Monday, October 17, 2011

மலையக பகுதிகளில் நிலவும் வரட்சியினால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைப்பு

கடந்த சில மாதங்களாக மலையகப்பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மலையகப் பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியினால் தேயிலைச் செடிகள் கருகியும் வாடியும் காணப்படுவதால் நிர்வாகம் தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைத்துள்ளது. அத்துடன் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள் மாத்திரம் வேலை வழங்கும் நிலையில் தொழிலாளர்கள் 18 அல்லது 25 கிலோ கொழுந்து பறித்தாலும் கூட அவர்களுக்கு அரை நாள் சம்பளமே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்பவே தீபாவளி முற்பணம் வழங்கப்படுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் தோட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை இது குறித்து அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்தைக் கூட இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி முற்பணமாக வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா இம்முறை 4,500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இப் பண்டிகையை கூட சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணத்தை அதிகரித்து வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: