Wednesday, October 19, 2016

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ‘730 ரூபாய்க்கு காட்டிக்கொடுத்துவிட்டன

தொழிற்சங்கங்கள் 730 ரூபாய்க்கு கையொப்பமிட்டு, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக சாடி, மலையகத்தின் பொகவந்தலாவை, தலவாக்கலை, ஓல்டன், சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுப் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.   
50 ரூபாய் அடிப்படைச் சம்பளம் உள்ளடங்களாக 730 ரூபாய் சம்பளத்துடன் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளப்போதிலும், அத்தொகைப் போதாது ‘1,000 ரூபாயே வேண்டும்’, ‘இரத்தத்தை உறிஞ்சும் கம்பனியே நிலுவைப் பணத்தைக்கொடு’ ‘தொழிலாளர் உழைப்பை காட்டிக்கொடுக்கதே’ ‘தீபாவளியா அல்லது தீபாவலியா’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.  
மஸ்கெலியா சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மஸ்கெலியா வீதி ஒல்டன் சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதேவேளை, பொகவந்தலாவைக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவை கொட்டியாகலை ஆலயத்தின் முன்றலில், சிதறுத் தேங்காய் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை கடந்த 18 மாதங்களாக இழுத்தடித்த தொழிற்சங்கங்கள், இறுதியில் வெறும் 730 ரூபாய்க்கு தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  
தொழிற்சங்க பிரதிநிதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தாம், இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது திண்டாடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். 

நன்றி- தமிழ் மிரர்

No comments: