Monday, June 13, 2016

அரநாயக்க மண்சரிவால் பலர் தொழிலின்றி நிர்க்கதி

அரநாயக்க மண்சரிவு காரணமாக 1,000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தமது தொழிலை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாக சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார். 

அரநாயக்க சமாரச மலை சரிந்து எதிர்வரும் 17ஆம் திகதியுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், இம்மண்சரிவினால் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட  மக்களது மறுவாழ்வுக்காகவும் இறைஆசி வேண்டி விசேட சர்வ மத பிரார்;த்தனைகள் நடைபெறவுள்ளன. அரநாயக்க, புஸ்ஸப்பிட்டிய தியான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைதங்கள் முகாமில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கண்டி- இந்திய உதவித்தூதுவர் ராதா வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

சர்வமத சமாதான நிதியம் மற்றும் சௌமிய இளைஞர்  நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'அரநாயக்க மண்சரிவினால் பிரதான பாதைகளில் மண்மேடுகள் குவிந்து கிடப்பதனால்,   டோட்டுலோய, மொரட்டிய, அம்பதெனிய, எலங்கபிட்டிய போன்ற தோட்டங்களில் வசிக்கும் ஆயிரகணக்கான தோட்டத் தொழிலாளரகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொழிலுக்குச் செல்வதும் தடைப்பட்டுள்ளது. தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமானமின்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்' என்றார். 

நன்றி- தமிழ் மிரர்

No comments: