Sunday, February 7, 2010

மலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்படி?

‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற பாரதியின் வரிகள் தான் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைப்பாடுகளை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

போராடி பெற்றுக் கொண்ட வாக்குரிமையை கூறுபோட்டு பகிர்ந்து கொள்கின்ற பரிதாப நிலையையும், இருக்கும் பிரதிநிதித்துவங்களையும் இழந்து விடுகின்ற நிலையை எண்ணும் போது இந்த சரிவிலிருந்து விடுபடுவதற்கு உடனடியான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை உணர்த்துகிறது.
நூற்றாண்டு காலமாக உழைப்பை மட்டுமே ஒப்புவித்த மலையக தொழிலாளர் சமூகம் இலங்கை பிரித்தானியரிடமிருந்து பெற்ற உரிமை தமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் 1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமும் 1949ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டமும் இவர்களுக்கு பிரஜாவுரிமையும், வாக்குரிமை மறுப்பையுமே தந்த வரலாற்றை எம்மால் மறந்துவிட முடியாது.

அண்மைக்கால இந்திய வம்சாவளியினர் என்ற முத்திரைக் குத்தலோடு நாடற்றவர்களாக இருந்த மலையகத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் வெளிப்பாடு, உரிமைப் போராட்டத்தின் உத்வேகம், தொழிற்சங்கத்தின் எழுச்சிப்போராட்டம், போராட்டச் சிந்தனைகள் அனைத்தும் மலையகத்தில் வாக்குரிமை கிடைத்த பின்னர் இந்த சமூகம் வந்த வழியை மறந்து நிற்பது வேதனை தரும் விடயமாகும்.

இன்று நாம் பெற்றுள்ள வாக்குரிமைக்கு பின்னால் பெரியதொரு பின்னணியிருப்பது அதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

(1) 1949இல் 3ஆம் இலக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானின் வதிவிட (பிராஜவுரிமை) சட்டம்
(2) 1964 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட (03.10.1964) ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம்.
(3) 1974 ஆம் ஆண்டு ஜனவரி 27இல் கொண்டுவரப்பட்ட ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம்.
(4) 1987 ஆம் ஆண்டு இலக்கம் 5இல் கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்.
(5) 1988 ஆம் ஆண்டின் இல. 39 இன் படி கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரி¨மை வழங்கும் (விசேட சரத்துக்கள்) சட்டம்.
(6) இல. 35 இன் படி 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்

என இந்தச் சட்டங்களின் பின்னணியில் எத்தனை போராட்டங்கள் இடம்பெற்றன என்பதை காலம்தான் பதில் சொல்லும். இத்தனை சட்டங்கள் வந்து நாம் வாக்களிக்கின்ற தகைமை பெற்றாலும் அடிப்படையில் இன்னும் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்படும் நிலைதான் காணப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் 1930 களில் இருந்து இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் தொழிலாளர்கள் தேசிய அரசியலமைப்பில் பொருத்தமான பிரதிநிதித்துவத்தை இன்னும் பெற்றுக்கொள்ளா திருக்கின்றனர் என்றே கூறவேண்டும்.

குறிப்பாக 1931இல் இடம்பெற்ற முதல் கிராம சபைத் தேர்தலில் மலையக சமூகம் அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் 95 பேர் இருந்த இடத்தில் 08 பிரதிநிதிகள் மட்டுமே இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர். வாக்குரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் 1952 இலிருந்து 1977 வரை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமை எமக்கில்லாமல் போனது.

1977இற்குப் பின்னர் படிப்படியாக தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்க முடிந்ததெனினும் இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாமல் போய்விட்டது. மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது போல 16 பிரதிநிதிகள் இருக்க வேண்டிய இடத்தில் அதில் பத்தாக குறைந்து அதிலும் ஒருவர் வேறொரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு நிலைமையைத்தான் மலையக அரசியல் நிலைப்பாட்டில் காண்கின்றோம்.

மலையகத்தை பொறுத்தவரையின் அரசியலும் தொழிற் சங்கமும் இணைந்தே காணப்படுவதால் இலக்கை எட்டமுடியாமல் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. அரசியல் தொழிற்சங்கப் போட்டா போட்டிகள் காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் தொழிற்சங்கங்களையும் பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளையும் வைத்துக்கொண்டு சிதறுண்டு தேசிய கட்சிகளிலே இன்னமும் தங்கியிருக்க வேண்டிய பரிதாப நிலை தொடர்கிறது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மலையக இந்திய வம்சாவளி மக்கள் ஒவ்வொருவருக்கும் உரித்துடையதாக இருக்கிறது. ஆகவே மலையக பிரதிநிதிகள் முழுமையாக தேசியக் கட்சிகளில் பிணைத்துக் கொண்டோ அல்லது தனித்தனி குழுமங்களாக பிரிந்து நின்றோ போட்டியிட வேண்டும் என்பதற்காக தனிக் குழுக்களாக செயற்படுவார்களேயானால் இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவங்களையும் எதிர்காலங்களில் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஒன்பது தொகுதிகளை கொண்டிருக்கும் பதுளை மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டில் வாக்காளர் பதிவின் அடிப்படையில் 5,74,814 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் கணிசமான தொகையினர் இந்திய வம்சாவளியினராவர். மொத்த எண்ணிக்கையில் 16.44 வீதத்தினர் தேசிய அடையாள அட்டையைக் கூட பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். பதுளை மாவட்ட வாக்குகளை தொகுதிவாரியாக பார்க்கும் போது மஹியங்கனை 85,562, வியலுவ 48,231, பசறை 60,002, பதுளை 51,468, ஹாலி-எல 63,124, ஊவா பரணகம 59,472, வெளிமடை 68,937, பண்டாரவளை 77,312, அப்புத்தளை 60,706 ஆகும். இந்நிலையில் பெருந்தோட்ட வாக்காளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதனூடே பசறை, நமுனுகுல பகுதிக்கு அண்மித்த தென்னக்கும்புர, கந்தவேரன போன்ற தோட்டங்கள் மொனராகலை மாவட்டத்திற்குள் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் 4,57,137 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருப்பதோடு இவர்களிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி தமிழ் மக்களே. நுவரெலியா மாவட்ட தேர்தல் வாக்காளர் பதிவின் அடிப்படையில் நுவரெலியா மஸ்கெலியா 2,47,069, கொத்மலை 70,730, ஹங்குராங்கெத்த 65,969, வலப்பனை 73,369 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன ஆளுங் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக மக்கள் முன்னணியின் இன்னொரு பிரிவினர் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட தயாராகி வருவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவற்றுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் போது இ. தொ. காவிலிருந்து வெளியேறிய எம். சச்சிதானந்தன் ஐக்கிய தேசியக் கட்சியிலும், சுகாதார பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆளுங்கட்சியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நுவரெலியா மாவட்டத்திலும் இவ்வாறான நிலையே காணப்படுகின் றது. எது எப்படியிருப்பினும் அகலமாக காலை வைக்க நினைக்காமல் ஆழமாக வைத்தால் மட்டுமே மலையகம் இருக்கும் பிரதிநிதித்துவத்தையாவது பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பசறையூர் க. வேலாயுதம்

No comments: