மலையக மக்களின் பெரும் சொத்தாகவும், தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கியவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் தன்னையே அர்ப்பணித்த இ.தொ.கா ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 103ஆவது ஜனன தினமான இன்று அவரை மலையகமும், மலையக மக்களும் நினைவு கூரும் நன்னாளாகும்.
அன்னார் தமது 26 வயதினிலேயே இலங்கை இந்திய காங்கிரசிலும், இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவரது தொழிற்சங்கப் பயணமும் அதன் பின் அரசியல் வாழ்வும் கரடு முரடாகவும், சோதனைகளும், வேதனைகளும், உள்ளடங்கியதாகவே இருந்தது.
ஆனால் இவை ஒவ்வொன்றும் இந்திய வம்சாவளி மக்களின் தொழிற்சங்க, சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணிகளாய் அமைந்தன. இவைகள் அனைத்தும் சரித்திரம் படைக்கப்பட்டவை.
முதற்கண் அமரர் தொண்டமானை நாம் அனைவரும் மிக மரியாதையுடன் ஐயா என்று தான் அழைப்போம். எனவே அவர் பிறந்த தின நினைவுகளை வெளிப்படுத்தும் பொழுது அவர் எமது சமூகத்திற்கு செய்து ஈட்டிய அரும்பெரும் காரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
அமரர் தொண்டமான் தொழிற்சங்கவாதியாக ஆற்றிய சேவைகள், போராட்டங்கள் பல. இவரின் தொழிற்சங்க நடவடிக்கைகளே அரசியல் பிரவேசத்திற்கு ஏதுவாக இருந்தது. இவைகளில் வரலாறு காணும் போராட்டமாக உருளவள்ளி போராட்டமாகும். மற்றும் முல்லோயா, கந்தஹேன, ஹைபொரஸ்ட், வனராஜா, கலாபொக்க, மொண்டிகிறஸ்டோ, கடியேன்லேன போன்றவை. தொழிலாளர்களின் உரிமைகளை பெறுவதற்கான நடாத்திய போராட்டங்களாகும்.
அமரர் தோட்டப்புற மக்களின் தொழிற்சங்க, அரசியல் போராட்டங்களோடு நிற்கவில்லை. தோட்டப்புறக் கல்வியை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்திருந்தார். அதன் பயனாகவே தோட்டப்புற பாடசாலைகள் அனைத்தும் இன்று அரசாங்க பாடசாலைகளாக ஆகி உள்ளன. தோட்டப்புற சந்ததிகள் இன்று அரசாங்க உத்தியோகங்களிலும், மருத்துவ, பொறியியல் ஏனைய துறைகளிலும் நுழைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விசேடமாக கூறினால் இந்திய வம்சாவளியினரை நாடற்றவர் என்ற கூற்றிலிருந்து விடுவித்தவர் அமரர் தொன்டமானே! அவரின் விடாமுயற்சியினால் தான். நாடற்றவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் விசேட சட்டம். 1988 நவம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய வம்சாவளியினர் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனார்கள். நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பாரிய பிரச்சினை தீர்ந்தது. இவரின் சாணக்கிய அணுகு முறையினாலும் இவர் தலைமை தாங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலத்தினாலும், இது சாத்தியமானது. இது இல ங்கை சரித்திரத்திலும், சட்டவாக்கத்திலும் தொண்டமான் செய்த பெரிய சாதனையாக விளங்குகிறது.
இவர் வெற்றி கண்ட சாதனைதான் 1989 ஏப்ரல் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம். இந்த சட்டம் புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளராக பதிவு செய்த ஏற்பாடாகும். இந்த இரண்டு சாதனைகளினால் தான் இன்று இந்திய வம்சாவளி மக்கள் தலைநிமிர்ந்து, ஏனைய சமூகத்தவர்களோடு சரிசமமாய் உரிமை பெற்று அரசியல், பொருளாதார, சமூக, கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் பங்கு கொள்ள வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இவர் கல்வித்துறையில் ஈட்டிய சேவைகள் பல. தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்த அயராது பாடுபட்டார். தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தியில் மிக அக்கறை கொண்டார். சிறிபாத கல்வியியல் கல்லூரியில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 75 வீதம் இட ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கோரி வெற்றி பெற்றவரும் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானே. இந்த அங்கீகாரம் பெற அமைச்சரவை விஞ்ஞாபனத்தை வரைவதற்கு நான் கிராமிய கைத்தொழில், உல்லாசத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக இருக்கும் பொழுது அமைச்சர் தொண்டமானால் பணிக்கப்பட்டிருந்தமை எனது பாக்கியமாய் கருதுகிறேன்.
அன்னாரின் நாமத்தை எதிர்கால சந்ததியினர் எடுத்துச் செல்ல வேண்டும். அவரால் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஒரு பொிய ஆலமரமாய் எமக்கு அரசியல், பலத்தையும், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. நகரசபைகள், மாநகரசபைகள், பிரதேசசபைகள், மாகாணசபைகள், பாராளுமன்றம் அனைத்திலும் எமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இந்த பலத்தை நாம் இப்பொழுது விசேடமாக மத்திய மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும், சப்பரகமுவ மாகாணத்திலும் நிரூபித்துள்ளோம். இதை நாம் விரிவுபடுத்தி இந்திய வம்சாவளி மக்கள் வாழும் ஏனைய மாகாணங் களிலும் அரசியல் பலத்தை நிலைநாட்ட வேண்டும். அமரர் தொண்டனைத் தொடர்ந்து இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு தலைமை தாங்கும் அவரின் பேரனாரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கௌரவ ஆறுமுகன் தொண்டமானின் பணி இந்நாட்டு மக் களுக்கு விசேடமாக இந்திய வம்சாவளி மக்களுக்கு மென்மேலும் போய்ச்சேர அனைவரும் ஒன்றுபடல் வேண்டும். அவ ரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
ஆகவே, இன்றைய நாளில் அமரர் விட்டுச் சென்ற பணிகளை கௌரவமாக நினைவு கூர்ந்து எமது அஞ்சலியை அவர் பாதங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
கா.மாரிமுத்து
உப தலைவர்
|
Tuesday, August 30, 2016
Monday, August 29, 2016
தோட்டத் தொழிலாளர்கள் பகடைக்காய்களா?
சம்பள விவகாரத்தில் தோட்டத் தொழிலாளர்களை அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் பகடைக்காய்களாக்கி விளையாடுகின்றனரா என இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 2015ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி கூட்டு ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு ஏற்ப ஏற்கனவே முடிவு செய்த சம்பளத் தொகை மீள்பரிசீலனைக்கான காலம் முடிவடைந்து கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை காரணிகளுக்கு அமைவாக புதிய சம்பள நிர்ணயம் இதுவரைகாலம் இழுத்தடிப்பதற்கு முக்கிய காரணம் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும், அவர்களுக்கு உந்துசக்தியாக செயல்படுகின்ற போலி தொழிற்சங்கங்களுமேயாகும்.
ஒவ்வொரு முறையும் சம்பளப் பேச்சு வார்த்தையின் போதும் தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட நியாயமான சம்பளக் கோரிக்கைகளைத் தட்டிக் கழிப்பதையே தமது செயற்பாடாக முன்னெடுத்து வந்தது கண்கூடு.
இது ஒன்றும் தொழிற்சங்கங்களுக்கோ தொழிலாளர்களுக்கோ புதிய அனுபவம் அல்ல. மாறாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினதும், சில முதலாளிமார்களதும் கொள்ளை இலாபத்தைக் குறிவைத்தே செயற்படுவது முதலாளிமார்களது ஆதங்கம் என்பது அனைவரும் அறிந்ததே.
அதே போன்று தொழிலாளர்கள் பெற்ற சம்பள உயர்வு அனைத்துமே போராடிப் பெற்றதே என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத வரலாற்று உண்மை.
ஆனால் இந்த முறை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கும் அதன் விடாப்பிடித்தன்மைக்கும், முரட்டுப் பிடிவாதத்திற்கும் பின்னணியில் மலையக தொழிற்சங்கவாதிகள் என்று தம்மைக் கூறிக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு முட்டுக்கட்டையாக திகழ்வது குரோத அரசியல் தொழிற்சங்க கோட்பாட்டைக் கொண்ட சக்திகளேயாகும்.
இச்சக்திகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை தோட்ட முதலாளிமார் ஏற்றுக்கொண்டால் தமது கையாலாகத் தன்மை வெளிப்பட்டுவிடும், அதே நேரத்தில், தொழிலாளர் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு தாம் தடையாக உள்ளோம் என்ற உண்மை வெளிப்பட்டு விடுமே என்பதே மூலக்காரணம்.
இந்த சக்திகள் மலையக வரலாற்றிலேயே அனைத்து சம்பள உயர்வுகளையும் பெற்றுக் கொடுத்தது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை இ.தொ.காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு வரலாற்று ரீதியாக முட்டுக்கட்டை போட்ட சக்திகளையும் அவர்களது முகமூடிகள் அவ்வப்போது கிழிக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எது எப்படி இருந்த போதிலும் கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த சம்பளக் கோரிக்கை மிக நியாயமானதும், தொழிலாளர்களின் இன்றைய பொருளாதார நிலைப்பாட்டை மாத்திரமன்றி, தோட்டங்கள் தமது பொருளாதார வனப்பையும் எதிர்கால வளர்ச்சியையும் மையமாகக் கொண்டே முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பதையும், தோட்டத் தொழிலாளர்களினதும், தோட்டத் தொழிற்சங்கங்களினதும் அக்கறை கொண்ட அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது எமது உறுதியான நம்பிக்கை.
எனவே இந்த தொழிற்சங்க கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு வகை செய்யும் விதத்தில் தொழில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலையிட்டு முட்டுக் கட்டையை தகர்ப்பதற்கு ஆக்கபூர்வமான முறையில் செயற்பட வேண்டும்.
இல்லை என்றால் மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள நியாயமான சம்பளக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு, தொழி
லாளர்கள் எப்படி இந்த அரசை ஆட்சி யில் அமர்வதற்கு எவரது சிபாரிசும் வழிகாட் டலும் இன்றி செயற்பட்டார்களோ அதே போன்று இந்த ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கும் வழமை யான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப டும் எனவும் தெரிவித்தார்.
பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ கணேசன் பிரதமரிடம் சிபாரிசு செய்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
“அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுவது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இலக்குகளில் ஒன்றாகும். இதன் மூலமாகவே தோட்டத்துறை வாழ் தமிழ் மக்களின் லயன் வாழ்க்கை முறைமையை முழுமையாக ஒழித்து, வீடில்லா பிரச்சினையை தனி வீடுகள் மூலம் தீர்க்க முடியும். இந்நிலையில், தனி வீடுகளை அமைப்பதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை வீடுகள் கட்டப்படுவதற்கான மூலப்பொருட்களை மலைநாட்டில் திரட்டுவதாகும். இதனால், பாரிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே, மாற்று மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உதிரிப் பாகங்களை தொழிற்சாலைகளில் செய்து, அவற்றைக் கொண்டு வந்து பொருத்தி வீடுகளை சடுதியாகக் கட்டும் திட்டத்தை நாம் ஆராய வேண்டும். உலகின் பல குளிர்வலய பகுதிகளில் சடுதியாக வீடுகள் கட்டப்பட வெற்றிகரமாக வழி ஏற்படுத்தியுள்ள பொருத்து வீட்டுத் திட்டம், மலைநாட்டில் நடை முறையாக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை நாம் ஆலோசித்து பார்க்கவேண்டும். இத்திட்டம் மலையக சீதோஷ்ண நிலைமைகளுக்கு பொருந்துமா என்பது விஞ்ஞானபூர்வமாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறையாக்கப்படுமானால் அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனிவீடுகள் என்ற எங்கள் திட்டம் மலையகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள்ளது.”
அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பொருத்து (இரும்பு) வீட்டுத்திட்டம் அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து, ஆலோசித்து, ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம் என்ற தீர்மானத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் வர முன்னர் உண்மையிலேயே இந்த வீட்டுத்திட்டம் 200 வருடங்களுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு பொருந்துமா? என்பது குறித்து சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது.
வடக்கு – கிழக்கு பகுதிகளில் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்தமை வெறுமனே சீதோஷ்ண நிலைமையை மட்டும் காரணமாக முன்வைத்து அல்ல என்பது அமைச்சர் மனோ கணேசனும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
சீதோஷ்ண நிலைமையைத் தவிர ஏனைய அனைத்து பிரச்சினைகளும் மலையகத்துக்கும் பொருந்தும் என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.
இந்தப் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பான பின்னணியை கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம்.
‘ஆர்சிலர் மிட்டல்’
வடக்கு கிழக்கில் நிறுவப்படவிருந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆர்சிலர் மிட்டல் எனும் பல்தேசிய நிறுவனம்தான் அமுல்படுத்தப் போவதாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதில் பல குளறுபடிகள் இருப்பதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரைகள் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் சர்வதேச பங்குசந்தையில் ஆர்சிலர் மிட்டலின் பங்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதனால், தனது இலாபப்பங்கை இரத்துச்செய்து, நிறுவன விஸ்தீகரிப்புக்கான திட்டங்களை நிறுத்தி, ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை மூடி நிறுவனத்தின் மொத்த கடன் தொகையாகிய 15.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளக்கட்டுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில், தனது இருப்பில் இருக்கின்ற – விற்கமுடியாமல் இருக்கும் இரும்புகளை இலங்கையில் குவிப்பதனால் இலாபத்தை ஈட்ட முடியும் என்றும், இதனாலேயே இலங்கை அரசுக்கு சில சலுகைகளை வழங்குகிறது என்றும், இதே திட்டத்தை கல்வீடுகளாக கட்டித்தருமாறு கேட்டிருந்தால் இச்சலுகைகள் கிடைத்திருக்காது என்றும் பொறியியலாளர் கலாநிதி. முத்துகிருஷ்ண சர்வானந்தன் குறிப்பிடுகின்றார்.
ஆகவே, விற்கமுடியாமல் இருக்கின்ற இரும்புகளை கொட்டும் இடமாக இலங்கையின் வடக்கு கிழக்கை மீள்குடியேற்ற அமைச்சு முதலில் தெரிவுசெய்திருந்தது. அவர்கள் விழித்தெழ தற்போது மலையகத்தை தெரிவுசெய்திருக்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி.
ஏனைய பிரச்சினைகள்
இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் வீடுகள் இரும்பிலான கட்டமைப்புக்களினையும், ஏற்கனவே தொகுதியாக்கப்பட்ட அமைப்புக்களினையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்குமான செலவு ரூபாய் 2.18 மில்லியன் ஆகும் (ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மலையகத்தில் கட்டப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.2 மில்லியன் என்றும், இராணுவத்தினரைக் கொண்டு மீரியாபெத்தை மக்களுக்காக நிறுவப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.3 மில்லியன் என்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஒரு கொங்கிரீட் வீட்டிற்கு அதிகபட்சம் ரூபாய் 1 மில்லியன் மாத்திரமே செலவாகும் என துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, பொருத்து வீடு ஒன்றிற்கு ரூபா 2.18 மில்லியன் என்ற அடிப்படையில் மொத்தம் ரூபா 141 பில்லியன்கள் இந்த வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், தொகுதியாக்கப்பட்ட இரும்புகளைப் பொருத்தி வீடுகள் அமைப்பதற்கு குறைந்த செலவே செல்கிறது. முன்தயாரிக்கப்பட்ட இரும்புத் தகடுகளை வீடு கட்டப்படும் இடத்தில் பொருத்துவதனால் வீடுகட்டுவதற்கான கூலித்தேவை இல்லாதுபோகிறது. எனவே, கல்வீடொன்று கட்டுவதை விடவும் இரண்டு மடங்கு பொருத்து வீட்டுக்கு செலவாகிறது என்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
உலோகத்தினால் வீட்டின் முழுக்கட்டமைப்பும் உள்ளதால் வீட்டை புதுப்பிக்கவோ, திருத்தவோ முடியாத நிலை காணப்படுகிறது. பொருத்திய நிறுவனத்தை நாடி செல்லவேண்டிய நிலை ஏற்படும்.
ஒவ்வொரு வீடும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்கும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், வடக்கே அமைக்கப்பட்டிருந்த வீடொன்றைச் சென்று பார்வையிட்டவர்கள், பின்வருமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்:
அத்திவாரம் பலமாகப்போடப்படவில்லை. கொங்கிரீட் ஒரு படை அளவே அத்திவாரத்திற்கு போடப்பட்டுள்ளது. யன்னல்களுக்கு கம்பிகள் போடப்படவில்லை. வீட்டு யன்னல்களை பொருத்தும் ஆணிகள் வீட்டின் வெளிப்புறமாகவே காணப்படுகின்றன. வீட்டின் சுவர்கள் வீட்டை பொருத்தி ஒரு மாதத்திற்குள்ளேயே பிளவுபடத் தொடங்கிவிட்டதாகவும் அவதானிப்புக்கள் உள்ளது. வீட்டினுள் புகை போக்கிகளோ அடுப்புகளோ அமைக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வாயு அடுப்பு (கேஸ்) வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ் வீடுகளில் வாழும் குடும்பங்கள் எரிபொருளுக்கு வாயு சிலிண்டர்களையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
60 ஆண்டு ஆயுள்காலம்
ஆகவே, இன்னும் 5 ஆண்டுகளில் 50,000 வீடுகளை எப்படியாவது, என்ன செய்தாவது, இரும்பு வீட்டையாவது கட்டிமுடித்து அடுத்துவரும் தேர்தலில் மக்கள் முன் சென்று நிற்பது மட்டும்தானா முற்போக்குக் கூட்டணியின் இலக்கு? 200 ஆண்டுகளுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தரமான வீடுகளை அமைத்துக்கொடுக்காமல் 60 ஆண்டுகள் ஆயுள்காலத்தைக் கொண்ட பொருத்து வீட்டுத் திட்டத்தை கொடுக்க முனைவது எந்தளவு நியாயமாகும்ஸ?
பொருளாதார ரீதியில் வளமில்லாமல் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் என்ன செய்வதுஸ? அதற்கு இந்த லயன் அறை வாழ்க்கை சிறந்தது எனலாம்.
மூலப்பொருள் கிடைப்பதில் தாமதமா?
கல்வீடுகளை அமைக்க மலையகத்தில் மூலப்பொருட்களை திரட்ட முடியாத காரணத்திற்காக பொருத்து வீட்டுத்திட்டத்தை பரிசீலிக்கச் சொல்வது மலையக மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தோற்றப்பாட்டையே காட்டுகிறது. ஒரு கல்வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல், சீமேந்து, கூரை வேய மரங்கள் தேவைப்படுகின்றன. இங்கு அமைச்சர் மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல்லையே குறிப்பிடுகின்றார். வெறும் 50,000 வீடுகளைக் கட்டிமுடிக்க மூலப்பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறும் அமைச்சர் மனோகணேசன் இலங்கையின் ஏதாவது அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றில் இவ்வாறு தாமதம் ஏற்பட்டிருக்கின்றது என்று கூறுவாரா?
அத்தோடு, சீன அரசாங்கத்துடன் நல்லாட்சி அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி நிதிநகரம் (துறைமுக நகரம்) 695 (2011) இலிருந்து 670 ஏக்கராக விஸ்தீரமடைந்திருக்கிறது. 670 ஏக்கர் கடல்பகுதியையும் நிரப்பி நிலமாக்க பெரும்பாலும் மலையகப் பகுதிகளில் உள்ள கருங்கல் மலைகளே குடைந்தெடுக்கப்படவுள்ளன. அங்குள்ள ஆறுகளிளே மணலும் அள்ளப்படவிருக்கிறது. இந்த அபிவிருத்தித் திட்டத்தில் மூலப்பொருளால் தாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்பதை அமைச்சரும் அறிந்திருப்பார். ஆனால், மலையகத்தில் செறிந்து கிடக்கும் மூலப்பொருட்கள் மக்களது அபிவிருத்திக்காக மட்டும் தாமாக தாமதிக்கிறதா?
65,000 பொருத்து வீட்டுத் திட்டத்திற்காக செலவாகும் ரூபா 141 பில்லியனில் அதைவிட இரண்டு மடங்கு கல் வீடுகளை மலையகத்தில் அமைக்கலாம் என்ற விடயத்தை புரிந்துகொண்டு அதனை அமுல்படுத்த பிரதமரின் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல், பசித்தவனுக்கு கஞ்சியைக் காட்டிவிட்டு வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால்ஸ இதையும் விட்டால் ஒன்றும் கிடைக்காது என்ற நிலையில் பொருத்து வீட்டையும் மக்கள் ஏற்கத்தான் செய்வார்கள்.
இவை யாவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் பிரதமரிடம் கிரீன் சிக்னல் கிடைக்கப்பெற்று பொருத்து வீட்டுத் திட்டம் மலையகத்தில் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் அது ஏமாற்றுவதற்கான திட்டம் என்பதை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.
-செல்வராஜா ராஜசேகர் -
(மாற்றம் )
Tuesday, August 16, 2016
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நடமாடும் சேவை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் அதிலும் விசேடமாக வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், துன்புறுத்தல் தாங்க முடியாமால் அந்த வீடுகளில் இருந்து தப்பியோடி தூதரகத்தில் தஞ்சமடைதல், தற்கொலை செய்துகொள்ளுதல் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் திருப்பி அனுப்பாமல் வீட்டு எஜமானர்களால் தடுத்து வைக்கப்படுதல், நீண்ட காலம் வீட்டாரோடு தொடர்புகள் இல்லாத நிலையில் இருத்தல், காணமால் போகுதல், சம்பளம் முறையாக கிடைக்காமை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இவர்கள் முகங்கொடுக்கின்றனர்.
இவ்வாறனவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
நடமாடும் சேவையில் பங்குபற்றுபவர்களின் முறைப்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகயத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு சமர்ப்பித்து உகந்த நடவடிக்கை மேற்கொள்ள பிரிடோ நிறுவனம் உதவிகளை மேற்கொள்ளும்.
இந்த நடமாடும் சேவை 17.08.2016 அன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும். மேற்கூறிய பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதன்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை 0772277441 - 071 4661486 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
நன்றி- அததெரண
Thursday, August 11, 2016
தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ள 2,500 ரூபா
அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்ட 2500 ரூபா தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி இ.தொ.கா தலைமை காரியமான சௌமியபவனில் இடம்பெற்ற தோட்டத் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்ற மலையக தொழிற்சங்கங்களோ, அல்லது இதர சமூக அமைப்புக்களோ எதுவாக இருந்தாலும் மலையக சமூகத்திற்காக பொறுப்பு கூறும் கடையிலிருந்து தவறு விடுவார்களேயானால் வரலாற்றில் மேலும் தவறிழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
மலையக சமூகம் நேற்று இன்றல்ல இரண்டு நூற்றாண்டுகளை கொண்ட சமூகமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. 2,500 ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என மார்தட்டிக் கொள்பவர்களின் அறிக்கை போர்களும் செய்தியாளர்களின் மாநாடுமே திருப்தியை கண்டதே தவிர வேறொன்றுமில்லை.
15,16 நாட்கள் வேலை செய்தாலே போதும் 2,500 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைத்துவிடும் என்று வாய் கூசாமல் கூறி வருபவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மாத்திரமே நாளொன்றுக்கு 100 ரூபா வழங்கப்படுகிறது. அதுவும் அரசாங்கத் தோட்டங்களில் இத்தொகை வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற இக் கொடுப்பனவானது பெருந்தோட்ட மக்களை மேலும் ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக கையேந்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது.
இ.தொ.கா தனது இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லாது தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கிய அமரர் எஸ்.தொண்டமானின் கொள்கைப்படி தொழிலாளர்களை நட்டத்தில் வீழ்த்தாமல் அவர்களது வருமானத்துக்கு தடையில்லாதவாறு சாத்வீக போராட்டங்கள் மூலமாக பிரச்சினைகளை வென்றெடுக்கும். 1984ம் ஆண்டு தொட்டமானின் அணுகுமுறைப்படி பிரார்த்தனை இயக்கம் முழு மலையக தோட்டங்கள் அனைத்திலும் தோன்றியது. மூன்று நாட்களுக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை விடயத்தில் அமரர் தொண்டமான் வெற்றி கண்டார்.
கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும். பிரச்சினை என்றிருந்தால் அதற்கான தீர்வு கட்டாயம் உண்டு. 2,500 ரூபா விடயத்தில் அவர்கள் கூறியபடி தொடர்ந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தொழிலாளர் பிரச்சினையில் ஒருமித்த கொள்கையே அவசியம்
மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின உரிமைகளை பெற போராடும்போது ஒருமித்த கொள்கையுடன் செயற்பட வேண்டுமென அஸீஸ் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத் தொழிலார்களது சம்பள உயர்வு விவகாரத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும். ஆனால் கடந்த 2015 மார்ச் மாதம் 31ம் திகதியுடன் அது நிறைவடைந்து அடுத்த இரண்டாண்டுக்கான புதிய ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை.
இதற்கான காரணம் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாமையே. தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் கொள்கைகளை பற்றி சிந்திக்காமல் தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் ஒருமித் கொள்கையுடன் செயற்பட்டால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் கம்பனிகள், தொழிலாளர்களை ஏமாற்றாத வகையில் கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும்.. அத்தோடு இந்த ஒப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர் நலன் சார்ந்த ஏனைய விடயங்களும் தற்போதைய கால சூழலுக்கேற்ப அமைய வேண்டும்.
இடைக்கால கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் எல்லா தொழிலாளர்களுக்கும் இது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரச பெருந்தோட்ட நிர்வாகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்திலும் கூட்டுத் தொழிற்சங்கங்கள் உரிய கவனம செலுத்த வேண்டும். மலையகச் சமூகத்தின் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கிணங்க சமூகத்தின் ஒற்றுமையிலே இது தங்கியுள்ளது என்றார்.
Wednesday, August 10, 2016
2500 ரூ கொடுப்பனவு- தொழிலாளர்கள் தெளிவற்ற நிலை
தோட்டத் தொழிலாளர்களுக்டகு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு கம்பனி நிர்வாகங்களால் 26-07-2016 தொடக்கம் வழங்கப்பட்டு வரும் 2500 ரூபா கொடுப்பனவு தொடர்பாக தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தெளிவற்ற நிலையில் உள்ளதாக விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் முதலாளிமார் சம்மேளனம் இக்கொடுப்பனவை இரண்டு மாதத்திற்கு மாத்திரம் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஜூன், ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா, தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அறிவித்திருந்தது. 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு அரசாங்கத்துறையில் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் தனியார் துறையில் மாதம் 10,000 ரூபாவிற்குள் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் வரையறை செய்துள்ளது. தனியார்துறையில் சேலை செய்பவர்கள் இன்று 10 ஆயிரம் ரூபாவிற்கு அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை அரசாங்கம் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இக்கொடுப்பனவு வாழ்க்கைச்செலவு என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் கொடுப்பனவு வழங்கப்படுவது அவசியமாகும்.
தோட்டக்கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பைக் கோரும்போது இதன் காரணமாக பாரிய சிக்கல்கள் தோன்றலாம். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 2,500 ரூபா வங்கிகளிலிருந்து கடனாக பெற்று வழங்கப்படுகின்றது. இதற்கான வட்டியை தொழிலாளர்களின் சம்பளத்தில் அறவிடவுள்ளனர். இந்த நடைமுறை தொழிலாளர்களின் இடைக்கால கொடுப்பனவில் மட்டுமே உள்ளது.
கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில் தோட்டங்கள் உப குத்தகைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இது இவ்வொப்பந்தத்துக்கு எதிரான செயற்பாடாகும். நிலவிவரும் வரட்சியினுடனான காலநிலையினால் அதிகமான தோட்டங்களில் பறிக்கப்படும் பச்சைக்கொழுந்து கிலோ 25 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனாதல் தனியார் துறையினரின் பச்சைச்கொழுந்து கிலோ 65 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. இது தொடர்பாகவும் அரசாங்கம் அறிந்திருக்கின்றது.
தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் வீட்டுரிமை பெற்றுக்கொடுப்பதிலும் இழுபறி நிலையே இருந்து வருகிறது 07 பேர்ச் காணியில் வீட்டுரை கொண்டவர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது அவசியமாகும். இவ்விடயங்களில் தொழிற்சங்கங்கள் பேதங்களை மறந்து செயற்பட்டால் மாத்திரமே தொழிலாளர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றாhர் கிருஷ்ணசாமி.
Subscribe to:
Posts (Atom)


