கடந்த 18 வருடங்களாக கூட்டு ஒப்பந்தம் மூலமே தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. தொழிலாளரின் சம்பளத்தை அரசாங்கத்திடமிருந்து சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூட்டு ஒப்பந்த முறைமையை மிக மோசமாக விமர்சனம் செய்தும் வந்தவர்கள், தற்போது அரசாங்கத்திடமிருந்து சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்வது எந்தளவு கடினமானது என்பதையும் சாத்தியமற்றது என்பதையும் அனுபவ ரீதியாக உணர்ந்திருப்பார்கள் என்று பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகமும் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளருமான எஸ். இராமநாதன் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விபரங்களை கூட்டுக் கமிட்டியின் தோழமைச் சங்க தலைவர்களுக்கு விளக்குவதற்காக கண்டி இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கக் காரியாலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். செங்கோடிச் சங்கத்தின் தலைவி மேனகா கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கே.எம். கிருஷ்ணமூர்த்தி, எஸ். முருகையா, ஏ. முத்துலிங்கம், எஸ். ஆனந்தி, எஸ். கந்தையா, ஆர். சிரில் ஆகிய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்த இக்கூட்டத்தில் திரு இராமநாதன் தொடர்ந்து கருத்து தெரிவித்தபோது;
கூட்டு ஒப்பந்தத்தில் யார் கையொப்பமிடுவது என்பது முக்கியமல்ல. யார் கையொப்பமிட்டாலும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்கு கூட்டு ஒப்பந்த முறைமையே சிறந்ததாகும் என்பதும் தொழிலாளர்களின் பலத்தின் மூலம் பேரம்பேசி சம்பள உயர்வையும் ஏனைய உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை நம்பி தொழிலாளரின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது.
இன்று முதலாளித்துவ தோட்டக் கம்பனிகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர். தொழிலாளரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம் அரசிலுள்ள பெரும் புள்ளிகளின் ஆதரவும் அனுசரணையும் தோட்டக் கம்பனிகளுக்கு இருக்கின்றமையேயாகும். இதனால் தான் என்றுமில்லாதவாறு தோட்டக் கம்பனிகள் முரட்டுப் பிடிவாதமாக நடந்து கொள்கின்றன. தோட்டக் கம்பனிகள் தமது இறுமாப்பைக் கைவிட்டு தொழிலாளரின் சம்பள உயர்வுக் கோரிக்கையில் நியாயமான தீர்வினை மேற்கொள்ள முன்வர வேண்டும். தொழிலாளர்களது அடிப்படை சம்பள உயர்வு, வரவு போனஸ், விலையேற்ற அல வன்ஸ், மேலதிக தேயிலை இறப்பருக்கான கொடுப்பனவுகளின் அதிகரிப்பையே நாம் முன்வைத்துள்ளோம்.
இக் கோரிக்கையினையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். இக் கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் நாட்களில் தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத் தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப் பட்டிருப்பதாக வும் கூறினார்.
| |||
Tuesday, May 31, 2016
Monday, May 30, 2016
மலையக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை - அங்கலாய்க்கும் மக்கள்
மலையக பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகளின் கொழுந்து விளைச்சல் அதிகமாக காணப்படுகின்றது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேயிலை மலைகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்து வரட்சியான நிலைமை காணப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தை எதிர்நோக்கியதோடு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே தோட்ட நிர்வாகத்தினால் தொழில் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக தொழிலாளர்கள் பொருளதார ரீதியில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததோடு குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடன் சுமைக்கு தள்ளப்பட்டார்கள்.
தற்போது கொழுந்து விளைச்சலின் காரணமாக தொழிலாளர்கள் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு நாளுக்கு அதிகமான கிலோ கிராம் கொழுந்தினை பறித்து வருவதோடு அதிகாலை 6 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் மாலை 6 மணி வரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை சீர்கேட்டினால் இத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதிலும் ஏதோ ஒரு வகையில் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு மழை, குளிர் பாராமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருமானத்திற்காக போராடுகின்றனர்.
இத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும், வேதனைகளையும் அறிந்த தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு பகல் உணவு வழங்குவதோடு மாலை நேரத்தில் கொழுந்து மடுவங்களில் வைத்து கோப்பி தேநீர் வழங்கி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் அதிக நேரம் வேலை செய்வதாக தோட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தில் தண்ணீர் இருப்பதற்காகவும், கொமிஷன் என்ற அடிப்படையில் ஒரு நேர நிறுவைக்கு 3 கிலோ தொடக்கம் 5 கிலோ வரை தங்களுடைய கொழுந்து இறாத்தலில் கழிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்காமல் வருமானத்தை நோக்கி நிர்வாகம் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், கடுமையான மழை நேரத்தின் போது விடுமுறை கூட தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான கடும் கஷ்டத்தில் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்படவில்லை என தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் முடிவுவடைந்து ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த போதிலும் சம்பள உயர்வை பெற்று தருவதாக கோரிய மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை மேற்கொண்டு விட்டு அமைதியாக மௌனம் சாதியப்பதாக தொழிலாளர்கள் அங்கலாயிகின்றனர்.
கடந்த வருடங்கள் பல போராட்டங்களை சம்பள உயர்வுக்காக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததாகவும், தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில மாதங்களுக்கு மாத்திரமே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் இருக்கும் எனவும், அதன்பின் கொழுந்து விளைச்சல் படிப்படியாக குறையும் என தொழிலாளர்கள் தெரிவிப்பதோடு மீண்டும் வரட்சி ஏற்படும். அப்போது மீண்டும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்று தருமாறு தோட்ட தொழிலாளர்கள் அரசியல்வாதிகளிடம் ஞாபகப்படுத்துகின்றனர்.
Saturday, May 28, 2016
ஹட்டனில் மண்சரிவு- சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு
ஹட்டனில் மண்சரிவு
ஹட்டன், சமலனகம பகுதியில் ஏற்பட்ட மன்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை ஹட்டன் பொலிஸாரும் நகரசபையினரும் இணைந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர். மேலும் மண்சரிவு பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளின் வெடிப்புகள் எற்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் வர்த்தக நிலைய கட்டிடமொன்று நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்ட சாமிமலையில் இன்று (28) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 41 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேற்படி பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடம்பெயர்ந்த 200 பேரும் தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கக்கலையில் மண்சரிவு
லிந்துலை, தங்கக்கலை தோட்டம் கிம்ரு மேற் பிரிவில் இன்று (28-05-2016) காலை ஏற்பட்ட மண்சரிவினால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. இம்மண்சரிவினால் 2 வீடுகளில் வசித்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த லயன் தொகுதியில் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 100 பேர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கினிகத்தேனை பிரதான வீதியில் வெடிப்புகள்
ஹட்டன், கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வீதியூடான போக்குவரத்து வியாழக்கிழமை (26) முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதெனவும் கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கினிகத்தேனை பொலிஸாரினால் கட்டட ஆராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து, வெடிப்பு ஏற்பட்ட இடத்தை வியாழக்கிழமை பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த வீதியினை பயன்படுத்துவதை தடைசெய்யமாறு உத்தரவிட்டுள்ளனர். வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு அனர்த்ததிற்குள்ளாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக நில ஆய்வு சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் உள்ள சில கடைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியாவில் மண்சரிவு - 200 பேர் பாதிப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில் 28.05.2016 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை மவுசல்ல தோட்டங்களில் மண்சரிவு அபாயம்
நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர்.
இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ் இறங்கியுள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான நிலை காணப்படுகின்றது.
மரம் முறிந்து விழுந்தில் 07 வீடுகள் சேதம் 35 போ் இடம்பெயர்வு
தெல்தோட்டை நாரங்கன் தோட்டப் பகுதியில் இன்று விடியற்காலை 07.00 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 07வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெல்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 07 குடும்பங்களை சோ்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது 03 வீடுகள் முழுமையாகவும் ஏனைய 04 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் 07 குடும்பங்களை சோ்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது 03 வீடுகள் முழுமையாகவும் ஏனைய 04 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனா்.
Friday, May 27, 2016
அணுகுமுறைகள் முரண்பட்டு காணப்படுவதாலேயே பேச்சுக்கள், போராட்டங்கள் தோல்வியடைகின்றன
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. ஆனாலும் தொழிற்சங்கங்களின் அணுகுமுறைகள் முரண்பட்டதாகக் காணப்படுகின்றன. அதிகாரப்போட்டி, மாறுபட்ட கொள்கைத் திட்டம், மலையகத் தலைமைகளிடத்தில் இருந்து வருகின்ற வரட்டு கௌரவங்கள் ஆகியவற்றின் காரணமாக பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் மாத்திரமின்றி அப்பாவித் தொழிலாளர்களும் ஏமாற்றப்பட்டு, தோல்வியடைந்து, சோர்ந்து போகின்றனர் என்று ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயமாக அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே, தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. ஆனாலும் அத் தொழிற்சங்கங்களின் அணுகுமுறைகள் முரண்பட்ட வகையிலேயே அமைந்துள்ளன. தமக்கே அனைத்து ஆக்கற் சக்திகளும் இருப்பதாக நினைத்தே தற்போது மலையகத் தலைமைகள் செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது. அதிகாரப்போட்டி, மாறுபட்ட கொள்கைத் திட்டம், மலையகத் தலைமைகளிடத்தில் இருந்துவருகின்ற வரட்டு கௌரவங்கள் ஆகியவற்றின் காரணமாக பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் மாத்திரமின்றி அப்பாவித் தொழிலாளர்களும் ஏமாற்றப்பட்டு, தோல்வியடைந்து, சோர்ந்து போகின்றனர்.
தோட்டத் தொழிலாளர் சமூகம் என்ற ரீதியில் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து அனைத்து மலையக சிறிய, பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வினை முன்னிலைப்படுத்தி ஒன்றிணைந்த போராட்டங்களையும் ஒன்றிணைந்த ஆக்கற் காரியங்களையும் முன்னெடுக்க வேண்டும். இப்போராட்டங்கள் அரசையும், தோட்டங்களை பொறுப்பேற்றிருக்கும் முதலாளிமார் சம்மேளனத்தையும் வலியுறுத்தி, அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியதாகவே அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் மாத்திரமே பிரதிபலனைக் காணக்கூடியதாக இருக்கும்.
மலையக தொழிற்சங்கங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் போராட்டம் பலவீனமடையவே செய்யும். அனைத்து தொழிற்சங்கங்களின் இலக்கு சம்பள உயர்வு விடயத்தில் ஒன்றானதாக இருக்கும் போது அத்தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதன் பயனை தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்க கூடியதாக இருக்கும். அரசாங்கத்தினால் தனியார் துறையினருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் கிடைக்காமை அடிப்படை உரிமை மீறலாகும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு செயற்படல் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டுமென்று அடிக்கடி கூறி வந்த போதிலும் அக்கூற்று இதுவரையில் போலித்தனமானதான அமைந்து விட்டமை வேதனைக்குரியதாகும்.
தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்வினை தோட்டத் தொழிலாளர்களினால் எதிர்கொள்ள முடியாது அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாமையினால் அவர்கள் தோட்டத் தொழில் துறையிலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலை தொடரும் பட்சத்தில் தொழிலாளர்கள் இன்றி தோட்டத் தொழில் துறையினையே மூடவேண்டிய அவலம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற சம்பளமின்மை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்க முடியாது. இந்நிலை நீடித்து பெருந்தோட்டங்கள் மூட வேண்டிய சூழல் ஏற்படுமேயானால் அத் தோட்டங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் சாபங்களுக்கு அனைத்து மலையக தலைமைகளும் உட்படவேண்டிவரும் என்றார்.
|
தோட்டத்திற்கு எக்காரணம் கொண்டும் செல்ல மாட்டோம் வேறு எங்காவது வீடுகளை அமைத்து தாருங்கள்
மண்சரிவு ஏற்பட்டு 16 உயிர்களை காவு கொண்ட புளத்கொஹுபிட்டிய களுபான தோட்டத்திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்களுக்கு வேறு எங்காவது வீடுகளை அமைத்து தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்றாட்டமாக கோருகின்றோம் என்று புளத்கோஹுபிட்டிய மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். தயவு செய்து களுபான தோட்டத்திற்கு செல்லுமாறு எங்களை வற்புறுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்பட்ட இடமாகவே பார்க்கின்றோம். எங்களால் இனிமேல் புளத்கோஹுபிட்டிய களுப்பான தோட்டத்தில் நிம்மதியாக வாழவே முடியாது என்றும் அந்த மக்கள் குமுறுகின்றனர்.
புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவையடுத்து, அங்கிருந்து இடம்பெயர்ந்து யக்கல மகாவித்தியாலயத்தில் 57 குடும்பங்கள் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள அந்த மக்கள் இந்த உருக்கமான கோரிக்கையை முன்வைத்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் துயரத்தை வெளியிடுகையில்,
உங்களிடம் ஒருவிடயத்தை மன்றாடிக் கோருகின்றோம். நாங்கள் கோருகின்ற இந்த விடயத்தை தயவு செய்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்தில் நாம் இதுவரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்பட்ட மண்சரிவினால் எமது உறவுகள் 16 பேரை இழந்துவிட்டோம். அந்த 16 பேரும் மண்னோடு மண்ணாக புதைந்து போகினர்.
அந்த வகையில் பார்க்கும்போது புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டம் வாழ்வதற்கு ஆபத்தான இடமென்பது நிருபனமாகிவிட்டது. எனவே எக்காரணம் கொண்டும் இதன்பின்னர் புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்திற்கு நாங்கள் செல்லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒருபோதும் நிம்மியாக வாழ முடியாது.இதனை புரிந்து கொள்ளுங்கள். எமது நிலைமையை உணருங்கள். எமது 16 உறவுகளை பரித்தேடுத்த அந்த தோட்டத்தில் எம்மால் இனி வாழ முடியாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்கிருந்து கொண்டு வேண்டுமானால் களுபான தோட்டத்திற்கு தொழிலுக்காக சென்று வரமுடியும். ஆனால் களுபான தோட்டத்தில் வாழ மாட்டோம்.
மண்சரிவு ஏற்பட்டதன் பின்னர் எமது பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்பரம் புதிய வீடுகளை அமைத்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் களுபான தோட்டத்தில் எமக்கு வீடுகளை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடுகளை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.
Tuesday, May 24, 2016
நிம்மதியாக வாழ ஒரு காணி துண்டைத் தாருங்கள்
நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் மலையகத்தின் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் அனர்த்த அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டுனாலி, அப்பர் கலஹா, கலஹா குரூப், பட்டியகம, கிதுல் முல்ல, தெல்தோட்டை குரூப் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகள் இதனால் பெரிதும் பாதிப்பப்பட்டுள்ளன. பொதுவாக இத்தோட்டங்களைச் சேர்ந்த 10 இற்கு மேற்பட்ட லயக்குடியிருப்புக்களின் 162 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இம்மக்கள் வாழும் லயக்குடியிருப்புக்களுக்கு அருகாமையில் நிலப்பிளவுகளும் நிலம் தாழ்ந்தும் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காணப்படுவதால் இம்மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களின் குடியிருப்புக்கள் ஆபத்தானவை என பிரதேச செயலகத்தினால் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர், கண்டியை மையமாகக்கொண்டு கேகாலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த்
தெல்தோட்டைப்பிரதேசத்திற்குச் சென்று அவர் அங்கு மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார். அதன்போது சிலர் வழங்கிய கருத்துக்களே இவை.
எஸ்.ஜெயந்தி கருத்து தெரிவிக்கையில் :
நான் ஒரு கால்நடை விவசாயி. தனது குடும்ப வாழ்வாதாரத்தை கால் நடைகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தைக் கொண்டு சீவியம் நடாத்தி வருவதாக தெரிவித்தார். கால்நடை வளர்ப்புக்கு உகந்த பிரதேசமாக டுனாலி பிரதேசம் காணப்படுகின்றது. தற்போது டுனாலிப் பிரதேசம் அனர்த்தப் பிரதேசமாக காணப்படுகின்றது. இவ்வனர்த்தத்தினால் என்னைப் போன்ற பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி எமது குடியிருப்புக்களை உருவாக்க வேண்டும் என அரசிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். எமக்குத் தேவை பாதுகாப்பான காணித்துண்டொன்று. அடுத்து ஜீவாதாரத்திற்கான தொழில். என்றார்.
எல். காஞ்சனா (பாடசாலை மாணவி):
நாம் மலையக மாணவர்கள் என்ற பகுதிக்குள் வருகின்றோம். அதனால் பல இன்னல்களை அவ்வப்போது சந்தித்துவருகின்றோம். பல வசதியீனங்களுக்கு மத்தியில் நாம் கற்றுவருகின்றோம். மின்னொழுக்கு ஒழுங்கீனத்தினால் மலையகத்தின் பல லயக்குடியிருப்புக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளமையை நாம் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். அதற்கு நாமும்விதிவிலக்கல்ல.
அதேபோல், மழை காலங்களில் எமது குடியிருப்புக்கள் அவ்வப்போது அழிந்து சேதமடைகின்றன. இந்நிலை தொடருமாயின் எமது கல்வி பாதிக்கப்படுவதோடு மலையக மக்களின் அபிவிருத்தியில் பின்னடைவும் ஏற்படும்.
இவற்றை கருத்திற்கொண்டு எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் நிர்வாகத்துறையினரும் எமக்கு பாதுகாப்பான நிலத்தை வழங்கி கல்வியுரிமையை உறுதிப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் கல்வியைத்தடையின்றிப்பெற கல்வியமைச்சர் எமது இராஜாங்க கல்வியமைச்சர் உள்ளிட்டோர் உதவவேண்டும்.என்றார்.
ஆர். வேலு (ஓய்வுபெற்ற தோட்டத்தொழிலாளி):
தோட்டத்தொழிலாளிகள் ஏமாறவே பிறந்தவர்கள் என்பது போல தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் ஏன் இயற்கையும் நடந்துகொள்கின்றன.
காலங்காலமாக தோட்ட முகாமைத்துவமும் தொழிற்சங்கங்களும் அரசியல் வாதிகளும் எம்மை ஏமாற்றி வருகின்றனர்.இதனை யாவரும் அறிவர். தேர்தல் காலத்தில் மாத்திரம் எமது பகுதிக்கெல்லாம் வருவார்கள். தொண்டை கிழியக்கத்துவார்கள். அது செய்வோம் இது செய்வோம் என்பார்கள். ஆனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றமே.எங்களை ஏமாற்றி பிழைப்போர் எமது இன்றைய நிலையை நன்கு அவதானித்து எமக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது பிராயச்சித்தமாகும்.
நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடைகளை எங்களால் தேடிக்கொள்ள முடியும். நாம் பீதியின்றி நிம்மதியாக வாழ எமக்கு ஒரு காணித்துண்டை தாருங்கள்.
இதுவே எமது விருப்பம்.எனத்தெரிவித்தார்.
நன்றி- தினகரன்
தோட்டத் தொழிலாளர்கள் 2500 ரூபாவுக்கு உரித்துடையவர்கள் அல்ல
கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபாய் சம்பள உயர்வுக்கு உரி;த்துடையவர்களாக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி. இராஜதுரை இது பற்றி தெரிந்திருந்தும் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏமாற்று வித்தையாகும் என்று தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது. இதனால் சொல்லொணா துன்ப துயரங்களை தொழிலார்கள் அனுபவித்து வருகின்றார்கள் இந்நிலையில் இவர்களுக்குரிய சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல் தொழிற்சங்கவாதிகளின் கடமையாகும்.
தொழிலாளர்களின் நலன்கருதி அரசியல் தொழிற்சங்க பேதம் பாராது இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனினும் இங்கு சில அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கவில்லை.
2016ம் ஆண்டின் கைத்தொழில் பிணக்குகள் சட்டம் மிகவும் முக்கியமானது. இச்சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை ஒன்று இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபா சம்பள உயர்வுக்கு உரித்துடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது.
எனவே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தெரிந்திருந்தும் ஒப்பந்தம் இல்லாமல் போக வேண்டுமென்றால் இரு சாராரில் ஒரு சாரார் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். எனினும் நிலைமை இன்னும் அவ்வாறு அமையவில்லை. கூட்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் மேலாக காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மற்றும் பிரதான கட்சிகளும் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து வருகின்றன. இதனடிப்படையில் விரைவில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டு ஒப்பந்தம் நடைமுறை இல்லையென்று கூறிவிட முடியாது
இதேவேளை குறைந்தபட்ச வேதன சட்டத்திற்கமைய தொழிலாளர்களுக்கு தொழில் தருநர்களால் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வேதனத் தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறைந்த பட்ச மாதாந்த வேதனம் பத்தாயிரம் ரூபாய் எனவும் நாள் ஒன்றுக்கான அடிப்படை சம்பளம் 400 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இச்சட்டமும் கூட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது.
கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்ற கருத்தினை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மையுமாகும்.
எனவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக காலத்துக்குக் காலம் உரிய சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையும் பொறுப்புமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. கூட்டு ஒப்பந்தத்தினை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பதனை விடுத்து நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் அமைச்சு பதவிகளின் ஆளுமையின் ஊடாகவும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினையும் விசேட கொடுப்பனவுகளையும் ஏதேனும் ஒரு வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் முனைதல் வேண்டும். அதைவிடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற முனைவது தவறான விடயமாகும் என்றார்.
Subscribe to:
Posts (Atom)






