Monday, September 14, 2009

மலையக மக்கள் முன்னணி வீதி ஹட்டனில் மறியல் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் ஹட்டனில் 13-09-2009 ஆம் அன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை. இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் முன்னணி ஆதரவாளர்கள் ஹட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.இந்நிலையில் ஹட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவையில் பதற்றம்

தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்கள் பொகவந்தலாவை நகரில் நடத்தப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் இடையுறு விடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் பொகவந்தலாவை நகரில் 12-09-2009 நண்பகல் வேளையில் இடம் பெறவிருந்தது. இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளான ஆதரவாளர்கள் பொகவந்தலாவை நகரில் கூடியிருந்தனர்.
இந்த நிலையில் ஜனநாயக மக்கள் முன்;னணியின் தலைவரும் எம்பியுமான மனோகணேசன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் ,இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னயியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோரின் வாகனங்கள பொகவந்தலாவை நகரின் நுழை வாயிலுக்கு அருகில் வருகை தந்த போது இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் திடீரென கற்களால் தாக்கப்பட்டதைத்தொடரந்து பெரும் களேபரம் ஏற்பட்டது. சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.பொலிஸாரினால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிய வில்லை. இந்தத்தாக்குதல் சம்பவத்தின் போது மனோகணேசன் வாகனத்துக்குச்சிறிய சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஜனநாயக மக்கள் முன்னணி ,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்களின் ஆதரவாளர்கள் வீதிமறியலில் ஈடுபட்டனர். இதன்போது மேலதிக பொலிஸார் வரவழைக்கப்படனர். மாலை 4.00 மணியளவில் நிலைமை சுமூக நிலைமைக்கு வந்தது.

Sunday, September 13, 2009

ஒத்துழையாமை போராட்டம் உக்கிரம் : தோட்டங்களில் பணிகள் ஸ்தம்பிதம்

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இப்போராட்டம் மாற்று வடிவம் பெற ஆரம்பித்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் இடம்பெற்றன.
மலையகத்தில் சகல தேயிலைத் தோட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் தொழிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதுடன் 500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை வெற்றிபெற வேண்டுமென்று ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை நடத்துகின்றதாகவும், பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தமது வேலைகளை பகிஷ்கரித்து விட்டு கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி தத்தமது தோட்டக் காரியாலயங்களை நோக்கி ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை தெரிவிக்கப்படுகிறது.
405 சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு 405 ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக இ.தொ.கா.உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலை வரவுக்கான விசேட அலவன்ஸாக 85 ரூபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கும், மேற்படி ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு 2011 மார்ச் வரை அமுலில் இருக்கும். அதேவேளையில் 2006ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் ஏப்ரல் மாதத்தில் இருந்து இணக்கம் காணப்பட்ட சம்பள நிலுவை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
தற்பொழுது தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 200 ரூபாவும் நாணய மாற்று விசேட கொடுப்பனவாக 20 ரூபாவும் மாதத்தில் 75 சதவீத வேலைக்கு சமுகமளித்திருந்தால் நாளொன்றுக்கு 70 ரூபாவுமாக மொத்தமாக 290 ரூபாவைப் பெற்று வந்தனர்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையவே மேற்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து புதிய சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தன. இதுவரை சம்பள உயர்வு தொடர்பாக 8 சுற்று பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் நடத்திய போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
இந் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த பொழுதும் நேற்று மீண்டும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாகவே 405 ரூபா எனும் தொகையை நாளொன்றுக்கு வழங்குவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் சார்பில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இந்தத் தொகையை வழங்க முடியாதெனத் தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம் நேற்றுக் காலையில் நாளொன்றுக்கு 390 ரூபா அளவிலேயே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.
அதாவது அடிப்படைச் சம்பளமாக 275 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 100 ரூபாவும் திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 15 ரூபாவும் வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனம் இருந்தது.
இதற்கிடையில் இந்த அறிவிப்புடன் ஒத்துழைக்க போவதில்லை என கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய தொழில் சங்கங்கள் இரண்டும் தெரிவித்துள்ளன.
500 ரூபா என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய போதும், தற்போ இந்த தொகைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுவரையில் இவ்வாறான எந்த ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அதன் பின்னரே தமது தீர்மானத்தை வெளியிட முடியும் என முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தொட்டத்துறை தலைவர் லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

Saturday, September 12, 2009

தீபாவளிச் சமயத்தில் பிள்ளை பிடிக்காரர்கள் தோட்டங்களுக்கு வருவார்கள்!

சிறுமிகளான ஜீவராணி, சுமதி ஆகியோரின் மர்ம மரணங்கள், தரகர்களையும், கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம்பி நகரங்களுக்கு வேலைக்காரர்களாக சிறுவர் சிறுமியரை அனுப்பி வைப்போரின் கண்களைத் திறந்திருக்க வேண்டும். திறக்காவிட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லைதான். பெற்றோரே தரகர்கள் பக்கம் நிற்கும்போது யார் என்ன செய்ய முடியும்?
கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை பகுதி கழிவு நீர் கால்வாய் ஒன்றிலிருந்து கடந்த மாதம் 14ம் திகதி மீட்கப்பட்ட மஸ்கெலியாவைச் சேர்ந்த சிறுமிகளான ஜீவராணி மற்றும் சுமதி ஆகியோரின் மரணம் மலையகத்தைச் சேர்ந்த அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பெருந்தோட்டக் குடும்பங்களில் வருமானக் குறைவினால், வாழ்க்கையை இழுத்துச் செல்ல முயலாததால் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரிகளாக அனுப்பி வைக்கின்றனர்.
கொழும்பு மாவட்டம், கம்பஹா மாவட்டம், புத்தளம் மாவட்டங்களிலேயே மலையகத்தைச் சேர்ந்தோர் வீடுகளில் தொழில் புரிகின்றனர். பெருந்தோட்டக் குடும்பங்கள் வறுமையில் சிக்கியிருப்பதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் பொய்யும் புனைசுருட்டுமாக கதைகளை அவிழ்த்துவிட்டு தனவந்தர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் (தரகர்) புரோக்கர்கள் கைநிறைய சம்பாதிக்கின்றனர். பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து அழைத்துச் சென்று தனவந்தர்களின் வீடுகளில் விலைபேசி தங்க வைத்துவிடுகின்றனர்.
ஒரு மாத சம்பளத்தையும் பயணச் செலவுக்கென இரண்டு ஆயிரம் ருபாவையும் பெற்றுக்கொள்கின்றனர். இந்த புரோக்கர்கள் இடைஇடையே இவர்களின் சம்பளத்தில் ஐந்து நூறு, ஆயிரம் என பெற்றுக்கொள்வதும் உண்டாம். இப் பணம் மாடாய் உழைத்து தேய்ந்து போகும் எமது மலையகப் பிள்ளைகளின் சம்பளத்திலேயே கழிக்கப்படுகிறது.
1977ஆம் ஆண்டுக்கு முன் கொழும்பு உட்பட பல இடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெருந்தோட்டப் பெண்களே வீடுகளில் வேலை செய்து வந்தனர். அவர்களின் வயதும் 45, 50 தாண்டியதாக இருந்தது. அன்று கொழும்பு உட்பட புற நகரப் பகுதி வீடுகளில் சிங்களப் பெண்களே வீட்டு வேலைக்காரிகளாக இருந்து வந்தனர். இவர்கள் 50 வயதை
தாண்டியவர்களாகவும், எவ்வித குடும்பப் பொறுப்பும் இல்லாதவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்கள் ‘ஆயா’ என்ற அடை மொழியிலேயே அன்று அடையாளப்படுத்தப்பட்டனர்.
1977 ஆம் ஆண்டு ஐ. தே. கட்சி ஆட்சியை கைப்பற்றியதும் வகை தொகையின்றி சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் வெளிநாடுகளுக்கு (மத்திய கிழக்கு நாடுகள்) ‘ஹவுஸ் மெய்ட்’ என்ற பெயரில் வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றனர். இதன் காரணமாக சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் ஆயா வேலையை துறந்து வெளிநாடுகளை நாடத் தொடங்கினர்.
இதேவேளை ஐ. தே. கட்சியின் திறந்த பொருளாதார நடவடிக்கையால் மலையக பெருந்தோட்ட மக்களும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டதுடன், இடை இடையே நிலவிய இன கலவரத்தாலும் பெரிதும் இன்னல்களை அனுபவித்தனர். சிங்கள கிராமத்து பெண்கள் கொழும்புக்கு தொழில் புரிய வருகை தருவது குறைந்ததும், கொழும்பில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்தோர் மலையக பெண்களை முதலாளிகளின் வீட்டு வேலைகளுக்கு வழங்க முன்வந்தனர்.
இதன் காரணமாக கூன் விழுந்து போன தங்களின் வாழ்க்கையை தோட்டத்திற்கு வெளியே சென்று நிமிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டு தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பினர். இதன் தொடர்கதையே இன்று பத்து மாதம் சுமந்து பெற்ற பிஞ்சுகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் பரிதாபம் மலையகத்தில் தொடர்கிறது. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள் என்பது வெறும் அலங்கார வசனம் அல்ல.
தேயிலைச் செடி மலைகளில் கொழுந்துக் கூடையை முதுகிலும் வயிற்றில் குழந்தையையும் சுமந்து காடு மலையேறி கொழுந்து பறித்து வாழ்க்கை நடத்துபவளே பெருந்தோட்டப் பெண்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது. வயிற்றில் தன் குழந்தையையும், முதுகில் கொழுந்துக் கூடையையும் சுமக்கும் பெருந்தோட்டப் பெண்கள் வறுமையின் வலியையும் சுமக்கிறார்கள். வறுமையின் நிறம் சிவப்பு என்பது மலையக பெருந்தோட்டப் பெண்களுக்கே தெரியும்.
கொழும்பு வீடுகளில் தொழில் புரியும் இளம் யுவதிகள், சிறுவர்கள், பெண்கள் படும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இது முழுமையாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகக் தெரியவில்லை. அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை பலர் தாம் வேலை செய்யும் வீடுகளில் தொழில் புரிகின்றனர். அடி உதை என துன்பப்படுவோரும் அதிகமாக உள்ளனர். கொழும்பு பங்களா என்றதும் இது ஒரு சொர்க்கப்புரி என நினைத்து புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி விடுகின்றனர். கொழும்பு பங்களாவில் உள்ள வேப்ப மரத்தின் குச்சியும் இனிக்கும் எனவும் பல புரோக்கர்கள் அநியாயமான பொய் வார்த்தைகளை பெருந்தோட்ட மக்களிடம் தெளித்துவிடுகின்றனர்.
இன்று மஸ்கெலியா பகுதியை சேர்ந்த ஜீவராணி மற்றும் சுமதி ஆகியோரின் மரணங்கள் பெருந்தோட்ட மக்களின் கண்களை அகல விரிவடையச் செய்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ் இருவரின் பரிதாப மரணம் சம்பந்தமான விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆரம்பமான தினத்தன்று மலையகத்தை சேர்ந்த எமது சட்டத்தரணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகியிருந்தமை எமது மக்களின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்.
இவர்களது மனதில் எமது பிஞ்சுகளின் மரணம் தொட்டுவிட்டது. அல்லது சுட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். பல்வேறு வேலைகளுக்கும் இடையே இறந்தவர்கள் எமது குழந்தைச் செல்வங்கள் என்ற சமுதாய உணர்வோடு நீதிமன்றத்தில் ஆஜராகியமை பாராட்டப்படவேண்டிய ஒன்று.
அனைத்து ஊடகங்களும் பெரும் படங்களுடன் செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டு பெருந்தோட்ட மக்களை விழிப்படையச் செய்தமைக்கு ஊடகங்களுக்கு அனைவரும் நன்றிகூற வேண்டும். இது காலம் வரை கொழும்பில் வீட்டு வேலைக்கு சேர்ந்தோரின் பல மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் இந்த இரு பிஞ்சுகளின் மரணம் பெருந்தோட்டப் பகுதிகளில் பேசப்படக்கூடிய வகையில் ஊடகங்களில் இடம் பிடித்தது. இது இம்மலையக பெருந்தோட்ட வறிய குடும்பங்களின் கண்களைத் திறந்திருக்கும் என எதிர்பார்ப்போம். இனியும் கண் திறக்காவிட்டால் யாரும் எதுவும் செய்வதற்கில்லை தான்.
இத்தரகர் தொழில் நேர்மையற்ற ஒரு தொழில் சட்டபூர்வமானதல்ல. இத்தரகர்கள் பற்றித் தகவல் தெரிந்தால் அருகேயுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது அப்பகுதி கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்யவேண்டும்.
சிறுவர்களை பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து கட்டாய வேலைக்கு அழைத்துச் செல்வோர், அல்லது கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர் கள் பற்றிய தகவல்களை அனைவரும் வழங்க முன்வர வேண்டும் என நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதுள்ள எமது நாட்டின் சட்டங்களின் கீழ் குறிப்பிட்டோருக்கு நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை வழங்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டப் பகுதியில் எதிர்வரும் தீபாவளி பெருநாள் காலத்தில் தரகர்கள் நட மாட்டம் அதிகரிக்கலாம். மக்கள் விழிப்பாக செயல்பட வேண்டும்.
கே.பி.பி புஷ்பராஜா
தினகரன்
வருடா வருடம் சம்பள மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அரவிந்தகுமார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வருடா வருடம் மீளாய்வு செய்யப்பட வேண்டுஅமன ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளருமான அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் இலங்கை உட்பட சர்வதேச மட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணி புரிவோருக்கு வருடா வருடம் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் சக்தியாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அதிலும் பல்வேறு இழுபறிகளும், புறக்கணிப்புக்களும் இடம் பெறுகின்றன. போராடியும் நியாயம் கிடைப்பதில்லை. நாளாந்தம் உயர்வடையும் பொருட்களின் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாது தோட்டத் தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய செலவினங்களை பார்க்கையில் 500 ரூபா என்பது பாரிய பிரச்சினையல்ல.
ஆகையினால் வருடா வருடம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மீளாய்வு செய்யப்பட்டு குறைந்த பட்சம் 50 வீதமான சம்பள உயர்வையேனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு இப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
இனிப் பேச்சுவார்த்தை இல்லை : ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் இது குறித்து 12-09-2009 கொட்டக்கலையில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் 290 ரூபா சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் அதேவேளை, 360 ரூபாவாக நாட் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையில் கடந்த பத்து தினங்களாக பெருந்தோட்டங்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.