Tuesday, September 27, 2016

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேலும் ஒருவார காலத்திற்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அதற்குத் தயாரில்லை என நேற்று அறிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தமது எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்து வரும் நிலையில் 3வது நாளாக நேற்றும் மலையகப் பிரதேசங்களின் பல தோட்டத் தொழிலாளர்கள் கறுப்புக் கொடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். பொகவந்தலாவை மற்றும் டன்சினன் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் இழுத்தடிக்க இடமளிக்க முடியாது என்றும் ஒருவார காலத்திற்குள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வழி செய்யப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த விவகாரம் தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் நேற்றும் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் எவ்வித இனக்கப்பாடும் எட்டப்படாமை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுமையிழந்த நியைலேயே அவர்கள் சுயமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலை முதலாளிமார் சம்மேளனம் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு வழியேற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிடுகின்றன.
கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், தொழிலமைச்சரின் தலையீட்டுடன் தீர்வொன்றைக் காண்பதற்கு வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு வரும் என தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் முக்கிய கட்சியான இ. தொ. கா வின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் எம்.பி. இது தொடர்பில் நேற்று தினகரனுக்குத் தெரிவிக்கையில்; இன்றைய பேச்சுவார்த்தையை எதிர்பார்த்திருந்த போதும் முதலாளிமார் சம்மேளனம் அதனை அடுத்த வாரத்திற்கு ஒத்திப்போட்டுள்ளமை அதிருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக்காக காத்திருக்கும் நிலையில் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாது ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவதைக் காணமுடிகின்றது.
ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதும் அறிக்கைகளை வெளியிடுவதும் என தத்தமது அரசியல் நோக்கங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதையும் காணமுடிந்தது.
கூட்டு ஒப்பந்தம் என்னவாகும்? தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை இன்னும் ஒருவார காலம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

No comments: