Sunday, February 28, 2010

தொடரும் வீட்டு வேலைக்கு சிறுவரை அனுப்பும் அவலம்: பெற்றோர் விழிப்பு பெறுவது எப்போது?

பாடசாலை செல்லும் வயதில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படும் சிறுமியரின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியா கவே இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறான செயல்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதும் சில காலத்தின் பின்னர் மறந்து விடுவதாகவே போக்குகள் அமைந்துள்ளன.

கடந்தாண்டு செப்டம்பரில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள கழிவுநீர்க் கால்வாய் ஒன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவைச் சேர்ந்த சுமதி ஜீவராணி ஆகிய இருவரினது மரணத்துடன் சிறுமியரை வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே நாம் கருதினோம்.

அப்போது அவர்களின் மரணம் பெருந்தோட்டப் பகுதி மக்களை அந்தளவிற்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருந்தது. தம் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்பிய பல பெற்றோருக்கு ஒரு படிப்பினையை தந்த அவ்விடயம் அப்போது எல்லோராலும் மறக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது. அந்த சம்பவத்துடன் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இனி கொழும்புக்கு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற உறுதிமொழியையும் வழங்கினார்கள். தொழிற்சங்கவாதிகள் மற்றும் சமூக நல அமைப்புக்கள் வீட்டு வேலைகளுக்கு அனுப்பும் பிள்ளைகளின் பெற்றோருக்கு அவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் கல்வி கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்ற உறுதிமொழியையும் தந்தனர்.

அது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மலையகம் முழுவதும் பல தொண்டர் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. வீட்டு வேலைகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இப்போது நிலைமை மீண்டும் பழைய பூஜ்ஜியத்துக்கே மாறியிருப்பதாக தோன்றுகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளை கொழும்பு நகர்ப்புறங்களுக்கு வீட்டு வேலைகளுக்கு அனுப்பவது இப்போதும் தொடர்கிறது.

குடும்ப வறுமை, பொருளாதார பிரச்சினை காரணமாக பிள்ளைகளை படிக்க வைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகக் நொண்டிச்சாட்டுக்களைக் கூறி ஒருசில பெற்றோர் மிகவும் இரகசியமாக தம் பிள்ளைகளை தரகர்களின் உதவியுடன் மீண்டும் வேலைக்கு அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.

மர்மமான முறையில் மரணமான சுமதி, ஜீவராணி ஆகிய சிறுமிகளின் விடயத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜரான சட்டத்தரணிகள் இலவசமாகவே பெற்றோர் தரப்பில் வாதாடினர்.

பெற்றோர் தரப்பில் தவறுகள் இருந்தும் இவ்வாறான அவல நிலை வேறெந்த பெற்றோருக்கும் வந்துவிடக்கூடாது எனக் கருதிய பல தொண்டர் அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்தன.

வேள்ட்விஷன் அமைப்பு 19 இலட்ச ரூபா செலவில் பாலர் பாடசாலையை அத்தோட்டத்தில் கட்டிக்கொடுத்திருக்கிறது. தற்போது அதில் 24ற்கு மேற்பட்ட சிறுவர்கள் அப்பாடசாலையில் கற்று வருகிறார்கள்.

முதலாம் தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு அந்நிறுவனம் தேவையான பாடப் புத்தகங்கள், உடைகள், பாதணி உட்பட பல பாடசாலை உபகரணங்களை கொடுத்து உதவி வருகிறது.

இவ்வாறு பல உதவிகள் செய்து கொடுத்த போதிலும் பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரியவில்லை. பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

அத்தோட்டத்திலுள்ள இளமொட்டு இளைஞர் கழகத்தின் செயலாளர் என்.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், சிவனொளிபாத மலைக்கு அண்மித்ததாக உள்ள மலைப்பகுதியில் இத்தோட்டம் அமைந்துள்ளது. 6000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கும் இத்தோட்டத்தில் மாணவர்கள் கற்பதற்கான எந்தவிதமான வசதிகளோ? சூழலோ இல்லையென்றே கூறுகிறார்.

சிறுவர்களை தரம் ஒன்றில் சேர்க்க வேண்டுமானால் மூன்றரை கி.மீ. தொலைவிலுள்ள நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அச்சிறார்கள் காலை உணவை சரியாக உட்கொள்ளாது பகல் வேளையில் வீடு திரும்பும் வழியில் பாதியில் மயக்கமுற்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

சிறுவர்கள் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் மலையேறி தினமும் செல்வதென்பது இயலாத காரியமாகும். இந்த சிறார்களுக்கு போஷாக்கான உணவை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் பகல் உணவு வழங்கப் படுகிறது. அவ்வாறான ஒரு திட்டத்தை மலையகத்திலுள்ள மிகவும் பின்தங்கிய தோட்டப்பகுதிகளுக்கு வழங்கினால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

இளைஞர் கழகத் தலைவர் எம்.ரஞ்சன்குமார் கருத்து தெரிவிக்கையில், என்னதான் தொண்டு நிறுவனங்கள் உதவிகளைச் செய்தாலும் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாது என்றார். இத் தோட்டத்தில் சுமார் 50ற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் எப்படியாவது பாடசாலைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

குறைந்த காலத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த 60 பேருக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளின் கடமையாகும் என்கிறார் ரஞ்சன்குமார்.

தோட்டத்தில் சரியாக வேலை கொடுப்பதில்லை. வேலை நாள் 21 நாள் என்றால் சம்பளமும் குறைவாக கிடைக்கும். பல்வேறு சிரமங்களின் மத்தியிலேயே குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது கடுமையான குளிரும் வெப்பமும் நிலவுவதால் தோட்ட நிர்வாகம் கேட்கும் கிலோ கொழுந்தை பறிக்க முடியாதிருக்கிறது. மழைக்காலங்களில் அட்டை எமது இரத்தத்தை உறிஞ்சுகிறது. அட்டை இரத்தத்தை உறிஞ்சினால் பரவாயில்லை.

ஆனால் அதனால் சரும நோய்க்கு ஆளாகிறோம். இந்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை எப்படி வரும் என கேள்வியெழுப்புகிறார் தொழிலாளியொருவர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இயங்கும் சமூக நல நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் பங்களிப்பில்லாமல் எதனையும் செய்ய முடியாதென்பதற்கு மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவு சிறந்த உதாரணமாகும். எனவே மிகவும் பின்தங்கிய பெருந்தோட்டப் பகுதிகள் மீது மலையகத் தொழிற்சங்கத் தலைமைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எதிர்காலச் சந்ததியினர் ஒரு கல்வியறிவுள்ள சமுதாயமாக மாற வேண்டுமானால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


மஸ்கெலிய - தி. சரண்யா

No comments: