Tuesday, July 22, 2014

தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் - மக்கள் ஆர்ப்பாட்டம்

 பொகவந்தலாவ பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்
 
மேலும், இவ்விடயத்தை வெளியில் சொன்னால், தன்னையும், குடும்பத்தையும் கொன்று விடுவதாக பயமுறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததாக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பொலிஸ் விசாரணை இடம்பெற்று வருவதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து தோட்ட மக்களும் வேலைக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, மலையகத்தில் தொடர்ந்து இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகோரிக்கை விடுத்தனர்.
 
இதேவேளை 20.07.2014 அன்று இறக்குவானை டெல்வின் தோட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வீட்டின் வெளிப்புற பிரதேசமொன்றில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
 
சந்தேகநபரை பொதுமக்கள் பொலிஸாருக்கு அடையாளம் காட்டியும் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக 22.07.2014 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் அவரை பெல்மடுல்ல நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
இந்தச் சம்பவங்களை கண்டித்து ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டகலை, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, டிக்கோயா, நோர்வூட், ஆகிய பிரதேசங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்களும் பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments: