Tuesday, June 30, 2009

சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுகோள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிர்ணயித்து தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டதால் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர் தொழில் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரத்னவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால் தொழிலாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்னைய சம்பள அதிகரிப்பின்போதும் அவர்களுக்கு வாழ்வதற்கு போதுமான சம்பள உயர்வு வழங்கப்படாமையினாலும்,அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் தோட்டத் தொழிலாளர் நாளுக்கு நாள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தோட்டத்தொழிற்துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்வாதாரப் போராட்டத்துடன் தோட்டங்களில் தொழில்புரிகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வழங்குவதாக வாக்குறுதியளித்த நிவாரணம் கூட அம்மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை ஓரளவாவது நிவர்த்திசெய்யும் வகையில் அரசாங்கத்தினதோ, முதலாளிமாரினதோ ஒத்துழைப்பு கிடைக்காது அவர்களது சம்பளத்தை சட்டபூர்வமாக அதிகரித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை தொடர்ந்து பிற்போடுவது தோட்டத்தொழிற்துறைக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இவ்விடயத்தில் நம்பிக்கை இழந்திருக்கும் தொழிலாளர்கள் வாழ்வதற்குப்போதுமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருமாறு பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேயிலை, இறப்பர் தொழிற்துறை உற்பத்திகள் குறைந்தன. இதனால், தேசிய வருமானத்துக்கும் பாதிப்பேற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். எனவே தான் இதனை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
2006 ஆம் ஆண்டு சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்கப் போராட்டம் 3 மாதங்களாகத் தொடர்ந்தன. அத்தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் 3.300 மில்லியன் நட்டமேற்பட்டதாக முதலாளிமார் தெரிவித்திருந்தனர்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைக்குப் போதுமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாக இருந்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கவேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் இதனை கவனத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கும் நிலையிலும் முதலாளிமார் அதனை தள்ளிப்போட்டு வருகின்றனர். தேயிலை வர்த்தகச் சந்தையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்டத்துறை நல்ல நிலையிலேயே உள்ளது. தேயிலை ஒரு கிலோ 450 ரூபாவாகவும் இறப்பர் ஒரு கிலோ 250ரூபாவாகவும் உயர்ந்த விலையில் இருப்பதனால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதுவித தடையும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களை நம்பிக்கை இழக்கச்செய்யாது சுமார் நான்கு இலட்சம் தோட்டத்தொழிலாளிகளுக்கு வாழ்க்கைக்குப்போதுமானளவு சம்பளத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கும்படி முதலாளிமார் சம்மேளனத்தை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். இதற்காக அரசாங்க பிரதிநிதி என்ற வகையிலும் தொழில் தொடர்பு மற்றும் மனிதவள அமைச்சர் என்ற வகையிலும் நீங்கள் துரித தலையீடொன்று செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். – நன்றி – தினக்குரல்

No comments: