Wednesday, January 8, 2014

அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக வாழும் பெருந்தோட்ட மக்கள்


நுவரெலிய மாவட்டத்துக்குட்பட்ட றம்பொடை டிவிசனில் அமைந் துள்ள ஆறு தோட்டங்களை உள்ளடக்கிய புரட்டொப் குறூப் ( பெரட்டாசி தோட்டம்) என்ற தோட்டப்பகுதியில் வாழும் மக்கள் பலவருடங்களாக அடிப்படை வசதிகள் கூட இன்றி கடும் சிரமத்துக்கு மத்தியில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கல்வி, சுகாதார, போக்குவரத்து,  தபால், தொடர்பாடல் போன்ற வசதிகள் இல்லாததால் இப்பகுதிகளில்   வாழும் மக்களுக்கு தொடர்ந்தும் கொத்தடிமைகளாகவே  வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.  புரட்டொப் குறூப்பில் அமைந்துள்ள பூச்சிக்கொடை, அயரி, மேரியல், ரஸ்புருக், பெரட்டாசி, மேமலை ஆகிய தோட்டங்களில் தமிழ் மக்களே முழுமையாக வாழ்கின்றனர்.

இவர்கள் வாழும் பகுதிகளில் மொத்த வியாபார நிலையங்கள், பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், பாமசி, தொடர்பாடல் நிலையங்கள் என தேவையான எதுவுமே இல்லை. இருக்கும் சில்லறை வியாபார நிலையங்களிலும் உச்ச விலை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஏதாவது முக்கிய பொருட்களை வாங்கவேண்டுமென்றாலோ அல்லது  சேவையை பெற்றுக்கொள்ளவேண்டுமென்றாலோ புசல்லவை நகருக்கே மக்கள் செல்லவேண்டும்.

ரஸ்புருக்கிலிருந்து புசல்லாவைக்கு 1 மணித்தியாலயத்தில்  செல்லக்கூடியதாக இருந்தாலும், பெரட்டாசி - புஸல்லாவை வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் இரண்டு மணித்தியாலயத்துக்கும் மேலாக கடும் சிரமத்துக்கு மத்தியில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. கட்டிக்குத்தலை, காச்சாமலை, வீடன் ஆகிய தோட்டத்து மக்களும் இந்த வீதியையே போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவர்.

அதுவும் உரிய நேரத்துக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டே நகருக்கு வரவேண்டியுள்ளது. காலையில் சென்றால் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவதற்கு மாலையாகிவிடும். எனவே, எங்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என தோட்டப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மழைக்காலங்களில் வீதிகளில் நீர் தேங்கிவிடுவதால் அதிக விபத்துகளும் ஏற்படுகின்றன. பெரட்டாசி - புசல்லாவை வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்கள் அடிக்கடி சேதத்துக்குள்ளாகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து முன்னர் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் அந்த சேவை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனால், நகரப் பகுதிக்கு உயர் கல்வி பயிலவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணங்களை செலுத்தவேண்டியுள்ளது. ஆசன எண்ணிக்கைக்கும் அதிகமாக பேருந்துகளில் ஏற்றப்படுவதால் நெரிச்சலுக்கு மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.  

குறிப்பாக மத்திய மாகாண சபைத் தேர்தல்  நடைபெற்ற காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக குறித்த வீதி புனரமைக்கப்படும் என உறுதிமொழிகள் அள்ளிவீசப்பட்டன. ஆனால், புனரமைப்பு பணிகள் பல மாதங்களாகியும் இன்னும் தொடங்கவில்லை என்று பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு அயரி என்ற தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சைப்பெறுவதற்கான  வசதி அமைத்துக்கொடுக்கப்பட வில்லை. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவோ அல்லது சத்திரசிகிச்சைப் பிரிவோ, கதிரியக்கப்பிரிவோ அதில் அமைக்கப்படவில்லை. இதனால், திடீர் விபத்துகளால் பாதிக்கப்படுவோரைக்கூட புசல்லாவைக்கு அல்லது கம்பளை வைத்தியாலைக்கு கொண்டுச் செல்லவேண்டிய துன்ப நிலை காணப்படுகின்றது. 

அம்புலன்ஸ் வசதிகள் இல்லாததால் கொழுந்து ஏற்றும் லொறியிலேயே நோயாளர்கள் கொண்டுச் செல்லப்படுவார்கள். வீதி சீர்கேடு காரணமாக நோயாளி இடைநடுவே இறந்து விடுகின்றனர். கர்ப்பினி தாய்மார்களுக்கும் வழியிலேயே பிரசவம் ஏற்பட்டுவிடுகின்றது.

நாய்க்கடி, பாம்புக்கடி,  குளவிகொட்டு போன்றவற்றுக்கு உரிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நகரத்துக்கு வருவதற்கு சிரமப்பட்டு பலர் நாட்டு வைத்தியத்தை அணுகுவதால் அதனாலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதற்கு புறம்பாக,  முறையாக மின் விநியோகம் வழங்கப்படாததால் லயன் அறைகள் அடிக்கடி தீப்பற்றி எறிதல், சுகாதார ஆலோசனைகள் இன்மை, சிறுவர் துஷ்பிரயோகங்கள், முகவர் நிலையங்களால் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் ஏமாற்றப்படுகின்றமை, 

சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடன் உதவி இன்மை,  ஆசிரியர்கள் பற்றாக்குறை,  கல்வி வீழ்ச்சி உட்பட மேலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே,  ஊடகங்களும் குறிப்பாக தமிழ் ஊடகங்களும் மலையக சிவில் அமைப்புகளும் எமது பிரச்சினைக்கு விடிவைத் தேடிதரவேண்டும் என புரட்டொப் தோட்டத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி- வீரகேசரி 

No comments: