Wednesday, July 14, 2010

மலையக வரலாற்றில் தடம் பதித்த சி.வி

தொழிற்சங்கவாதியும் இலக்கியவாதியுமான சி.வி. வேலுப்பிள்ளை 1914-04-14 ம் திகதி கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை வட்டக்கொடை மடக்கும்புர தோட்டத்தில் பெரிய கங்காணியின் மகனாக பிறந்து மலையக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் என்றால் மிகையாகாது.

சி.வி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் மலைய இலக்கிய பரம்பலில் சாரல் நாடன், அந்தனி ஜீவா, இ. தம்பையா, பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசியர் அம்பலவாணர் சிவராசா, கலாநிதி க. அருணாச்சலம், கவிஞர் சு. முரளிதரன், ஜெ. சற்குருநாதன் , லெனின் மதிவாணன், என பலதும் ஆய்வுகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அதிகமானவர்கள் சி.வி யின் இலக்கிய ஆளுமையினையே அதிகமாக தொட்டு ஆய்வு செய்துள்ளனர். இவரது அரசியல் முன்னெடுப்புக்களும் செயற்பாடுகளும் குறைவாகவே ஆய்வுகளில் காணப்படுகின்றன.

அட்டன் மெதடிஸ்த கல்லூரி, நுவரெலியா புனித திருத்துவ கல்லூரி, கnhழும்பு நாலந்தா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த சி.வி, சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தின் தலவாக்கொல்லை பிரதேச உறுப்பினர் ஆனார்.

இலங்கை இந்திய காங்கிரஸின் செயற்பாட்டாளரான சி.வி வேலுப்பிள்ளை 1948ம் ஆண்டு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட காலத்தில் இதற்குக் காரணமாய் இருந்த டி.எஸ். சேனநாயக்காவிற்கு ஆதரவாக இருந்த பல தமிழ் தலைவர்களை கடுமையாக எதிர்த்தவர். பின் நாட்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி தோழர் கே. வெள்ளையனுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கத்தினை நிறுவி மலையகத்தில் அடையாளப்படுத்தக் கூடியதும் மக்கள் நலன் சார்ந்ததுமான மாற்று தலைமைக்கான தொழிற்சங்கத்தினை நிறுவி கட்டிக் காத்தவர்.

தனது இலக்கிய வரலாற்றின் இலக்கிய படைப்பிலும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் தொடர்பாக எழுதிய சி. வி இலக்கியங்கள் உழைக்கும் பாட்டாளிகளின் குரலாக அன்று துவங்கி இன்று வரை கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றின் சிகரம் பேராசிரியர் கைலாசபதியின் பாராட்டைப் பெற்ற மலையக படைப்பாளி சி. வி மாத்திரமே என்று எழுத்தாளர் அந்தனி ஜீவா அடிக்கடி கூறியுள்ளார். மலையக வரலாற்றினை நோக்கும் போது சி.வி யின் இடததினை சமன் செய்ய இதுவரை எந்த இலக்கியவாதியும், தொழிற்சங்கவாதியும் தோன்றவில்லை என்றால் மிகையாகாது.

சி.வி யின் வாழ்வும் பணியும் நேர்மையும் உழைப்பும் இன்றைய தொழிற்சங்க வாதிகளும் இலக்கியவாதிகளும் கற்று வாழ வேண்டியது கட்டாயமாகும். மலையக வரலாற்றுத் தடத்தில் மிக ஆழமாக தனது பதிவுகளை வைத்தவர் சி. வி ஆவார்.

ஆங்கில மொழியில் மலையக தமிழ் மக்களின் துன்பங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய இவர் தனது இலக்கிய பணியில் மாத்திரம் மட்டுப்பட்டு சோம்பிக் கி;டக்காமல் இயக்கப் பணியிலும் தடம் பதித்துள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய உண்மைகளாகும். 1984-11-19ம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார் சி. வி அவரது நினைவாக வட்டக்கொடை பூண்டுலோயா வீதியில் கல்லறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

“ ஆழப்புதைந்த- தேயிலைச் செடியின் அடியிற்
புதைந்த அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும் - ஏறி மித்து இங்கெவர்
வாழவோ தன்னுயிர் தருவன்”

- சி.வி -

No comments: