Monday, August 2, 2010

மாணவர் இடைவிலகல் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி பணிப்பு



தோட்டப் பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முழுமையாக கற்காமல் இடைவிலகிச் செல்வது தொடர்பாக உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பொன்றின் போதே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை தெளிவுபடுத்துமாறும் அதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கினார்.

நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எந்த இனமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், அனைத்து மக்களும் சகல வசதிகளுடனும் சந்தோசமாக வாழ வழிவகைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளினதும் கல்விக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதுடன் கல்வியையும் சுகாதாரத்துறையையும் மேம்படுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

தோட்டப்புற பாடசாலைகளில் கல்வியை தொடராமல் இடைநடுவில் பாடசாலையை விட்டு மாணவர்கள் அதிகளவில் விலகிச் செல்கின்றனர். இதற்கான காரணத்தை கண்டறியவும், ஆய்வினை மேற்கொள்ளவும் வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் தோட்டப்புற மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசணை நடத்தினார்.

யுனெஸ்கோ பட்டியலில் மலைநாடு


இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியை உலக கலாசார, பாரம்பரியம் மிக்க பிரதேசங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. குறுகிய நிலபரப்புகளில் உள்ளக எல்லை வரையறைகளை கொண்டுள்ள போதிலும் பூகோள ரீதியிலும் காலநிலை இயல்புகளிலும் பல்வேறு வேறுபாட்டம்சங்களைக் கொண்டதொரு தீவாக இலங்கை விளங்குகின்றது.

சிவனொளிபாத மலை மற்றும் நக்கள்ஸ் மலைத்தொடர் போன்ற முக்கிய மலைகளை உள்ளடக்கியுள்ள மத்திய மலைநாட்டுப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீற்றர்கள் உயரத்தில் அமைந்துள்ளது

வேகமாக அழிவடைந்த உயிரினமாக கருதப்பட்ட ஸ்லென்டர் லோரிஸ் என்ற அரிய வகை தேவாங்கினம், ஊதா நிற முகத்தோற்றத்தைக் கொண்ட குரங்கினம், இலங்கைச் சிறுத்தைப்புலி மற்றும் அரிதான பறவையினங்கள், தாவர இனங்கள் போன்ற பல வகையான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்குவதால் மத்திய மலைநாட்டுப் பகுதி, உயிரினப் பல்வகைத் தன்மைக்கு உகந்த இடமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு கரையோரத்தை ஒட்டி அமைந்துள்ள வில்பத்து தேசிய சரணாலயத்தை விட இந்தப்பிரதேசம் மிக முக்கியமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக இலங்கையில் நிலவிய சிவில் யுத்தம் காரணமாக வில்பத்து சரணாலயப் பிரதேசத்தின் உயிரின முக்கியத்துவம் குறித்து அக்கறை செலுத்தப்படாது இருந்துவந்துள்ளது.

புதிய வீதிகளை உருவாக்குதல், மற்றும் கடற்படை தளங்களை அமைப்பதற்காக இந்தப்பிரதேசத்தின் அனேகமான பசுமைக்காடுகளும் ஈரலிப்பு மிக்க சதுப்பு நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மைய சுற்றுச்சூழல் ஆய்வுகள் கூறுகின்றன.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய மலைநாட்டின் உலக பாரம்பரிய சிறப்பு வலயப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கான கட்டுமாண நடவடிக்கைகள் சட்டவிரோதமாக நடைபெறுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற போதிலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுக்கின்றது.

இந்தியாவில் ஜந்தர் மாந்தர்

இதுதவிர அமெரிக்கா, டன்ஸானியா, சவுதி அரேபியா மற்றும் ஒஸ்ட்ரேலியா போன்ற நாடுகளிலுள்ள சில முக்கிய தலங்களையும் உலக கலாசார மற்றும் பாரம்பரிய சிறப்பம்சங்கள் கொண்ட பிரதேசங்களாக அறிவித்துள்ள யுனேஸ்கோ, இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர்வானவியல் சாஸ்திர ஆய்வு மையத்தையும் இந்த பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இரண்டாம் ஜய்சிங் ஜய்ப்பூர் மகாராஜாவால் இந்தப்பிரதேசம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Wednesday, July 28, 2010

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில்தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவக்கச்சேரி, ஊhகாவற்துறை யாழ்ப்பாணம், ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இச் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இப் பெண்ணின் மரணத்திற்கு இதே வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லயன் தொகுதி இடிந்து விழுந்ததில் 14 குடும்பங்கள் வெளியேற்றம்


நுவரெலியா, நானுஒயா, டெஸ்போட் தோட்டத்தில் நான்கு லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் ஒரு லயன் வீட்டுத்தொகுதியில் உள்ள 14 வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளதோடு இவ் வீடுகளில் உள்ள அனைவரும் உடனடியாக அகற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா பிரதேச அனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் உரையாடினர். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இடம்பெற இருப்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நன்றி- தமிழ் மிரர்

Tuesday, July 27, 2010

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது சவாலான விடயம் - ஸ்ரீகுமார்


இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது பெரும் சவாலாகவே இருக்கின்றது என்று இலங்கைப் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசகர் எஸ்.ஸ்ரீகுமார் பெருந்தோட்டத் தொழிற்துறையின் இன்றைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நுவரெலியாவிலுள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையக்கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் பெருந்தோட்டத்துறையானது சம்மேளனங்களின் தலையீடற்ற துறை, தொழிற்சங்கங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்ற துறை, கூட்டுப்பேரம் பேசுதலின் அடிப்படையிலான உடன்படிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் துறையாகும்.

1998 ஆம் ஆண்டு முதல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கும் முறை அமுல் படுத்தப்படுகின்றது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமும் ஏனைய சலுகைகள் தொடர்பான விடயங்களும் உறுதி செய்யப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான சம்பளம் 405 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படைச் சம்பளமாக 285 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக நிபந்தனைக்கு உட்பட்டதாக 30 ரூபாவும் 90 ரூபாவும் வழங்கப்படுகின்றது.

மேலும் தோட்டத்தொழிலாளியின் மாதாந்த வருமானத்திற்கு மேலதிகமாக மாதாந்தம் 1500 ரூபா சலுகையை அனுபவிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இலங்கையின் பெருந்தோட்டத்துறையைப் பாதுகாப்பது அனைத்துத்தரப்பினரதும் கடப்பாடாகும் என்றார்

Monday, July 26, 2010

பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் அருகில் அமைந்துள்ள மதுபான நிலையங்கள் அகற்றப்படும் - ஆறுமுகன் தொண்டமான்


மலையகத்தில் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் தமக்கு இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான விடுத்த கோரிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் அகற்றும் நடவடிக்கையை அமைச்சர் முன்னெடுப்பாரானால் அதை வரவேற்பதுடன் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் 32 வீதம் இலங்கையின் வறுமை நிலையியில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிப்பது போலவே மதுபாவனையிலும் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது. இந்த இரண்டு விடயத்திற்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறது.

வணக்கஸ்தலங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அருகாமையில் மதுச்சாலைகளும், மது விற்பனை நிலையங்களும் அமைக்கப்படக்கூடாது என சட்டம் கூறுகின்றது. ஆனால் இச்சட்டம் நுவரெலியா மாட்டத்திலே மீறப்பட்டுள்ளது.

பெருந்தொகையான மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள் மலையகத்தின் தொழிற்சங்கவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஊக்குவிக்கப்படுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டும் இருக்கின்றன. உழைக்கும் தொழிலாளியின் உடல் நலத்தையும், உழைப்பையும் இந்த மதுபானம் மலையகத்தில் அட்டையாய் உறிஞ்சுகின்றது.

இதேபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, ஆகிய ஏனைய மாவட்டங்களிலும் அதீத மதுபாவனை ஒழிக்கப்படுவதற்கு இது வழிகாட்டும் என்றார்

Sunday, July 25, 2010

பெருந்தோட்ட கல்வி நிலை

பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் பெற்றோர்களின் பங்களிப்பும் என்ற ஆய்வு அறிக்கையை மலையகக் கல்வித்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கான செயலமர்வு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம் பெற்றது.

மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வுக்கு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா அமைச்சின் செயலாளர் ஷிராணி வீரக்கோன், அமெரிக்காவிலுள்ள டுலேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமரசிங்க, மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஆலோசகர் எல்கடுவ, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த அமெரிக்க டுலேன் பல்கலைக்கழக மாணவர் மைக்கல் போல் மற்றும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிரிவின் கல்வி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட கல்வித்துறை சார்ந்த பலரும்கலந்து கொண்டனர். இந்த ஆய்வு மூலம்

மலையகத் தமிழ் மாணவர்களின் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது.

பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான இடைநிலைப்பிரிவில் ஏற்படுகின்ற மாணவர் இடைவிலகலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

பெருந்தோட்டப்பகுதி மாணவர்களிடத்தில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான பரிகார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் வெளிக்கொணரப்பட்டன.

இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டமொன்றினைத் தயாரித்து அதனை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் வகையில் அரசாங்கம், மலையக அரசியல் தலைமைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் என்பனவற்றின் பங்களிப்பினைக் கோருவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.