Friday, March 27, 2009

ருபெல்லாவின் தாக்கம் மலையகத்திலும் பரவாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும்

ருபெல்லா தடுப்பூசியின் தாக்கம் மலையகப் பாடசாலைகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்யவேண்டுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளையில் ருபெல்லா ஊசி ஏற்றப்பட்டதால் மரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மாணவியின் மரணம் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மாத்தறை பகுதி பாடசாலையொன்றில் ஏற்பட்ட மாணவி ஒருவரின் மரணம் தொடர்பாக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அட்டன் பகுதியில் ஒரு மாணவியின் மரணத்திலும் ருபெல்லா தடுப்பூசி விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.

பெருந்தோட்டத் துறையைப் பொருத்தவரையிலும் மாணவர்களின் சேம நலன்களை உன்னிப்பாகக் கவனிக்கும் அளவிற்கு பெற்றோர்களுக்கு போதிய ஓய்வும் இல்லை. நோய்களின் தாக்கங்களை உடனடியாகக் கண்டு கொள்ளும் அளவிற்கு அனுபவமும் இல்லை. இதற்கும் மேலதிகமாக வைத்திய வசதிகளும் எமக்கு பூரணமாக இல்லை. ஆகவே பாடசாலை நிர்வாகமும் சுகாதாரத் திணைக்களமும் இவ்விடயத்தில் கூடிய கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். மலையகத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இம் மாதிரியான ஆபத்துகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

No comments: