Saturday, November 5, 2016

தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோவில் கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனத் தோட்ட நிர்வாகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 100க்கும்; மேற்பட்ட தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்துக்கு அரை நாள் சம்பளத்தை தோட்ட நிர்வாகம் தற்போது வழங்குகின்றது. கடந்த காலத்தில்; 18 கிலோவுக்கு குறைவாகக் கொழுந்து பறித்தபோது, முழு நாள் சம்பளத்தை  வழங்கியதாகவும் கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், கடந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் எங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும் தற்போது 5 மணிவரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகின்றது.  5 மணிவரை தொழில் செய்யும்பொழுது எமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளோம். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதிலும், இதுவரையில் சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எமக்கு விளக்கம் கொடுக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பு நிலுவை சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறிய தொழிற்சங்கம் எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது' என்றனர்.

12 மணித்தியாலங்கள் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் ஏற்படும்


நாடுமுழுவதும் தொடர்ச்சியாக பதிவாகும்;; மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்புள்ளதாகவும் அபாயம் நிலவ கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொல கொன்கோடியா பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் சாத்தியம் இருப்பதனை தொடர்ந்து 18 பேர் தங்கள் இடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இதுவரையில் பாரிய அனர்த்தங்கள் எவையும் பதிவாகவில்லை என்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். 

இது தொடர்பாக மத்தியநிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மததிய மாகாணத்தின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படட்டுள்ளது. 

எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மலை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு மற்றும் நிலவெட்டுச் சாய்வுகள் இடிந்து விழக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி மாவட்டத்தில் கங்கதிகே கோரலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எல்பத குருவிட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெரனியகல தெஹியோவிட்ட ருவன்வெல்ல, யட்டியாந்தோட்ட,புளத்ஹோபிட்டிய,அரநாயக்க, கேகாலை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டள்ளதால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும். இதனிடையே கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது. காலி உள்ளிட்ட கரையோரத்தை அண்டிய மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 வரையில் இருக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

Saturday, October 22, 2016

தொழிலாளர்கள் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி கள் வழங்க மறுத்ததையடுத்து உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி  லிந்துலை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று பிற்பகல் 2 மணிநேரம் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஏனைய பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. நேற்றுக்காலை தோட்ட தொழிற்சங்க தலைவர்களும் மற்றும் தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்கு சென்று தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரிய போது தோட்ட அதிகாரி வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் கம்பனி வங்கியில் வைப்பு செய்யவில்லை எனவும், வைப்பு செய்தால் பணத்தை 24ஆம் திகதி தருவதாக கூறியதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே இருப்பதால் 24ஆம் திகதி இப்பணத்தை பெற்று தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக மாதாந்தம் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து சேமித்து வைத்திருக்கும் தொகையினை கூட வழங்க தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவதாக கூறிய மலையக அரசியல் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாக தெரிவித்த அவர்கள், கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுப்படும் தொழிற்சங்க அதிகாரிகள் காட்டி கொடுத்துவிட்டனர்.20ஆம் திகதி தீபாவளி முற்பணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் தமக்கு தீபாவளி முற்பணத்தினையும், ஏனைய கொடுப்பனவுகளையும் உடனடியாக பெற்று தருமாறும், அவ்வாறு தவறும் பட்சத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தீபாவளி முற்பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு,கிழ்பிரிவு மக்கள் இன்றைய தினம் தொழிலுக்கு செல்லாது தீபாவளி பண்டிகை முற்பணத்தினை வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

தீபாவளி பண்டிகைக்கு வழங்கபட வேண்டிய 10,000 ரூபா இன்று வழங்குவதாக கூறிய வாக்குறுதி அளித்த தோட்ட நிர்வாகம் இன்று வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தமையினாலேயே ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முற்பணத்தினை உடனடியாக வழங்கபட வேண்டுமெனவும் மலையக அரசியல்வாதிகள் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் தெறிவித்தனர்.

இதேவேளை இந்த ஆர்பாட்டம் குறித்து தோட்ட முகாமையாளரிடம் கேட்டபோது எதிர்வரும் 25ம் திகதி வழங்கபடுமென உறுதியளித்தார்.

கூட்டு ஒப்பந்தம் பற்றி கருத்துக்கள்


Thursday, October 20, 2016

2015 ஏப்ரல் முதல் ரூ. 730 வேண்டும்

தோட்டத் ​தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திக்கொண்ட கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்று, அகில இலங்கை தோட்டத் தொழலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.   
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை, ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென்று, அத்தொழிலாளர்களினால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இருப்பினும், தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் தோட்டத் தொழிற்சங்கங்களும் இணைந்து, 730 ரூபாய்க்கான நாட்சம்பளத்துக்கு கைச்சாத்திட்டன. இது, தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை, மிதித்து நசுக்குவதற்கான ஒப்பந்தமாகவேய கருதப்படுகின்றது என, மேற்படி சம்மேளனத்தின் தலைவர் ஏ.பிரேமரத்தின கூறினார்.   
“மேற்படி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையால், , 730 ரூபாயைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெற வேண்டும். 2015 ஏப்ரல் முதல், 2016 ஒக்டோபர் வரையான 19 மாதங்களுக்குரிய நிலுவைச் சம்பளம், தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனைப் பெற்றுக்கொடுக்க தவறும் பட்சத்தில், அது குறித்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

Wednesday, October 19, 2016

அரசியல் பினாமிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும்

தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றியவர், சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்களை திசைதிருப்ப முயல்கிறார். தமது பதவிகளையும் பட்டங்களையும் பாதுகாத்து, சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கும் அரசியல் பினாமிகளுக்கு, மலையகம் மிக விரைவில் பாடம் கற்றுத்தரும்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது. 
இது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவருமான ஏ.பிலிப்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
“ஒளிவு மறைவின்றி, விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாதவாறு தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு இ.தொ.கா வழிவகுத்தது. 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை, இ.தொ.கா முன்னெடுத்திருந்தது. மற்றவர்கள் நினைப்பதைப் போன்று, இது விடயத்தில் இ.தொ.கா நாடகமாடவில்லை. 
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது, சமூகநய வஞ்சகர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்திடம் பேரம் பேசுவதனூடாக, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, 1,000 ரூபாய் சம்பள உயர்வை இ.தொ.கா கோரியிருந்தது.  
இதனை, மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இவ்விடயத்தில் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்திருப்பது வேடிக்கையாகும். 
அச்சங்கத்தின் பொதுச் செயலாளர், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில், ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார். 
இடைக்காலக் கொடுப்பனவை மக்களுக்கு வழங்கும் நோக்கில், ஒரு நகைச்சுவைக் கூத்தை இரண்டு மாதங்கள் ஓட்டிமுடித்த அவர், எம்மீது குற்றம் சுமத்துவது எவ்விதத்தில் நியாயமாகும்?  
இழுத்தடிப்புக்கும் இழுபறிக்கும் காரணமாக அமைந்த பொதுச் செயலாளர், எம்மை பொறுப்புக்கூற வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றார். முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் பழக்கம், இ.தொ.காவிடம் இல்லை.  
ஒரு விடயத்தை இ.தொ.கா எடுத்துக்கொண்டால், அதை நிறைவேற்றியே தீரும். நிலுவைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கையை இ.தொ.கா எடுக்கும். குறித்த தொழிற்சங்கமொன்று, இதனைக் குழப்பியடிக்காமல் இருந்திருந்தால், நிலுவைக் கொடுப்பனவையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம். 
மலையக அரசியல் பாரம்பரியங்களுக்கு அப்பால் செயற்படும் நடவடிக்கைகளாலும் வெறும்வாய்ச் சவாடல்களாலும் பூச்சாண்டி காட்டுவதாலும், மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை காண முடியாது.  
கூட்டுப்பேரம் பேசும் தன்மையை புரிந்து கொள்ளாதவர்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள்? இந்த 1,000 ரூபாயிலிருந்து 730 ரூபாய் கிடைக்கப்பெற்றது வரவேற்கக்கூடிய விடயமே. அதை விடுத்து, அதனை வியாக்கியானப்படுத்துவதோ அல்லது கொச்சைப்படுத்தி பேசுவதோ, தொழிலாளர் வர்க்கத்தை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமானதாகும். 
இது இவ்வாறிருக்க, கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு ஓர் அங்கமாக, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்வாங்கப்பட்டிருந்தபோதும், அதனையும் தாண்டி அவர் பேசியிருப்பது, தொழிற்சங்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறி இருப்பதுதான் உண்மை. இதுவிடயத்தில் அத்தொழிற்சங்கம், சட்ட நடவடிக்கையில் ஏன் ஈடுபடக் கூடாது என, இ.தொ.கா கேள்வி எழுப்புகின்றது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி- தமிழ் மிரர்