Thursday, January 17, 2013

பெருந்தோட்ட துறையின் வர்த்தக கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: சுஜீவ கொடகே



பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் நிர்வகிக்கப்படும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்றான தேயிலை உற்பத்தி துறையில் பின்தொடரப்படும் வர்த்தக கட்டமைப்பில் (டீரளiநௌள ஆழனநட) மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளதாக பல முன்னணி வர்த்தக ஆலோசகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த வண்ணமுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தற்போது அமுலிலுள்ள பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில், தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் மற்றுமொரு சம்பள அதிகரிப்பு என்பதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தாம் காணப்படுவதாக பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்கள் அறிவித்தவண்ணமுள்ளன. 

இந்நிலையில் இந்த பெருந்தோட்டத்துறையின் நீண்டகால செயற்பாட்டுக்காகவும், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் இந்த துறையில் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தும் மக்களின் நலனுக்காகவும் தற்போது அமுலிலுள்ள பெருந்தோட்ட வர்;த்தக முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஓர்; அவசியம் எழுந்துள்ளது. 

எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஊழியர்களுக்கு அதிகளவு வருமானத்தை உறுதி செய்யும் அதேவேளை, கம்பனிகளின் வருமானத்தை உயர்த்தி அவற்றின் உறுதியான செயற்பாட்டை கொண்டு நடத்தும் வகையில் அமைந்த ஒரு வர்த்தக கட்டமைப்பின் தேவை எழுந்துள்ளது. இது போன்றதொரு புதிய கட்டமைப்பு கஹவத்தை பிளான்டேஷன் கம்பனியை சேர்ந்த எந்தான பெருந்தோட்ட பகுதியில் பின்பற்றப்படுகிறது.

இந்த பெருந்தோட்டத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், அப்பகுதிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு எமக்கு கடந்த வாரம் கிட்டியது. இந்த விஜயத்தின் போது, எந்தான பெருந்தோட்ட பகுதியில் கைக்கொள்ளப்படும் புதுவகையான வர்த்தக கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. 

எந்தான பெருந்தோட்டம் குறித்து தோட்ட அதிகாரி சுஜீவ கொடகே எமக்கு கருத்து தெரிவிக்கையில், 'எந்தான என்பது கீழ்மட்ட தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் ஒரு பெருந்தோட்டமாகும். எமது பெருந்தோட்டம் சுமார் 400 ஹெக்டயர் பரப்பில் தேயிலை பயிர்ச்செய்கையை கொண்டுள்ளது. எமது பெருந்தோட்டத்தில் காணப்படும் பெரும் சவாலாக ஊழியர்கள் பற்றாக்குறை அமைந்துள்ளது. எமது மொத்த தேயிலை பரப்பில் பணியாற்ற சுமார் 1000 தொழிலாளர்கள் வரை தேவை. ஆயினும் எமது தோட்டத்தில் மொத்தமாக 500 தொழிலாளர்கள் வரையிலேயே காணப்படுகின்றனர். இதன் காரணமாக நாம் எமது தேயிலை பயிரிடக்கூடிய பெருமளவான நிலங்களை கைவிட வேண்டிய ஒரு நிலையை எதிர்நோக்கியிருந்தோம்.

'இந்த நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு எமக்கு ஒரு புதிய சிந்தனை உதித்தது. தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றும் நேரம்போக, எஞ்சிய காலப்பகுதியில் அவர்களை கொண்டு, கைவிடப்படவேண்டிய அபாய நிலையை எதிர்நோக்கியிருந்த காணிகளை சுத்தம் செய்து, அவற்றில் தேயிலை செய்கையை மேற்கொள்ள தீர்மானித்தோம். இதற்கு ஊழியர்களும் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்திருந்தனர். எனவே இந்த நடவடிக்கை 2000ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறிய அளவில் ஆரம்பமானது. காலப்போக்கில் 2002ஆம் ஆண்டளவில் இந்த திட்டத்துக்கு முறையாக பெர்; வழங்கி, ஊழியர்களுக்கும் அனுகூலம் கிடைக்கக்கூடிய விதத்தில் ஒரு சட்ட ரீதியான உடன்படிக்கையை மேற்கொள்ள தீர்மானித்தோம்'. 

'நான்கு பக்கங்களில் நிபந்தனைகள் உள்ளடங்கிய உடன்படிக்கை தயார்ப்படுத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊழிர்;களுடன் சுமார் 6 மாத காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் வகையில் (புதுப்பிக்கக்கூடியது) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது”.

'இந்த திட்டத்துக்கு நாம் 'ஒப்பந்த அடிப்படையிலான கொழுந்து பறித்தல்” என பெயரையும் வழங்கினோம். இந்த திட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஊழியர் ஒருவருக்கு சுமார் 1000 செடிகளை கொண்ட தேயிலை காணியை பராமரித்து, கொழுந்து பறிப்பதற்கான அனுமதி வழங்கப்படும். இது 6 மாத காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் தோட்டத்தில் நியம சம்பள முறைக்கமைய தொழில்புரியும் இந்த ஊழியர்கள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் தமக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் தேயிலை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு தேயிலை கொழுந்து பறித்து, சந்தை விலையில் எந்தான பெருந்தோட்ட கம்பனிக்கு விற்பனை செய்வர். கம்பனியும் சந்தை விலையில் தேயிலை கொழுந்தை ஊழியர்களிடமிருந்து கொள்வனவு செய்கிறது. ஆயினும் இந்த முழுப்பெறுமதியையும் ஊழியர்களுக்கு செலுத்தாமல், சுமார் 64 வீதமான பெறுமதியை மட்டுமே செலுத்துகிறது. இதர 36 வீத பெறுமதிக்கு கிருமிநாசினிகள், ஆலோசனைகளை வழங்குதல் போன்றவற்றுக்கான செலவீனமாக கம்பனி பெற்றுக்கொள்கிறது. இது குறித்த சகல விடயங்களும் எளிய தமிழ் மொழியில் நிபந்தனை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன'.

'இவ்வாறு தமக்கென ஒதுக்கப்பட்ட காணியில் பணியாற்றி மாதமொன்றுக்கு சுமார் 900 ௲ 1000 கிலோ தேயிலை கொழுந்து வரையில் ஊழியர்கள் பறிக்கின்றனர். இதன் காரணமாக மாதமொன்றுக்கு தமது சாதாரண சம்பளத்தை விட மேலதிகமாக 8000 ௲ 12000 ரூபா வரை மேலதிக சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்'.

'ஊழியர்களுக்கென ஒப்படைக்கப்பட்ட காணிகளில் வேறு நபர்களையும் வேலைக்கமர்த்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான ஊதியத்தையும் குறிப்பிட்ட ஊழியரே செலுத்த வேண்டியிருக்கும். தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்த இது ஒரு சிறந்த முறையாக அவர்கள் தெரிந்துள்ளனர். எமது மொத்த தேயிலை காணியின் 58 வீதமான பகுதி அதாவது, சுமார் 238 ஹெக்டெயர் இந்த திட்டத்துக்கு அமைய தோட்ட ஊழியர்கள் மத்தியில் பகிர்ந்தளித்துள்ளோம். இதில் சிறந்த அறுவடையை வழங்கும் காணி, சாதாரண அறுவடையை வழங்கும் காணி, குறைந்த அறுவடையை வழங்கும் காணி என அனைத்து விதமான காணிகளும் உள்ளடங்குகின்றன. சுழற்சி முறையில் இவை பகிரப்படுவதால் எந்தவொரு ஊழியரும் பாதகமான சூழ்நிலையை எதிர்நோக்குவதில்லை. அவர்களுக்கு தெரியும், இது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி, தாம் அதிகம் பணியாற்றினால், அதிகளவு ஊதியத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதில் தெளிவாக உள்ளனர்'. 

'இந்த நிலை காரணமாக எமது தோட்டத்தின் உற்பத்தி செலவு 22 வீதத்தால் குறைந்துள்ளது. அத்துடன் உற்பத்தி திறனும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தோட்டமும் கடந்த ஆண்டு சிறந்த நிதி பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்தது. இந்த துறையின் தொடர்ந்த செயற்பாட்டுக்கு இது போன்றதொரு கட்டமைப்பின் தேவை நிலவுகிறது' என குறிப்பிட்டார்.

இவ்வாறு தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தமது காணிகளை பணியாற்றும் இரு ஊழியர்களான எம்.பொன்னுசாமி மற்றும் எஸ்.விஜயகுமார் ஆகியோருடன் கருத்துக்களை கேட்ட போது, 'இந்த திட்டத்தின் மூலம் நாம் மாதாந்தம் மேலதிக ஒரு வருமானத்தை திரட்டிக்கொள்ள முடிகிறது. எமக்கு விடுமுறை கிடைக்கும் காலப்பகுதியில் பணியாற்ற மேலதிக வருமானத்தை தேடிக்கொள்ள நாம் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தோட்டத்திலே வேலை செய்யும் வசதியுள்ளதால், எமக்கு போக்குவரத்து செலவும் இல்லை. இந்த திட்டத்தை நாம் வரவேற்கிறோம்' என்றனர்.

ஆயினும் இதுபோன்றதொரு திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் கூட்டு உடன்படிக்கையின் பின்னர், முற்று முழுதாக அமுல்படுத்தப்படுமாயின் அதை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள் என இருவரிடமும் கேட்டபோது, 'அது குறித்த தீர்மானத்தை எமது தொழிற்சங்கங்களே மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் எமக்கு அதிகளவு வருமானம் பெற்றுக்கொள்ள முடிந்தாலும், ஊழியர் சேமலாப நிதி கொடுப்பனவு, மரணச்சடங்கு கொடுப்பனவு, மகப்பேற்று கொடுப்பனவு போன்ற இதர கொடுப்பனவுகள் எமக்கு கிடைக்குமா என்பது குறித்த ஒரு நிலை காணப்படுகிறது' என்றனர். 

இதே கேள்வியை நாம் தோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, 'இந்த நிலை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், முழு தேயிலை பரப்பையும் இவ்வாறு பகிர்ந்தளிப்பதன் மூலம் ஒரு சில சிக்கல்கள் காணப்படுகின்றன. கொழுந்துகள் கொள்ளையிடப்படல், காணிகளின் தரம் பேணப்படல் போன்ற சிக்கல்கள் நிலவுகின்றன. முறையாக திட்டமிடப்பட்டு, படிப்படியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்' என்றனர்.

தாழ்நில தேயிலை நில பகுதிகளில் பெரும் சவாலாக ஊழியர் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே இதுபோன்றதொரு வர்த்தக கட்டமைப்பு தாழ்நில பகுதிகளுக்கு பொருந்திய போதிலும், உயர் நில தேயிலை நில பகுதிகளான நுவரெலியா, ஹற்றன், மஸ்கெலியா போன்ற பகுதிகளில் முற்றிலும் மாறுபட்ட நிலையே காணப்படுகிறது. எனவே அந்த பகுதிகளுக்கு பொறுத்தமான ஒரு புதிய மாற்று வர்த்தக கட்டமைப்பின் தேவை எழுந்துள்ளது. 

உரிய அதிகாரிகள், இது குறித்து கவனம் செலுத்தி, தேயிலை பெருந்தோட்டத்துறைக்கும், இத்துறைசார்ந்தவர்களுக்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது எம் அவர்.
-ச.சேகர்.
நன்றி- தமிழ்மிரர்

No comments: