Thursday, February 24, 2011

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ 500 ஆக உயர்த்ப்பட வேண்டும்- மனோ கணேசன்



தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 285 ரூபாய் இன்று வழங்கப்படுகின்றது. இந்த அடிப்படை சம்பளம் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு பிறகு 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். இதுவே எமது மலையக தமிழ் கூட்டமைப்பின் முதன்மை கோரிக்கையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ராகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்; உரையாற்றியபோது தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று 285 ரூபாய் நாட்சம்பளமாக வழங்கப்படுகின்றது. இந்த தொகை 2009ம் வருடம் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதாகும். கடந்த இரண்டு வருடங்களில் விலைவாசி வானளாவ உயர்ந்து விட்டது. அத்தியாவசிய உணவு பொருட்களான மாவு, அரிசி, சீனி, தேங்காய் விலைகள் இரண்டிலிருந்து, மூன்று மடங்குவரை உயர்ந்துவிட்டன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் இன்னும் 285 ரூபாய்தான். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச அடிப்படை சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டேயாக வேண்டும்.

கடந்தமுறை சம்பளம் 405 ரூபாய் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடிப்படை சம்பளமாக 285 ரூபாவே கிடைத்துவந்தது. மிகுதி 120 ரூபாய் வேலைக்கு சமூகமளிக்கும் நாட்களையும், பறிக்கப்படும் கொழுந்து நிறையையும் சார்ந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டன. இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு தொகை நடைமுறை காரணங்களினால் பொரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவேதான் அடிப்படை சம்பளத்தை 285 ரூபாயிலிருந்து 500 ரூபாவாக உயர்த்துமாறு நாம் கோருகிறோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் இன்று மக்கள் முன்னால் வந்து வாக்குகளை கோருவதற்கு முன்னர் சம்பளத்தை உயர்த்தவேண்டும். சம்பள பேச்சுவார்த்தையை கூட்டு ஒப்பந்தம் மார்ச் 30 திகதிக்கு பிறகு காலாவதியான பின்னர்தான் நடத்தவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. உண்மையில் இந்த பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டு, இன்று முடிவுக்கு வந்திருக்கவேண்டும். தேர்தல் நடக்கும்வரை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காமல் காலம் கடத்துவது அரசியல் நோக்கம் கொண்டதாகும். தேர்தலுக்கு பிறகு 25 ரூபாவை உயர்த்திவிட்டு சம்பள உயர்வு வழங்கிவிட்டோம் என்று சொல்லும் நிலைமை ஏற்படக்கூடாது.

No comments: