Tuesday, April 22, 2014

வேலைக்காரி என்பதற்குப் பதிலாக “வீட்டு வேலை தொழிலாளர்”

இலங்கையின் சட்ட ஆவணங்களிலிருந்து “வேலைக்காரி” என்ற சொல்லை அகற்றி “வீட்டு வேலை தொழிலாளர் “ என்ற சொல் பதத்தினை உட்புகுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேனகா கந்தசாமி கண்டி ஈ.எல் சேனநாயக்கா சிறுவர் நூலகத்தில் இடம்பெற்ற வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் மூன்றாவது வருட கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
 
மேனகா கந்தசாமி அங்கு மேலும் தெரிவிக்கையில் அணி திரட்ட முடியாத தொழிலாளர்களாக ஒரு காலத்தில் இருந்த  வீட்டு வேலை தொழிலாளர்கள், இலங்கை செங்கொடிச் சங்கம், செங்கொடி சங்க மாதர்ப்பிரிவு, மற்றும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக அது ஒரு தொழிற் சங்கமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

எமது சங்கம் பதிவு செய்யப்பட்டது மட்டும் போதாது. அதன் மூலம் உரிமைகளை பெறுவதற்கு முன் எமக்குரிய கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். நேரத்திற்கு வேலைக்கு செல்லுதல், நாணயம் நம்பிக்கைகளை பேணுதல் போன்ற நற்பன்புகளையும் எமது சேவை நிபந்தனைகளையும் சரியான முறையில் நிறைவேற்றிய பின் எமது உரிமைகளுக்காக போராடினால் மட்டுமே இச்சங்கம் நிலைத்து நிற்க முடியும். இல்லா விட்டால் மீண்டும் அணி திரட்ட முடியாத ஒரு அமைப்பாகவே இது மாறிவிடும்.

அடுத்த கூட்டம் நடைபெறும் போது, சட்ட ஆவனங்களில் 'வேலைக்காரி' என்ற சொல்லுக்கு பதில் 'வீட்டு வேலை தொழிலாளி' என்ற பதத்தை உட்படுத்தியவர்களாக இக்கூட்டம் நடை பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். என்றார்
 
வீட்டு வேலை தொழிலாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் தொழிலாளத் என்ற அடிப்படையில் எமக்கும் உரிமைகள் உண்டு.

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அறிவு திறமை, சட்ட ஒழுங்குகள் என்பன முக்கியமாகத் தேவை. அந்த அடிப்படையில் எமது சங்கம் அறிவு, திறன் என்பவற்றை வளர்க்க உதவுவதுடன் சட்டம் தொடர்பான விடயங்களை கையாளவும் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்
 
இவ் வைபவத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னால் பிரதி தொழில் ஆணையாளருமான எஸ்.ஜீ.சூரியாரச்சி தொழிலாளர் நலன் காக்க சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் சட்ட ஏற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் சட்டத்தால் பெற முடியாத உரிமைகளை கூட தத்தமது எஜமானர்களின் மனதை கவர்வதன் மூலம் சலுகைகளாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாளர் பிரச்சினைகளை கையாள்வதற்கு மாவட்ட தொழிலாளர் காரியாலயங்களுக்கு மேலதிகமாக உப காரியாலயங்களும் உள்ளன. இவற்றில் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
 
இலங்கை குற்றவியல் சட்ட கோவையின்படி பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்;வைப்பெற சிறுவர் மற்றம் மகளிர் பிரிவுகள் பொலிஸ் நிலையங்கள் தோரும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமும் தேவையான உதவிகளை பெறலாம் என்றார்.

No comments: