Sunday, September 6, 2009

தலைவர்கள் ஒன்றுபட்டுத் தொழிலாளரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப் பெறாமையினால் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதலான இலாபத்தினை பெற்றுக் கொடுக்கும் தொழில் என்றால் அது தேயிலைப் பயிர்ச் செய்கையாகும்.
ஆனாலும் இத்தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்புக்கு ஏற்ற வகையில் சம்பள உயர்வினைக் கேட்கும் போது தோட்டங்களை நிர்வகிக்கும் நிர்வாகங்கள் அதனை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றன.
இதற்குப் பல்வேறு காரணங்களையும் காட்டுகின்றனர்.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை பறித்தல், மரங்களை வெட்டுதல், கவாத்து வெட்டுதல், மானாபுல் வெட்டுதல், புல்லூப் பிடுங்குதல், மருந்து தெளித்தல், கான்வெட்டுதல், தவானையைப் பராமரித்தல், முள்ளுக்குத்துதல், தேயிலை மரம் பிடுங்குதல், தேயிலைத் தொழிற்சாலை வேலை என இன்னும் பல வேலைகளைத் தமது முழு சக்தியையும் பிரயோகித்துச் செய்கின்றனர்.
இவர்களுக்கும் குறைந்த சம்பளத்தினை வழங்குவது கொடுமைதான். இவ்வாறான நிலையில் சிறிய வருமானத்தினைப் பெறும் தோட்டப்புற மக்கள் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை நகரப்புறங்களுக்குத் தொழில் தேடி செல்லும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் சிறார்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அவர்களின் கல்வி வளர்ச்சியும் தடைப்படுகின்றது. மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது குடும்ப வாழ்க்கையை நடாத்த எத்தனிக்கும் போது வறுமை நிலை தடையாக இருக்கின்றது. இந்நிலைமையில் அவர்கள் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் போஷாக்கான உணவுகளைப் பெறுவதற்கு இயலாது. இதன் காரணமாகப் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். அதேவேளை போஷாக்கின்மையின் காரணமாக இளம் சிறார்கள் தமது கல்வியில் அக்கறை செலுத்துவதும் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணங்களை ஆராயுமிடத்து தோட்டத் தொழிலாளர்களுக்குப் போதியளவான சம்பளம் கிடைக்காமையே என்பது புலனாகும்.மலையகப் பகுதிகளில் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்டுத் தொழிலாளர்களின் இல்லங்களை நாடுகின்றனர். ஆனால் பின்னர் அவர்களைக் காண முடியவில்லை. தேர்தல் காலங்களில் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தும் தொழிற்சங்க அரசியல் வாதிகள் வாக்களித்த தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையின் போது பின் நிற்கின்றனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இம்முறை இந்நிலைமை மாறவேண்டும். இதற்குத் தொழிற்சங்க அரசியல் வாதிகள் முனைந்து செயற்பட வேண்டும்.இலங்கை நாட்டினைப் பொறுத்த மட்டில் ஏனைய அரச துறைகளில் தொழில்புரிபவர்கள் வருடாவருடம் தமது வாழ்க்கைச் செலவிற்கு ஏற்றவாறு எதுவித நிபந்தனைகளுமின்றிச் சம்பள உயர்வு பெறுகின்றனர். ஆனால் கம்பனிகளினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு வருடமும் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.அரச உத்த்தியோகத்தர்களின் அளவுக்குத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காவிட்டாலும் தமது அன்றாடச் செலவுகளை நிவர்த்தி செய்யும் அளவுக்காவது சம்பளத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் தமது உணவு மற்றும் உடை, போக்குவரத்து, மருத்துவ செலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு, விருந்தாளிகளின் உபசரிப்பு உள்ளிட்ட அனைத்தினையும் தமது நாட் சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டே செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மிகக் கஷ்டமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் அனைத்து தொழிற்சங்களுடன் ஒன்றிணைந்து ஒரு கணிசமான சம்பள உயர்வினைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.200 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியாவில் இருந்து தோட்ட தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களின் தொழில் நிலை அந்தஸ்தினை உறுதிப்படுத்தும் வண்ணம் செயற்பட வேண்டும்.எதிர்கால சந்ததியின் நிலை குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதனால் இம்முறை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை வெற்றி அளிக்கத் தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுத் தீர்க்கமான நன்மையைத் தோட்டத் தொழிலாளருக்குப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
க. விக்னேஸ்வரன்
தினகரன்

No comments: