Tuesday, February 22, 2011

பெருந்தோட்ட வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்புடன் அந்நிய செலாவணியும் திரட்டு

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் அமைந்துள்ள பெருந்தோட்ட நிர்வாகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியையும் திரட்டக்கூடியதாகவுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வனாந்தர செயற்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் இரத்தினபுரி, ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்டப்பகுதியில் இடம்பெற்றது. இங்கு ஹப்புகஸ்தென்ன மற்றும் உடபுசல்லாவ பெருந்தோட்டங்களின் வனாந்தர முகாமைத்துவ பிரிவின் விசேட நிபுணரான திரு.பிரியா குணவர்த்தன ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"தேயிலை தயாரிப்பை பொறுத்தமட்டில் வனாந்தர திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டங்களின் மூலம் பெறப்படும் விறகு மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை விட அதிகளவு சிக்கனமான முறையில் தேயிலை உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடிகிறது. எரிபொருளின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 32 ரூபா செலவாகிறது. ஆயினும் விறகின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 8 ரூபாவே செலவாகிறது. ஆயினும் வருடாந்த தேசிய தேவையான 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்வதற்கு 4000 ஹெக்டெயர் பரப்பளவில் வனாந்தர செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன".

“இந்த வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்பு சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. பெருந்தோட்டங்களிலிருந்து பெறப்படும் விறகுகளின் மூலம் உற்பத்தி செலவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டங்களின் மூலம் மண் வளம் பேணப்படுவதுடன், நீர் சேகரிப்பு நிலையங்களுக்கு நிழலாகவும் பயன்படுகின்றன. வனாந்தர பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள பெருமளவான வர்த்தக நோக்கிலான வனாந்தரங்கள் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன. தற்போது பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதியில் காணப்படும் வனாந்தரங்கள் மொத்தமாக 20000 ஹெக்டெயார் பரப்பில் காணப்படுகிறது. 10 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட வனாந்தர திட்டஙகளின் கீழ் பெருமளவில் இயுக்கலிப்டஸ் கிராண்டிஸ் மற்றும் அகாசியா மங்கியம் போன்ற இன மரங்களே அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவை விறகு பாவனைக்காகவே பயிரிடப்படுகின்றன. தேக்கு மற்றும் மஹாகொனி போன்ற மரங்கள் உயர் பெறுமதியான தளபாட தயாரிப்புக்கு பயன்படுத்தும் நோக்கில் பயிரிடப்படுகின்றன".

"பெருந்தோட்ட வனாந்தர முகாமைத்துவ வரலாறு 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை பராமரிக்கும் குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திடலுடன் ஆரம்பமானது. இக்காலப்பகுதியிலேயே வனாந்தர திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஆரம்பமானது. இதற்காக இறப்பர், தேயிலை, தென்னை மற்றும் இதர பயிர்ச்செய்கைக்கு உதவாத நிலப்பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. 1997ஃ98 ஆண்டிலிருந்து வனாந்தர திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசாங்க திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது".

"அனைத்து வனாந்தர விஞ்ஞான வனாந்தர செயன்முறை (ளுஉநைவெகைiஉ கழசநளவசல pசயஉவiஉநள) உட்பட்டது. உரிய காலத்தில் வெட்டல், தறித்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்றன இதில் அடங்குகின்றன. உறுதியான செயற்பாட்டுக்கான முகாமைத்துவ முறைக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. பெருந்தோட்ட கம்பனிகளின் பெரும்பாலான வர்த்தக வனாந்தரங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு, இலக்கமிடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன".

"ஏனைய பயிர்களைப் போன்று வர்த்தக நோக்குடைய வனாந்தரங்களும் முறையான தறிப்பு, மற்றும் மீள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும். இதில் தறிப்பு நடவடிக்கையின் போது நோக்கம் கருத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, விறகு பெறுவது நோக்காக இருப்பின், 8-10 வருட காலம் வளர்ச்சியடைந்த மரங்களே தறிக்கப்படுகிறது".

அங்கீகாரம் பெற்ற பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் தேசிய அமைப்புகளின் மூலம் அடிக்கடி மேற்பார்வை செய்யப்படுவதுடன், ஒரு மரம் தறிக்கப்படும் போது இறுக்கமான கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு மரத்தை தறிப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் பிரதிநிதி, மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், சூழல் மத்திய அதிகார சபையின் பிரதிநிதி மற்றும் மாவட்ட அல்லது மாகாண செயலகத்தின் உத்தியோகத்தரிடமிருந்து அனுமதியை பெற்றுக்கொண்டே மேற்கொள்ளப்படுகிறது." என்றார்

நன்றி- வீரகேசரி
(வர்த்தக உலா)

No comments: