறியே பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மலையகத்தில் இருக்கின்ற மதுபானசாலைகளில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடைய அடியாட்களுக்கும் சொந்தமானவையாகும்.

அவ்வாறிருக்கின்ற நிலையில், மதுபானசாலைகளுக்கு எதிராகவும் மதுபாவனைக்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுக்கின்றார்கள் என்றால் அவர்களுடைய துணிச்சலை நாமெல்லாம் மதிக்கவேண்டும்.

மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள்

அந்த நினைப்பு மலையக மக்களிடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொண்டிருக்கின்றது.

மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்துக்கு உற்சாகம் பிறக்கிறது.

மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது என்பது மட்டுமே ஆய்வுகளிலிருந்து வெளியான உண்மையாகும்.

மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் 'மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்' என்றும் கூறுகிறது. மது, உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், ஏழைகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே, மதுவுக்;கு அடிமையாகின்றவர்கள் என புள்ளி விவரங்கள் கூறுகிறன.

குடிக்க ஆரம்பித்தவர்கள் மதுவுக்;கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். குடிப் பழக்கம் உள்ள வீட்டுக் இளைஞர்களும் நாளடைவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.

சரி மதுவால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்தோமேயானால், மது மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.

மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

மது, வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது. உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.

மது அருந்துபவர்களுக்கு மன நோய்கள் பல ஏற்பட்டு மன நோயாளிகளாகி விடும் வாய்ப்பு அதிகமுண்டு. மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தஇந்நிலையில் மலையகத்தில் மதுவொழிப்பு வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ள தொண்டர்;கள், மஸ்கெலியா பகுதியிலுள்ள சில தோட்டங்களில் மது அருந்துவோர், இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவிகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து வெளியான தகவல்கள், மலையக மக்கள் மதுபிரியர்கள் இல்லை என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.

மாற்றத்தின்  விரும்பி  என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட மஸ்கெலியாவைச் சேர்ந்த  நிதர்ஷனா செல்வதுரை என்பவர், மேற்கொண்ட கள ஆய்வுகளிலிருந்து பல்வேறு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மலையகத்தில் அதிகரித்துள்ள மதுபாவனையே மலையகம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

மதுவினால் தான் மலையகத்தில் வறுமை குடி கொண்டுள்ளது. மலையகத்தில் மதுபானம் அருந்துபவர்கள்  அதிகரித்து வருகின்றனர்  என்றெல்லாம் செய்தி வெளியாகியது.

இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து மலையகத்தை விடுவித்து பார்ப்பதே நல்லுள்ளங்களில் நோக்கமாக இருந்தது.

எனினும், மலையகத்தில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறுவது  மதுபானங்களை தயாரிக்கும் கம்பனிகளுக்கு விலையில்லா விளம்பரமாக அமைகின்றது எனலாம்.

போதைக்கு முற்றுப்புள்ளி என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் மது பாவனையில் கடந்த இரண்டு வருடங்களாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது  ஆய்வுகளிலிருந்து தெளிவாகின்றது.

நாடளாவிய ரீதியில் 2012ஆம் ஆண்டு 55 உரிமங்களும் 2013ஆம் ஆண்டு 62 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. 2004ஆம் ஆண்டு 402 உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

செறிவு கூடிய மதுபானங்கள் 2012ஆம் ஆண்டு 49.7 மில்லியன் லீற்றரும், 2013ஆம் ஆண்டு 43.3 மில்லியன் லீற்றருமே உற்பத்தி செய்யப்பட்டன.
தானிய மதுபானம் (செறிவு குறைந்தது) 2012ஆம் ஆண்டு 99.3 மில்லியன் லீற்றரும் 2013ஆம் ஆண்டு 120.2 லீற்றருமே உற்பத்தி செய்யப்பட்ட என்று கலால் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

மதுபானத்தை அருந்தும்; அளவிலும், தொகையிலும் மாத்திரமே உயர்ச்சி அல்லது வீழ்ச்சியை நாம் கணித்து கொண்டிருக்கின்றோம். மதுபானத்தை பற்றி இளைஞர், யுவதிகள் என்ன நினைக்கின்றார்கள்,  உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளின் நிலை என்ன? மதுபானம்  பற்றி சிறுவர்கள் மத்தியில் இருக்கின்ற நிலைப்பாடுகள்? என்பன பற்றி நாம் சற்று சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

தோட்ட புறங்களில்  சமூக  இடையீட்டாளராக தொழில் புரிந்து கொண்டிருக்கும் என்னால் சில மாற்றங்களை  தோட்ட புறங்களில் கண்டு உணரக் கூடியதாக இருக்கின்றது.

மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள சில  தோட்டங்களில்  கடந்த ஜூன் மாதம் செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து எண்ணங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆரம்ப காலங்களில் ஆண்கள் மத்தியில் இருந்த ஒரு மூட நம்பிக்கை, மதுபானத்தை குடித்தால் உடல் வலியை போக்கும், உடலில் உள்ள சோர்வு  போகும், மதுபானம் உற்சாகம்  கொடுக்கும் என்றொரு கதையாகும்.

ஆனால், இந்த கேள்விகளை 50  ஆண்களிடம் தொடுத்தபோது 15 ஆண்கள் மாத்திரமே இம் மூட நம்பிக்கைகள் ஏற்றுக்கொள்ள  கூடியது என்று  ஒத்துக்கொண்டனர். மிகுதியானவர்கள், இக் கூற்றுக்கள் யாவும் வெறும் மூட நம்பிக்கையே அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

மதுபானம் குடிப்பதால் உடல் வலி போய் உற்சாகத்தை உடலுக்கு ஒருபோது கொடுக்காது  என்று விடையளித்தனர். கிட்டத்தட்ட 70 வீதமான  ஆண்கள் மதுபானத்தின் மீது கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை  துளியும் நம்பவில்லை.

இது  தோட்டபுறங்களில் உழைக்கும்  ஆண்களின் கருத்து என்றாலும், தோட்டபுற பெண்கள், இளைஞர், யுவதிகள், சிறுவர்களின் எண்ணங்களில்  மாற்றம்  மேலும் ஆய்வின் சுவாரஸ்யத்தை  அதிகரிக்ககூடியதாகவே இருந்தது.   

இளைஞர்கள்,  கூலித் தொழில் செய்யும் இளைஞர்கள், மேற்படிப்பை தொடர்வோர்  போன்ற சில தோட்டங்களில் வசிக்கும்  இளைஞர்களிடம்  சாராயம் பற்றி எவ்வாறான கருத்து நிலவுகிறது என்பதை  தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தமை காரணமாக அவர்களிடம் எங்களது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மதுபானத்தை அருந்தினால் கவலை தீரும். சந்தோஷத்தை   வெளிப்படுத்த மதுபானத்தை அருந்த வேண்டும்; என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த இளைஞர் கூட்டம் இப்பொழுது  தோட்டப்புறங்களில் அழிந்து வருகின்றது என்ற உண்மை இவர்களின் பதில்களில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. 

நாம் சந்தித்த 60  இளைஞர்களில் 08 பேர்  மாத்திரமே மேற்குறிப்பிட்ட கூற்றுக்களை ஏற்றுக்கொண்டனர். மிகுதி 52 இளைஞர்களும்  இல்லை  அக்கூற்றுக்கள் எம்மை ஏமாற்ற முட்டாள்களினால்  உருவாக்கப்பட்ட கூற்றுக்கள், அவை பொய்யானவை அவற்றை  ஏற்றுக்கொள்ள முடியாது  என பதிலளித்தனர்.

அது மட்டுமல்ல, வித்தியாசமான வடிவங்களில், ஈர்க்கப்படும் வகையில் மதுபான நிறுவங்கள்  வெளியிட்ட மதுபான போத்தல்கள்  எம்மை போன்ற இளைஞர்களை ஏமாற்ற போட்ட அலங்காரம் என்றும் அவ் இளைஞர்கள் உணர்ந்து கூறினார்கள்.

சில காலங்களுக்கு  முன்பு இளம் பெண்களை ஈர்க்கவேண்டுமானால் போதையில் மிதக்கவேண்டும் என்று  காதில் பூச்சுற்றிக்கொண்டிருந்த   ஆண்களை பார்த்து இளம் பெண்கள் கேலி செய்கின்றனர்.

மது அருதுகின்ற   இளைஞர்களை பார்த்து  நீங்கள் கிழவன் போல இருக்கின்றீர்கள், உங்கள் முகம்  அவலட்சணமான தோற்றத்தை  ஒத்ததாக இருக்கின்றது, கண்கள் சிவந்து  அசிங்கமாக இருக்கின்றது. உங்கள் மத்தியில் துர்நாற்றம் வீசுகிறது, சிரிக்காதீர்கள்! உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்றெல்லாம் கூறி கேலி செய்து சிரிக்கின்றனர். இவ்வாறான  ஆண்களை  கண்டு கொள்ளாமல் செல்கின்ற பெண்களும் இல்லாமல் இல்லை.

மதுபானத்தை பயன்படுத்துவதனால் செலவு அதிகம், வறுமைக்கு வழிவகுக்கின்றது என்று   அனைவரும்  தோட்டபுறங்களை பார்த்து கூறிக்கொண்டிருக்கும்  நிலையில், தோட்டங்களில் கல்வி கற்கும் சிறுவர்கள் மதுபானம் அருந்துகின்ற தங்களுடைய  தந்தைமார்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர்.

30 வீடுகளில் 20 வீடுகளில் சிறுவர்கள் மதுபானத்துக்காக செலவிடும் கணக்கை எழுதி  அக்கணக்கை வீட்டில் காட்சிப்படுத்துகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு வீடுகளில் 'சந்தோஷ நாட்காட்டி' தயாரித்து காட்சிபடுத்துகின்றனர். 

கணவன் போதையில் வந்தால் தன்னை அடிப்பார் அந்த நேரத்தில் எதுவுமே பேச கூடாது, போதையில் இருக்கும் போது அவரிடத்தில் மிகவும் பணிவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்த பெண்கள் கூட்டமல்ல இப்பொழுது  தோட்டப்புறத்தில் இல்லை.

அவையெல்லாம் எம்மை ஏமாற்ற சொல்லி கொண்டிருந்த  பொய்கள், எங்களிடம்  வீரத்தை காட்டும் ஆண்கள் ஏன் பொலிஸ் காரர்களை கண்டால் மாத்திரம் தலையை சொறிந்து நல்லவர்கள் போல நடிக்கின்றாகள்? அதிலிருந்து தெரியவில்லையா மதுபானம் அருந்தும் கணவன்மார்கள் எம்மிடம் காட்டுவது பொய் வீரம் என்று, இனியும் நாங்கள் அந்த  பொய் நடிப்புக்கு ஏமாற மாட்டோம்  என தோட்டப்புற பெண்கள் தைரியமாக கூறுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'மவுசாகலை'  தோட்டத்தில் திறக்கவிருந்த சாராய பாரை திறக்கவிடாமல்   போராட்டம் செய்து  தடுத்ததும் இதே தோட்டத்து மக்கள் தான்.

இப்பொழுதும் பாடசாலைகளுக்கு மத்தியில் இருக்கும் மதுபான சாலைகளை அகற்ற அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து கடிதங்கள் எழுதிவருகின்றனர்.

'புத்தர் பூமி' என்று வர்ணிக்கும் பிரதேசங்களில் காணப்படும்  அலங்கரிக்கப்பட்ட மதுபான சாலைகளை அகற்றக்கோரி  அரசியல் தலைவர்களுக்கு  அழுத்தம் கொடுத்து கோரிக்கை கடிதங்களை எழுதுகின்றனர்.

எம்மால் காணக்கூடிய மாற்றங்களையும் வெளிக்கொணர்ந்து  உங்கள் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தினால் மது அருந்துவோராயும் மதுபான சாலைகள் திறப்பதையும் முறியடிக்கலாம்.

மதுவை பருகுவதற்கு அல்லது அடிமையாவதற்கு துடிக்கின்றவர்களுக்கு மேற்கூறப்பட்ட விடயங்கள் ஒரு படிப்பினையாக இருந்தாலும் மதுவினால் அடிமையானவர்களை அவற்றிலிருந்து மீட்டுவிடலாம்.

ஹோமியோபதி மருத்துவமானது மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும்.

மதுவுக்கு அடிமை என்பது உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல. மனரீதியான, சமூக ரீதியான பிரச்சனையாகும். ஆகவே, இவர்களை குணமாக்க உளவியல் ரீதியாகவும் அணுக வேண்டியது அவசியம்.

அந்த வகையில் ஹோமியோபதி மருந்துகள் உடலில் மதுவினால் உண்டான நலக்கேடுகளை சீர்படுத்துவதோடு மனரீதியான தூண்டுதல்களையும் சரி செய்து நல்வாழ்வுப்படுத்த உதவுகிறது.

நோய் வந்ததன் பின்னர் அல்லறுவதனை விடவும் வருமுன் காப்பதே சிறந்தது என்று அறிஞர்களின் அறிவுரைகளை ஞாபக்கப்படுத்திகொள்வது எமக்கெல்லாம் சிறந்ததாகவே அமையும்.No comments: