Thursday, January 10, 2013

நான்கு மாவட்டங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை!






நிலவும் சீரற்ற காலநிலையால் நான்கு மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளுக்கே இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பகுதிகளுக்கும் கண்டியில் மெதும்பர, பாதஹேவாகெட்ட, கங்கவடகொறள ஆகிய பகுதிகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பதுளையில் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து செயலகப் பிரிவுகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாத்தளையில் இரத்தோட்டை, உக்குவெல, மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 8, 2013

கண்டி, மாத்தளையில் தொழிற்சங்க செயற்பாடுகளை விரிவு படுத்த இ.தொ.கா. நடவடிக்கை

கண்டி,மாத்தளை மாவட்டத்தின் தொழிற்சங்க மற்றும் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தி செயற்படுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள,கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கண்டி வை.எம்.பி.ஏ.பிரதான மண்டபத்தில் மாநில கமிட்டிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன.அரச பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், கொடுப்பனவுகள் சம்பந்தமாகவும் வருகை தந்திருந்தோர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

புரியாத புதிர் : மலையகத் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கையில் குறைவடைந்து காணப்படுவது ஏன்?

புரியாத புதிர் : மலையகத் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கையில் குறைவடைந்து காணப்படுவது ஏன்?                                                               என்.சத்தியமூர்த்திஇன்னமும் தெளிவற்ற ஒரு விடயமாக இருப்பது, வன்னிப் பகுதியில் நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரில், வன்னியில் மீள்குடியேறிய எத்தனை மலையகத் தமிழர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்தார்கள் என்பதுதான். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை அல்லது இழப்புகளின் எண்ணிக்கையை ஏற்க வெட்கப்பட்டு விலகிச் செல்வதாக தெரிகிறது. ஸ்ரீலங்காத் தமிழர்கள்கூட இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.
பொய்கள், மட்டமான பொய்கள், இவைதான் புள்ளி விபரங்கள் - என்று ஒரு பழமொழி உண்டு. ஸ்ரீலங்காவில் குடிசன மதிப்பை மேற்கொண்ட அலுவலர்கள், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மக்கள் தொகையை கணக்கிடும் மிகவும் கடினமான பணியை, அதுவும் குறிப்பாக யுத்தத்துக்கு பிந்திய காலப்பகுதியில் மிகவும் சிறப்பாக மேற்கொண்டதுக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் இந்த நடவடிக்கையில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் புள்ளிவிபரங்கள்,பதில்களை விட அதிகம் கேள்விகளையே எழுப்புகின்றன. அல்லது அப்படித் தோற்றமளிக்கிறது.
2011 ம் ஆண்டின் குடிசன மதிப்பு புள்ளிவிபரங்கள் ஒரு காரணத்துக்காக மட்டுமன்றி பல காரணங்களுக்காக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 1981க்கு பின்னர் முதல் தடவையாக நடத்தப்பட்ட தலைகளின் கணக்கெடுப்பு நாடளாவிய ஒரு விவகாரமாக கருதப்பட்டது, ஏனெனில் போரின் தலையீடுகள் உள்ள வருடங்களில் அதன்விளைவாக ஏற்பட்ட மரணங்கள் மற்றும் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட புலம் பெயர்வுகள், அதற்கான முக்கிய காரணம். இன்று, குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் தனித்துவமான இனங்கள்,போன்றவற்றுக்கு அரசாங்கம் நடத்தும் அபிவிருத்தி திட்டங்கள் சம அடிப்படையில் சென்று சேரவில்லை, என்பதை அரசாங்கம் குறித்துக் கொள்ளவேண்டும் என்று சனத்தொகை எண்ணிக்கையும் மற்றும் அதன் வளர்ச்சி விகிதமும் பெருமளவில் உறுதிப்படுத்தியுள்ளன.
போருக்கு பிந்தைய காலத்தில் வாக்களிப்பு பற்றிய கருத்துக் கணிப்புகள், குறிப்பாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் வடமாகாணத்தில், பழைய சனத்தொகையின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் என்பனவற்றின் அடிப்படையில் கணக்கிடும்போது, வாக்களித்தவர்களின் விகிதாசாரம் பற்றி திரிபுபட்ட ஒரு எண்ணிக்கையையே வழங்கியுள்ளன. தேர்தல் ஆணையகம் இதிலிருந்து அதன் புள்ளிவிபரங்களை மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. 2011 சனத்தொகை மதிப்பீட்டின்படி இப்போது அந்த எண்ணிக்கைகள் மனித சக்திக்கு உட்பட்டு முடிந்தவரை நெருக்கமாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவம்,அதைப்பற்றி பெருமிதமடைவதற்கு  சனத்தொகை தொடர்பான ஒரு பின்னகர்வையும்கூட கொண்டிருக்க வேண்டும். இந்தப் பின்னணியில் அந்த எண்ணிக்கைகள் அது வழங்கியுள்ள விடைகளைவிட அதிக கேள்விகளையே எழுப்பியுள்ளன. அவற்றை கருத்தில் கொள்ளும்போது, அவை ஒரு பாரம்பரியமான 30வருட தலைமுறை இடைவெளியையும், மற்றும் போருக்கு பிந்தைய சனத்தொகை மற்றும் புலம்பெயர்வு என்பனவற்றின் நிலைபேறுகள் பற்றிய குறிகாட்டிகளின் முதல் அறிகுறிகளுடனும் தொடர்புள்ளதாக உள்ளன. அவை சில கதைகளைச் சொல்கின்றன,அவை என்ன சொல்ல விரும்புகின்றன,எதைச் சொல்ல விரும்பவில்லை என்பதை குறித்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகள், சில வெளிப்படுத்தல்களை வெளிக் கொணர்ந்துள்ளன. கடந்த தசாப்தங்கள் மற்றும் வருடங்கள் முழுவதிலும், நாட்டிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி, சிங்களவர்கள், ஸ்ரீலங்காத் தமிழர்கள், மற்றும் மலையகத் தமிழர்களின் வளர்ச்சி நிலையைக் காட்டிலும் மிகமிக உயர்வாக உள்ளது, என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய போக்கு, பல மத,மற்றும் பல் இன சனத்தொகை கொண்ட நாடுகளில் ஏனைய சமூகத்தவர்களிடையேயும் அடிக்கடி அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே ஸ்ரீலங்கா இதற்கு விதிவிலக்கு என்று சொல்ல முடியாது.
வரும் வருடங்களில் மற்றும் தசாப்தங்களில்,கணிப்புகள்; மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் சனத்தொகை  பல வருடங்களுக்கு அல்லது தசாப்தங்களுக்குப் பிறகு தற்போதுள்ள பெரும்பான்மை சிங்களவர்களின் சனத்தொகையிலும் அதிகமாக இருக்கும் என விவாதிப்பது சாத்தியமான ஒன்றல்ல. இந்தியாவை போன்ற பல்லின சமூகங்கள் உள்ள நாடுகளில் அப்படி நடந்துள்ளன. அது எதையும் கருதவோ சொல்லவோ இல்லை. ஸ்ரீலங்கா அத்தகைய அபத்தத்துக்களில் விழுந்துவிடக் கூடாது, அது அதன் வருங்கால சந்ததியினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி போவதானால் 1981 மற்றும் 2011 க்கு இடைப்பட்ட 30 வருடங்களுக்கு மேலான காலத்தில், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் சனத்தொகையின் வளர்ச்சி விகிதம் மிகவும் உயர்வான எண்ணிக்கையான 76.4 விகிதமாகும் - 1,046,900 என்கிற எண்ணிக்கையிலிருந்து 1,869,800 ஆக உயர்ந்துள்ளது. இது 38 விகித அதிகரிப்பான சிங்களவர்களின் சனத்தொகையுடன் ஒப்பிடும்போது, அது 10,979,400 என்கிற எண்ணிக்கையிலிருந்து 15,873,800 என்கிற எண்ணிக்கையிலேயே உயாந்துள்ளது. ஒரு தற்செயல் சம்பவமாக, நாட்டிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை வளாச்சிவிகிதம் பெரும்பான்மை சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்திலும் இரு மடங்காக உள்ளது.
நாட்டின் தேசிய தலைநகரமாகிய கொழும்பை நகரமயப்படுத்தும் எந்த திட்டமும்  முஸ்லிம்களின் சனத்தொகை வளாச்சி விகித்தத்தை பாதித்ததாகத் தெரியவில்லை. இந்த இடத்தில்தான் அரசாங்கம் மற்றும் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசியல்வாதிகள், அடிக்கடி உலகத்தின் எந்த நாட்டின் தலைநகரத்திலும் பல்லின சிறுபான்மையினர் எண்ணிக்கையில் அதிக அளவில் உள்ளார்கள் என வாதம் செய்கிறார்கள். அது முற்றாக உண்மையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை ஆனால் அதில் ஒரு சிறு உண்மையும் இருக்கலாம்.
மற்றவைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீலங்கா மற்றும் கொழும்பு ஆகிய விடயங்களில்,கொழும்பானது நாட்டின் பிரதானமான வேலை வழங்கியாக உள்ளது. எனவே இதில் திறமையாக வாதிக்க கூடியதாக உள்ளது, சிங்கள - பௌத்த பெரும்பான்மையினர் தங்கள் உடனடி சுற்றுப்புறங்களில் மிகவும் நன்றாகவே வாழ்கிறார்கள், நாட்டிலுள்ள ஏனைய மூவின சிறுபான்மையினரும் பெருமளவில் செய்து வருவதைப்போன்ற ,சிறந்த கல்வி,மற்றும் தொழில் தேடி உள்ளக புலம்பெயர்வுக்கு ஆளாகவேண்டிய அழுத்தம் அவர்களுக்கு இல்லை என்பதையே.
கடந்த 30 வருடங்களில் கொழும்பில் சனத்தொகை பெருக்கம். முறையே சிங்களவர்கள் 34.3 விகிதமாக உயர்ந்துள்ள அதேவேளை அதற்கு எதிராக முஸ்லிம்களின் சனத்தொகை விகிதம் அதி உயர்ந்ததாக 73.7 விகிதத்தால் உயர்ந்து உள்ளது, ஸ்ரீலங்கா தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு (வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள யுத்த நெருக்கடியின் அவசியம் காரணமாக), 35.5 விகிதத்தால் அதிகரித்து உள்ளது, மற்றும் மலையகத் தமிழர்களின் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகை 37.7 விகிதத்தால் உயர்ந்துள்ளது. இதில் மற்றொரு விடயமாக அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான சனத்தொகை அடிப்படையான விவாதங்களில் எவ்வாறு ஸ்ரீலங்காத் தமிழர்கள் ஒருகாலத்தில் யுத்த வலயமாக இருந்த இடத்தைக்காட்டிலும் அதற்கு வெளியே அதிக அளவில் வாழ்ந்து வருகிறார்கள் எனச் சுட்டிக்காட்டி வருகிறது.
முஸ்லிம்களுக்கம் மற்றும் சிங்களவர்களுக்கும் அப்பால் ஸ்ரீலங்கா தமிழர்களின் சனத்தொகை, மரணங்கள், வெளிநாட்டு புலம் பெயர்தல் உட்பட்ட நிரந்தர இடப்பெயர்வுகள் காரணமாக பெரிதும் பாதிப்படைந்துள்ளது, மற்றவைகளுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவில் 20.3 விகிதமே அதிகரித்துள்ளது. இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் கடந்த 30 வருடங்களில் 1,886,900 என்பதிலிருந்து 2,270,900 ஆகவே உயர்ந்துள்ளது. சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை போர் பெரிதும் பாதித்திருக்கலாம், ஆனால் உண்மையான எண்ணிக்கையை அது பெரிதும் பாதிக்கவில்லை, ஸ்ரீலங்கா  தமிழ் கலாச்சாரத்தின் கோட்டையாக திகழ்வதும் மற்றும் சமூகம் சார்ந்த அரசியலை இயக்குவதுமான, யாழ்ப்பாணத்தை பார்த்தால்,அது தொடர்ந்தும் நாட்டில் சனத்தொகை அதிகம் செறிந்து வாழும் இடங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது (1981 ல் கொழும்புக்கு அடுத்து இருந்த இரண்டாம் இடத்தை அது தவற விட்டிருந்த போதும்கூட). போரினால் சீரழிந்த வடமாகாகணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்கள்,மிகவும் குறைந்த சனத்தொகை அடர்த்தியுள்ளனவற்றில் சிலவாகவே உள்ளன. இதேபோல அவை இன்னமும் பல தசாப்தங்களுக்கு அல்லது வரும் நூற்றாண்டு வரும்வரையில் இருந்துகொண்டே இருக்கும்.
இன்னமும் மலையகத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் அதில் ஒரு ஆழ்ந்த மர்மம் சூழ்ந்துள்ளது, ஒரு 30 வருடகாலத்தில் அவர்களது சனத்தொகை பெருக்கம் மிகவும் வருந்த தக்க அளவில் மிகவும் சிறிய அளவான 2.8 விகிதத்தாலேயே அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது சகல வழிகளினாலும் போரினால் பாதிக்கப்பட்டு, குறிப்பாக சனப்பெருக்கத்துக்கு காரணமான வயதுள்ள, ஆண்களும் மற்றும் பெண்களும் மரணத்தையும் இடப்பெயர்வையும் (வெளி நாடுகளுக்கும்கூட) சந்தித்த ஸ்ரீலங்கா தமிழர்களைக் காட்டிலும் 10 மடங்கு சிறியது.
இதன்படி மலையகத் தமிழர்களின் சனத்தொகை 812,700 இலிருந்து 842,300 ஆக கடந்த முப்பது வருடங்களில் உயாந்துள்ளது. உண்மையில், இந்த சமூகம் அநேக எண்ணிக்கையிலானவர்களை, 1964ம் ஆண்டு இருநாட்டு பிரதமர்களினதும் பெயர்களினால் மேற்கொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தப்படி மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ குடிபெயர்வு காரணமாக இந்தியாவுக்கு அனுப்பியதன்மூலம் இழந்திருக்கிறது. இன்னும் அநேகமானவாகள் ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த நாற்பதுகளின் பிற்பகுதியில்  உருவான சட்டத்தின் பிரகாரம் அன்று முதல் பல தசாப்தங்களாக பிரஜா உரிமையற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இருந்தாலும் ஜனாதிபதி  சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அரசாங்கங்கள் அந்த நாதியற்றவர்களுக்கு பிரஜா உரிமைகள் வழங்கி மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகமாக அவர்களை உள்வாங்கும் முயற்சிகளை ஆரம்பித்து வைத்தன.
ஆனால் எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால்,  இந்திய தமிழர்களின்( சனத்தொகை படிவத்தில் குறிபிட்டுள்ளபடி) சனத்தொகையின் எண்ணிக்கை, இன்னமும் யதார்த்த கள நிலைமையில் உள்ளதைத்தான் பிரதிபலிக்கிறதா? என்பதுதான். அது அப்படியானால்? அது ஏன்? கேள்விகள் இலகுவாக இருந்தாலும் அவற்றுக்கான பதில்கள் சிக்கலானவை. இங்கு புள்ளிவிபரங்கள் இதற்கான பதிலை வழங்கக்கூடிய நிலையில் இல்லை. இங்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக குறிப்பிடத்தக்க அளவிலானவர்கள் குடிபெயர்ந்துள்ளார்கள்,அந்த எண்ணிக்கை நியாயமாகவும் மற்றும் சரியாகவும் பரிசீலிக்கப்பட வேண்டும். இங்கு குடிசன மதிப்பு புள்ளி விபரங்கள் தயாராக உள்ள விடைகளை வழங்க முடியாது, இதற்கு சமூகவியல் கற்கைகள் மட்டுமே உதவ முடியும். அவைகள் பின்பற்றப்பட வேண்டும்.
இல்லையேல் ஐம்பதுகளில் நாடற்ற நிலையிலிருந்த இந்தியத் தமிழர்கள் தற்பொழுது தங்களை ஸ்ரீலங்காத் தமிழர்கள் என்று பதிவு செய்திருக்க வேண்டும் என்று நம்பப்;படுகிறது, ஏனென்றால் தாங்கள,; தங்கள் முன்னோர்;களின் தாய் நாடானதும், ஆனால் தற்போது இங்கு இருக்கும் அந்த நாளைய இளைய தலைமுறையினருக்கு  இன்னமும் ஒரு அன்னிய தேசமாக உள்ள இந்தியாவுக்கு நாடுகடத்தப் படுவதை  தவிர்ப்பதற்காகவும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.
மலையகத் தமிழர்களின் அடையாளமாக பிரதானமாக,  சாதி மற்றும் கல்வித் தரங்கள் என்பன இங்கு செல்வாக்கு செலுத்தி, குறிப்பாக அநேகரை தங்களை வெளிப்படுத்தவைத்து அவர்களை  சமூக உணர்வுகளுடன இணைக்கின்றன. கொழும்பு மற்றும் தமிழ் பகுதிகளில் வழக்கமாக ஸ்ரீலங்காத் தமிழரின் அடையாளங்களை கடன் வாங்க வைக்கின்றன. இதன்படி இது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் ஒரு சிங்கள பௌத்த அடையாளம் கூட மாறியிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக நம்பப்படுகிறது. திருமணங்கள் மற்றும் குடியேற்றங்கள் கூட குறிப்பாக இறுதியில் கூறப்பட்ட விடயத்துக்கு உதவியாக அல்லது வசதியாக இருந்துள்ளது.
இருந்தாலும் அது இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்திய தமிழர்களை ஆரம்பத்திலிருந்தே நாடற்றவர்கள் மற்றும் வாக்குரிமையற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ள, சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அரசாங்கங்;கள் திட்டமிட்டு செயற்பட்டதால், சிலர்  தாங்கள் பிரதானமாக வாழ்ந்த மலைப் பிரதேசமான மத்திய மாகாணத்தை விட்டு, ஒரு காலத்தில் சன அடர்த்தி குறைவாக இருந்த வட மாகாணத்தின் வன்னிப் பகுதியில் குடியேறினார்கள். தமிழர் எதிர்ப்பு கலவரங்கள், மலையகத் தமிழர்களையும் விட்டு வைக்காதபடியால், வன்னிப்பகுதியை நோக்கி இடைப்பட்ட தசாப்தங்களில் அவர்கள் பெருமளவில் குடிபெயர அதுவே முக்கிய காரணமாயிற்று.
இன்னமும் தெளிவற்ற ஒரு விடயமாக இருப்பது, வன்னிப் பகுதியில் நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரில், வன்னியில் மீள்குடியேறிய எத்தனை மலையகத் தமிழர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்தார்கள் என்பதுதான். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை அல்லது இழப்புகளின் எண்ணிக்கையை ஏற்க வெட்கப்பட்டு விலகிச் செல்வதாக தெரிகிறது. ஸ்ரீலங்காத் தமிழர்கள்கூட இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. அரசாங்கம் தெரிவிக்கும் எண்ணிக்கையின்படி ஒருவர் செல்வதாக இருந்தால் போரில் இழப்பு பூஜ்ஜியம். தொண்டு நிறுவனங்களின் ஆதாரமற்ற எண்ணிக்கைகளின்படிதான் செல்ல வேண்டும், ஆனால் மொத்த இழப்பை வெளியிடுவதில் அவர்கள் தமக்குள்யேயே ஒரு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள், இனப்பிரிவுகளை வெளிப்படுத்தும் புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை.
ஸ்ரீலங்காத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக மேலும் மேலும் போராட்டம் நடத்தினார்கள், அதன் பெயரால் போராடிய அவர்களில் பலருக்கு அதன் அர்த்தம், வழிகள், அல்லது முதற்கட்டமாக  அந்த உரிமைகளை பயிற்சி செய்து பார்ப்பதற்கான சாத்தியமான தேவைகள், பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்தியத் தமிழர்களோ தாங்கள் உயிhவாழ்வதற்காக போராடினார்கள். முதலில் ஒரு மனிதப் பிறவியாகவும், பின்னர் ஒரு ஸ்ரீலங்கா  பிரஜையாகவும் மதிக்கப்பட வேண்டி அவர்கள் போராடினார்கள். இன்னும் சொல்வதானால் அவர்கள் இன்னமும் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை இன்னமும் கைவிட்டு விடவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் கல்வி விடயங்களிலோ மற்றும் சமயப்பணிவகையான ஞான மார்க்கங்களிலோ தவறிவிட்டார்கள் என்று அதன் அர்த்தமாகாது. நாடுகளில் மற்றும் சமூகங்களில் ஒரு சிறிய குடும்ப நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு கல்வி மற்றும் அதன் விளைவாக பெறப்படும் அறிவு என்பவைதான் சக்திமிக்க காரணிகளாக இருப்பின் பின்னர் ஸ்ரீலங்காவில் வாழும் இந்தியத் தமிழரிடம் அவை அனைத்தும் உள்ளன. அல்லது அந்த நெறிமுறைகள்;தான் அரசாங்கங்களை நம்ப வைக்க பயன்படுகின்றனவா. அதனால்தான் அரசாங்கங்கள் தங்கள் மக்கள் அவற்றை நம்பும்படி செய்ய முயல்கின்றனவா. மற்றும் அதைத்தான் 2012 சனத்தொகை கணக்கீடும் நம்மிடம் சொல்கிறது.
ஆனால் மலையகத் தமிழர்களின் கல்வித் தரங்கள் என்று வரும்போது யதார்த்தம் வேறுவிதமானது. இப்போது அவர்களிடையே அநேக அறிவுள்ள இளைஞர்கள், பட்டதாரி ஆண்கள் மற்றும் பெண்கள் என்று பலர் உள்ளனர். அது கருதுவது அல்லது சொல்வது எதுவுமில்லை. ஒரு காலத்தில் ஒற்றைக்கல் சிறபத்தை போல தனியொரு இயக்கமாக அரசியலிலும் மற்றும் சமூகத்திலும் மலையகத் தமிழர்களை பிரதிநிதிப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், வடக்கிலும் தனது அலுவலகங்களை வைத்திருந்தது, ஆனால் இன்றோ அது ஒரு காலத்தில் இருந்ததைபோல ஒற்றைக் கல் சிற்பமும் அல்ல, தனிப் பிரதிநிதியும் அல்ல.
ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கூட அவர்களையும் அவர்களின் தேவைகளையும் நல்ல திறமையான ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக பயன்படுத்தவில்லை. நாட்டின் ஏனைய பாகங்களைவிட பயண வசதிகள் மற்றும் வெளியிடங்களுடனான தொடர்பாடல் வசதிகள் குறைவானதுமான, கடினமான மலையகத் தமிழ் பிரதேசங்களில் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள சில அலுவலகங்கள் மட்டும்; உள்ளன, அங்கு அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு மும் மடங்கிலும் அதிகமான தலைவர்கள் உள்ளார்கள். அவர்களின் அரசியல் கூட குறிப்பாக காலம் சென்ற தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் தங்களது தனிப்பட்ட  கர்வம்,பணம்,மற்றும் பதவி நிலைகளுக்கு வேண்டி சற்று அதிகமாக நடத்தப்படும் போராட்டமாகவே உள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் இதன்படி,இன்னமும் எங்களுக்கு ஒரு கதையைத்தான் சொல்கிறது, அவை சொல்லவேண்டியதைவிட அதிகமானவற்றை மறைக்கிறது. அவை மறைப்பதைவிட அதிகமானவற்றை வெளியே சொல்கின்றன.
(இந்த எழுத்தாளர்,புது தில்லியை தலைமையிடமாக கொண்ட பன்முக இந்திய பொது கொள்கை ஆலோசனை மையமான, ஒப்சேவர் றிசேச் பவுண்டேசனின்(ஓ.ஆர்.எப்) பணிப்பாளரும் மற்றும் மூத்த சக ஆராய்ச்சியாளருமாவார்)
நன்றி தேனீ மொழிபெயர்ப்பு:; எஸ்..குமார்

Sunday, December 25, 2011

தொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என்ன?

அண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை மீறும் பல செயற்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களே ஏற்றுக்கொள்கின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் நேரடி தலையீடு இல்லாத காரணத்தினால் பல நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு சில தோட்டங்களில் இடம்பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்கள் தோட்டக்கம்பனிகளின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை என்பதாகும். அப்படியாயின் சில தோட்டங்களுக்குள் என்ன தான் இடம்பெறுகின்றன? உண்மையைக்கூறப்போனால் ஒரு சில தோட்ட முகாமையாளர்கள் அதிகாரத்தை தமது கைக்குள் எடுத்துக்கொண்டு தொழிலாளர்களை படுத்தும்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

ஒரு சில தோட்டங்களில் இவர்கள் செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் ஆங்கிலேயர் யுகத்திற்கு தோட்டங்கள் சென்று விட்டனவோ என்று தான் கூற வேண்டியுள்ளது. தமது தனிப்பட்ட அதிகாரங்களை தொழிலாளர்கள் மீது திணித்து அதில் இன்பம் காண்பதில் அக்காலத்தில் பல ஆங்கிலேய துரைமார்கள் தான் பெயர் பெற்றிருந்தனர்.

இக்காலத்திலும் இவர்கள் இவ்வாறு செயற்படுவது தொழிலாளர்களை ஆத்திரத்தின் விளம்பிற்கே கொண்டு சென்றிருப்பதை மறுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே வேலை மற்றும் சம்பள புறுக்கணிப்பு, ஆர்ப்பாட்டங்கள், தோட்ட முகாமையாளரை அறைக்குள் வைத்து பூட்டுதல் என இன்னோரன்ன செயற்பாடுகளில் தொழிலாளர்கள் இறங்குகின்றனர்.

பிரதான பிரச்சினைகள் தான் என்ன?

தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் பிரதான பிரச்சினையாக அதிக எடை கொழுந்து எடுக்கும்படி தொழிலாளர்களை நிர்பந்திக்கும் விடயத்தை கூறலாம். எனினும் இது கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய விடயமாகையால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் இதில் நேரடியாக சம்பந்தப்படுகின்றன.

குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவு கொழுந்து குறைந்தால் (சராசரி) அதிக கிலோ கொழுந்து பறிக்கும் படி தொழிலாளர்களை நிர்வாகங்கள் கோறுவது வழமையான ஒரு விடயம்.

இது பல தோட்டங்களில் இடம்பெறும் சம்பவமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் கூட இப்படியான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. கூடுதல் கொழுந்து எடுக்கப்படும் விடயத்தை நிர்வாகம் தோட்ட கமிட்டி தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்திற்கு ஒரு தொகை பணம் வழங்கப்படுகிறது.

எனினும் கொழுந்து இல்லாத பருவத்தில் அதிக எடை கொழுந்துகள் பறிக்கும் படி தொழிலாளர்களை கோருவது நியாயமில்லாத செயல். இதன் காரணமாகவே முறுகல் நிலை எழுகின்றது. அண்மையில் அட்டன் எபோட்ஸ்லி தோட்ட மொண்டிபெயார் தோட்டத்திலும் வெளிஓயா தோட்டத்திலும் இப்பிரச்சினைகள் எழுந்தன.

மொண்டிபெயார் பிரிவு தொழிலாளர்கள் எதிப்பை காட்ட அனைவருக்கும் நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட முகாமையாளர் சம்பளம் கொடுக்க வந்ததையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். எனினும் வெளியா தோட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவே வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதற்குக் காரணம் வேலை செய்யாவிடின் இராணுவத்தினரை வரவழைப்போம் என தோட்ட நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுபவம் இல்லாத முகாமையாளர்கள்

இதே வேளை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இளம் வயது தோட்ட முகாமையாளர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதிலும் வேலை வாங்கும் அணுகு முறைகளிலும் அனுபவம் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அட்டன் பகுதியில் ஒரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் வளரும் புற்கள் விரைவாக அழிய மருந்து கலவையுடன் பெற்றோலை கலந்து அடிக்க வேண்டும் என ஒரு முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். மற்றுமொரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்தை முகாமையாளர் தெளிக்கச்சொன்னதால் பல ஹெக்டயர் தேயிலைச்செடிகள் கருகி விட்டன.

இதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கும் குறிப்பிட்ட தோட்டத்தொழிலாளர்கள் தயங்கவில்லை. மேலும் கவ்வாத்து வெட்டுதல் ,கன்றுகளை நட குழி போடுதல், அகழி அமைத்தல் போன்ற மிக முக்கியமான விடயங்களில் அடிப்படை அறிவு இல்லாத முகாமையாளர்களினாலேயே முறுகல்கள் இடம்பெறுவதாக இத்தொழிலில் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இப்போதுள்ள இளம் முகாமையாளர்கள் இத்தொழிலில் உள்ள சூட்சுமங்களை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை என பல சிரேஷ்ட ஓய்வு பெற்ற தோட்ட முகாமையாளர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சங்கங்களின் நிலை என்ன?

நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான பிரச்சிகளை தீர்த்து வைக்கும் நியாயம் கூறும் பிரதான கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு ,காரணம் அதற்காகத்தான் சந்தாப்பணம் அறவிடப்படுகிறது.

பிரதான தொழிற்சங்கங்கள் பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வைத்துள்ளன. எனினும் அண்மைக்காலமாக தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லையோ என்ற சந்தேகமும் நிலவுவதில் ஆச்சரியம் இல்லை. பல தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றும் கூறலாம்.

எனினும் பல தொழிற்சங்கங்களின் பிராண வாயுவாக இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிக அக்கறை கொண்டு பார்த்தல் அவசியம். தொழிலுறவு அதிகாரிகளும் தொழிற்சங்க காரியாலயங்களும் இப்பணியை செய்து வருகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக பேசும் அதிகாரிகளும் இல்லாமலில்லை.இதற்குக் காரணம் இவர்கள் தமது நாட்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே? பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படும் நிலை ஏற்பட்டதால் தான் பல தொழிலாளர்கள் தமது பாரம்பரிய தொழிற்சங்கங்களை விடுத்து ஏனைய தொழிற்சங்கங்களை நாடுகின்றனர்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில பேரினவாத தொழிற்சங்கங்கள் இலகுவாக தோட்டப்பகுதிகளுக்குள் ஊடுறுவுகின்றன. விளைவு ? தொழிற்சங்க அங்கத்துவம் சின்னா பின்னமாகி போகின்றது. ஏற்கனவே குறித்த தோட்டத்திற்கு திட்ட மிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பழைய தொழிற்சங்கத்தால் நிறுத்தப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதிகளும் தான்.

நட்புறவுடன் பழகும் நிர்வாகங்கள்

பெருந்தோட்டப்பகுதிகளில் எல்லா நிர்வாகங்களும் தொழிலாளர்களை தமது அதிகார அழுத்தங்களால் ஆள்கின்றன என்று கூற முடியாது.ஒரு சில கம்பனிகளுக்கு கீழ் வரும் நிர்வாகங்கள் சிறந்த நட்பை தொழிலாளர்களிடத்தே பேணி வருகின்றன.

இவ்வாறான தோட்டப்பகுதிக்குள் அதிக எடை கொழுந்து பறித்தல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இங்கு தொழிற்சங்கங்களுக்கும் அதிக வேலை இராது.கூறப்போனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை கண்டு கொள்வதேயில்லை எனலாம்.

எனினும் தற்போதைய சூழ்நிலைகளில் தேயிலை தொழிற்றுரையானது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது எனலாம். பல தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் தேயிலை அல்லாத மாற்று பயிர்ச்செய்கை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நஷ்டத்தை காரணங்காட்டி பல தோட்டங்கள் இன்று மூடப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான விளைவை தரப்போகின்றது. அதாவது பெருந்தோட்டப்பகுதி வருமானத்தில் தங்கியிருத்தல் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகப்போகின்றது.

ஒரு கட்டத்தில் இந்த தொழிலாளர்கள் வர்க்கம் எமக்கு தேவையில்லை தேயிலை தொழிலில் நாம் தங்கியிருக்கவில்லை என அரசாங்கமே கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே இந்த எதிர்கால அபாயத்தை கருத்திற்கொண்டு சரி தொழிலாளர்களும் ,தொழிற்சங்கங்களும் ,அசியல் கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருதல் காலத்தின் தேவை. நிர்வாகத்துடனான முறுகல்களை குறைக்கும் வகையில் திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் தொழிற்சங்க பிரமுகர்களின் கடமையாகும்.



18 வருடங்களில் 50 தேயிலை இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டன

கடந்த 18 வருடகாலத்தில், தனியார் மயப்படுத்தப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் இலங்கை தோட்ட சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் தம்மிக ஜயவர்தன மற்றும் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில் தோட்ட நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகஸ்தர்களின் சம்பள பாகுபாடு, தோட்டங்களில் தங்குமிட வசதியின்மை, உத்தியோகஸ்தர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, உத்தியோகஸ்தர்களின் வீடுகள் புனரமைக்கப்படாமை, தோட்டத்துறைக்கான முறையான விவசாய கொள்கைகள் வகுக்கப்படாமை போன்றன தோட்டத்துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பல தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளபோதிலும் தோட்ட உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோட்டங்களின் உரிமையாளர்கள் தவறியுள்ளதாக தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்குமுன் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும்போது முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கூறியுள்ளார்.
பெருந்தோட்டத்துறையான சீரழிவு கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இவ்விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நன்றி- வீரகேசரி

Wednesday, December 21, 2011

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி: மனோ

தற்சமயம் நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பாராளுமன்ற உறுபினர்களில் ஐவர் தமிழர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு மாற்று வழியில் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது. இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களும் மலையகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

ஆளுமையுடன் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தில் பன்னிரண்டாக இருந்த ஒட்டுமொத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர் தொகையில் ஏற்பட்ட குறைவு காரணமாக காட்டப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் மாற்று வழிகளின் மூலமாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டம் தீட்டப்படுவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. தகுதியுள்ள தமிழர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் குளறுபடிகளை ஏற்படுத்தி தமிழ் வாக்காளர் தொகை அதிகரிக்கப்படாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தை தளமாகக் கொண்டு மலையகம் முழுக்க தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பெரும்பான்மையினரை குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழர்கள் செறிவாக வாழ்வதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய புதிய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்படும்.

அரசாங்கத்திற்குள்ளே அமைச்சர்களாகவும் ஆதரவு அணியினராகவும் செயல்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலையக அரசியல் கட்சிகளுக்கும் இது தொடர்பிலே பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நமது மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் மலையகத்தில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துகளை உணர்ந்திருக்கின்றார்களா என்பது புரியவில்லை. வாயைத் திறந்து பேசினால் ஜனாதிபதி கோபித்துக் கொள்வார் என்பதற்காக நமது மலையகப் பிரதிநிதிகள் வாய்களை திறப்பதில்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமாக நமது இனம் நன்மை பெற வேண்டும். ஆனால் ஆதரவையும் வழங்கிவிட்டு நமக்கெதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளையும் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதில் அர்த்தமில்லை. அøதவிட எதிரணியில் அமர்ந்து உண்மைகளை துணிச்சலுடன் எடுத்துக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஆளுமையுடனும் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை.

Friday, December 16, 2011

தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அட்டன் வெலிஓயா தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட முகாமையளர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கொழுந்து நிறையிடுதல் குறித்து ஏற்பட்ட இழுபறி நிலையே முரண்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாகத் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தின் அளவை அதிகரித்து 20 கிலோ கிராம் பறிக்க வேண்டும் எனத் தோட்ட முகாமையாளர் விடுத்த பணிப்புரைக்குத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் துணையை நாடவேண்டி வரும் என தோட்ட முகாமையாளர் தெரிவித்ததையடுத்து அவர் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, November 2, 2011

தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் பாதிப்பு

மாத்தளை அம்பதன்னை பிரதேச தோட்டங்களிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கமடுவ, மாகஸ்கந்த, கரக தென்னை, நாகல, லெகல ஆகிய தோட்டங்களில் இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு அங்கிருந்த தொழிற்சாலை உபகரணங்கள் யாவும் தோட்ட நிர்வாகங்களால் எடுத்துச் செல்லப்படுவதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இந்த தொழிற்சாலைகளில் தொழில் செய்த தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளதுடன் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த தோட்டங்களில், பறிக்கப்படும் கொழுந்துகள் யாவும் அருகில் உள்ள கெலாபொக்க தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தேயிலை கொழுந்துகள் பழுதடைவதாகவும் இந்த தேயிலை தொழிற்சாலைகளையும் மூடியுள்ளதால் இது இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு எனவும் தோட்டமக்களும் அங்கு கடமை புரிந்த உத்தியோகத்தர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மாற்று தொழில்களை யாவது பெற்றுத்தருவதற்கு தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.