Monday, October 26, 2015

ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சீரற்ற காலநிலை-மண்சரிவுகள்,வெள்ளப்பெருக்கு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன ஏற்பட்டுள்ளன. ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் தென்பகுதியில் குறிப்பாக காலி மாட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஊவா மாகாணத்தின் பண்டாரவளை, தியகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து அங்கிருந்த பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

கொஸ்லந்தை மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்வதாலேயே மண்சரிவுகள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக மாலை நேரங்களில் கடுமையான மழைபெய்கின்றமை மண்சரிவு ஏற்படக் காரணமாகின்றது.

இந்த நிலையில் நாட்டின் 9 மாவட்டங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் தேசிய கட்டட ஆய்வு நிலையம் கடந்தவாரம் அறிவித்திருந்தது.

நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோர்வூட், ரொக்வூட் தோட்டம், ஹட்டன் சமனலகம ஆகிய இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் பலாங்கொடை பகுதியிலும் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவை எவரும் மறந்திருக்கு முடியாது.

அது எப்போதும் மறக்கக்கூடியதல்ல.

இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 25 ஆம் திகதி கொத்மலை பிரதேசத்தின் ரம்பொடை வெதமுல்ல தோட்டத்தின் கயிறுகட்டி பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் உயிரிழந்தமை மற்றுமொரு பாரிய அனர்த்தமாகும் இதனையும் எவராலும் மறக்கமுடியாது.

இந்த நிலையில் கடந்த இரு வாரகாலமாக தொடரும் சீரற்ற காலநிலையும் அடைமழையும் இவ்வருடத்திலும் இவ்வாறான அனர்த்தத்தை ஏற்படுத்தி விடுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.

சில இடங்களில் சிறிய அளவில் மண்சரிவுகள் நிலம் தாழிறங்குதல் மற்றும் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

பதுளை மாவட்டத்தின் பசறை தொகுதியிலுள்ள பசறை வீதி 8ஆம் கட்டையில் அமைந்துள்ள யூரி தோட்டத்தில் கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக இப்பகுதி வீடொன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் தாயொருவரும் இரு பிள்ளைகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பசறை வீதி 10 ஆம் கட்டை பகுதியிலுள்ள கோணக்கலை தோட்டத்தின் மேற்பிரிவில் மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த 48 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி அகதிகளாக கோணக்கலை தோட்ட வைத்தியசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறிய இவர்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை தோன்றியிருந்தது. இவ்விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரின் கவனத்திற்கு தோட்ட பொதுமக்கள் கொண்டுவந்ததை தொடர்ந்து குறித்த மக்களுக்குரிய நிவாரணங்களை பசறை பிரதேச செயலாளரின் மூலமாக பெற்றுக் கொடுப்பதற்குரிய கலந்துரையாடல்களை இவர் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, பசறை – நமுனுகுல வீதியின் 16 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிக்குரிய வாகனப் போக்குவரத்து கடந்த வாரத்தின் இறுதி இரு நாட்களிலும் தடைப்பட்டிருந்தது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளை சீர் செய்ய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சீரற்ற காலநிலை அதற்கு இடமளிக்கவில்லை.

மாலை வேளையில் தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது. சிறு அருவிகளும் ஓடைகளும் பெருக்கெடுத்துள்ளன. ஆறுகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலைமை காரணமாக பசறை பகுதிலுள்ள மீதும்பிட்டிய, சோலண்டஸ், பட்டாவத்தை, யூரி, கணவரல்ல, கோணாக்கலை ஆகிய பகுதிகளிலும் பதுளை தொகுதியில் செல்வகந்தை, ஸ்பிரிங்வெளி உட்பட பல பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே போன்று பண்டாரவளை, அப்புத்தளை பகுதிகளிலுள்ள அதிகமான தோட்டங்களில் மீண்டும் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. பிட்டரத்மலை, தம்பேதன்ன பகுதிகளிலும் ஹல்துமுல்லை பகுதியிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டுள்ள தோட்டக் கம்பனி நிர்வாகங்கள் மண்சரிவு அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தொழிலாளர் குடும்பங்களை அழைத்து அனர்த்தம் ஏற்படும்போது பொது இடங்களில் சென்று பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மூளைச் சலவை செய்கின்றனர். கடந்த வருடம் அகதிகளான மக்களின் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்னடித்ததை யாரும் மறந்து விடமுடியாது. தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கொள்ளவே தோட்ட நிர்வாகங்கள் இவ்வாறு தந்திரமாக செயற்பட முனைந்துள்ளன. மண்சரிவு அனர்த்த அபாயம் நிலவும் பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து அனர்த்தத்தின் போது பாதுகாப்பு பெறுவது தொடர்பான பயிற்களையும் வழங்கி வருகின்றது. இவ்வாறான பயிற்சிகள் பதுளை, தெளிவத்தை தோட்டம், பசறை, மீதும்பிட்டிய தோட்டபகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.

மழையுடன் கூடிய காலநிலையின் போது தொடர் லயன் குடியிருப்புகளை சுற்றியுள்ள வடிகான்களில் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய வழிவகைகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி குடியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே பொதுமக்களும் தமக்குரிய பாதுகாப்பை முறையாகப் பேண நடவடிக்கை எடுத்தால் ஏற்படும் பாரிய ஆபத்துகளை ஓரளவுக்கேனும் குறைத்துக் கொள்ள முடியும்.

நன்றி - வீரகேசரி

No comments: