Saturday, November 12, 2016

140 ரூபாயை ஏப்பம்விட்ட நிர்வாகங்கள்

புதிய கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக ஒக்டோபர் மாத்துக்குரிய சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதாந்த சம்பளம், 10ஆம் திகதி தோட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய கூட்டொப்பந்தத்தின்படியே இம்மாதம் சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சில தோட்டங்களில் 590 ரூபாய் என்ற அடிப்படையிலே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த கூட்டொப்பந்த பேச்சு, கடந்த மாதம் 19 ஆம் திகதியே முடிவுக்கு வந்தது. இதற்கமைவாக அடிப்படைச் சம்பளம் ரூ.500, உற்பத்தித்திறன் கொடுப்பனவு   ரூ.140,  நிலையான விலை கொடுப்பனவு  ரூ.30,  வருகைக் கொடுப்பனவு  ரூ.60, உள்ளடங்களாக மொத்தம் 730 ரூபாய் சம்பள தொகையுடன் புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இச்சம்பளம் ஒக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒக்டோபர் மாதத்துக்கான சம்பளம்,  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அச்சம்பளமானது புதிய ஒப்பந்தத்துக்கு அமைவாக வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். அடிப்படைச் சம்பளம் ரூ.500, வருகைக் கொடுப்பனவு ரூ.60, நிலையான விலை கொடுப்பனவு ரூ.30 இணைக்கப்பட்டு 590 ரூபாயே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தித்திறன் கொடுப்பனவான 140 ரூபாய்,  சம்பளத்தில் இணைத்துகொள்ளப்படவில்லை என தெரிவித்த தொழிலாளர்கள், 18 கிலோகிராமுக்கும் மேலதிகமாக கொழுந்து பறித்தால் மட்டுமே முழுமையான சம்பளத்தை வழங்க முடியுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்ததாக கூறினர். 

No comments: