Saturday, July 4, 2009

சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் 03-07-2009 முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.
இப் பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொண்டன. இப் பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 500 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கூட்டாக முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தின. எனினும், இதற்கு இணங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனம், வருடத்திற்கு பன்னிரண்டரை வீத சம்பள அதிகரிப்பு வழங்க முன்வைத்த யோசனையை முழுமையாக நிராகரித்த தொழிற்சங்கங்கள், இது சம்பந்தமாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஒரு பொது கூட்டு நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
முகாம்களிலுள்ள மலையக மக்கள் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்க கோரிக்கை


வடக்கில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களை மலையகத்திலுள்ள அவர்களது உறவினர்களின் இருப்பிடங்களுக்குச் செல்ல அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணி சர்வ கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் ஜனாதிபதியை சந்தித்த போது கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு முன்பு மலையகத்திலிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் இன்று அகதிகளாக உள்ளனர். இவர்கள் விரும்பும் பட்சத்தில் இவர்களை மலையகப் பகுதிகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை காணுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்க்கமான முடிவு இன்றேல் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு விடயத்தில் தீர்க்கமான முடிவு கிடைக்காததால் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொறுமை காத்து வந்த தொழிலாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளினதும், கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்களினதும் அலட்சியப் போக்கை கண்டித்து பல்வேறு வகையான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமீளாய்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி தோட்டக் கம்பனிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்கும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தள்ளப்பட்டுள்ளது என்றார்
சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்காமையானது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Thursday, July 2, 2009

மவுசாகலை நீர்த்தேக்கம் திறக்கப்படும் நிலை

கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா தெரிவித்தார். இதனால் இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என குறிப்பிட்டார்.
மலையகத்தில் 24 மணி நேர எச்சரிக்கை

மலையத்தில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார தெரிவித்தார். நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் 100மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது. மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும்,நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன.அவை ஏற்கனவே மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
லயன்கள் எரிந்து நாசம்

வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனில் ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் அறைகள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும்,இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தீ பரவியதே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tuesday, June 30, 2009

சேமலாப நிதி இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்கள்

புளத்சிங்கள, தங்கஸ்கந்த தோட்டம் சுமார் 200 ஏக்கரைக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான ஒரு இறப்பர் தோட்டம். பத்து குடியிருப்புக்களைக் கொண்ட ஒரு லயன் கட்டடமும், பன்னிரெண்டு குடியிருப்புகளைக் கொண்ட ஒரு லயன் கட்டடமுமாக இரண்டு கட்டடங்களே இருக்கின்றன. 24 குடியிருப்புக்கள் மட்டுமே இருந்த போதிலும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குடும்பங்கள் இதில் வசித்து வருகின்றனர்.50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல வருடங்களாக வேலை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் மாதம் 1500, 2000 என்ற தொகையையே சம்பளமாகப் பெற்று வந்துள்ளனர். சட்டப்படி சம்பளம் வழங்கப்படாது பட்டைசீவி இறப்பர் பால் கொண்டு வருவதைப் பொறுத்து நாளொன்றுக்கு 95 ரூபா என்ற கணக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் பெற்றுக் கொண்டவர்களும் கையொப்பம் எதுவும் போடாது பணத்தை மட்டுமே பெற்று வந்துள்ளனர்


2003ம் ஆண்டு முதல் தோட்டம் மூடப்பட்டுள்ளதாகத் தோட்ட உரிமையாளர் அறிவித்ததையடுத்து இங்குள்ள தொழிலாளர்கள் வெளியில் சென்று உழைத்து ஊதியம் தேடி குடும்பம் நடாத்தி வருகின்றனர்.தோட்டம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்த போதிலும் வெளியிடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து வேலை வாங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.வேலை செய்த காலத்தில் அவர்களுக்கான எவ்வித சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படவில்லை.லயன் கட்டிடம் திருத்தி கொடுக்கப்படவில்லை

தோட்டத்தில் தற்பொழுது வேலையில்லாத போதிலும் தொடர்ந்து இதே லயன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். குடி நீர்வசதி, மலசலகூட வசதி எதுவுமே கிடையாது. இந்த வசதிகள் எதுவுமே அற்ற நிலையிலேயே இன்று வரையில் இங்குள்ள தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி அட்டை வழங்கப்படவில்லை. 1982 முதல் 1992 வரையிலான காலப் பகுதியில் ஒரு சிலருக்கு ஊழியர் சேமலாப நிதிக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஏனையோர் இது தொடர்பாக தோட்ட உரிமையாளரிடம் கேட்ட போது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆந் திகதி இங்குள்ள தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகித்த தொழிற்சங்கமான இ.தொ. கா. மூலம் களுத்துறை தொழில் நீதிமன்றத்தில் தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். கஷ்டப்பட்டு உழைத்துத் தேடிய பணத்தை நான்கு வருடகாலமாக நடைபெற்ற வழக்கு தொடர்பாக செலவு செய்த போதிலும் தொழிலாளர்கள் வேலை செய்தமையை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் கிடையாது எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்ததுடன், இந்த வழக்கு தொடர்பாக ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதி தோட்ட உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு எங்களைக் கஷ்டத்தில் போட்டுவிட்டார் என விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.


நேர்மைக்கும், நீதிக்கும் உரிய இடம் கிடைக்கவில்லையென அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக 2007ம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் எதுவித பதிலும் கிடைக்கவில்லையென தெரிவித்தனர்.தோட்டப்பாதை மிக மோசமான நிலையிலேயே உள்ளது. அவசரத் தேவைகளுக்கோ அல்லது திடீர் நோயாளி ஒருவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதாயின் சுமார் ஒரு கி.மீ.தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. முச்சக்கரவண்டியில் செல்வதாயின் 150 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது. தபால் சேவை கிடையாது. புளத்சிங்கள தபால் அலுவலகத்துக்குச் சென்று கடிதம் ஏதும் வந்துள்ளதா என அவரவர் விசாரித்துப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பாடசாலை மாணவர்களும் நடந்தே செல்ல வேண்டியுள்ளனர்.


தனியார் தோட்டம் என்று சொல்லும் பொழுது பெரும்பாலும் அங்கு சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. மூடி மறைந்த ஒரு பிரதேசமாகவே இருந்து வருகிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பது கூட வெளியில் தெரிவதில்லை. தொழிற்சங்கவாதிகளும் தனியார் தோட்டம் குறித்து பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்வதில்லை.கம்பனித் தோட்டங்களில் வசித்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளைவிட தனியார் தோட்டங்களில் கெடுபிடிகளும் பிரச்சினைகளும் எண்ணிலடங்கா தவையாகவே இருந்து வருகின்றன.

தொழிலாளர் சார்பாக ஆஜராகி வாதாடி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டிய தொழிற்சங்கவாதிகள் தோட்ட உரிமையாளரிடம் சந்தோஷம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு தொழிலாளரை நட்டாற்றில் கைவிட்டு விடுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும் என இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரைகாலமும் இந்தத் தோட்டத்தில் தொழிலாளரின் நலன் கருதி எந்தவொரு திட்டமோ உதவியோ எவரும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆக மேல் மாகாண சபை உறுப்பினரான கித்சிரி கஹட்டபிட்டிய சுமார் 25 லட்சம் செலவில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


எஸ். சூரியமாலா (53)


இருபத்தைந்து வருடகாலம் கணவனும் நானும் தோட்டத்தில் வேலை செய்தோம். சம்பளம் மட்டுமே கிடைத்தது. வேறு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி கிடைக்கவில்லை. வழக்கு தொடர்ந்து எதுவித பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. நாலு வருடங்களாக நடந்த வழக்குக்காக பெரும் பணம் செலவழித்தோம். கடைசியில் தொழிற்சங்கவாதிகள் எங்களை ஏமாற்றி தோட்ட உரிமையாளருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். இவ்வளவு காலம் தொழிற் சங்கத்தில் இருந்தும் ஒரு பயனுமில்லை. எங்கள் நிலையை கடவுளிடம்தான் சொல்ல வேண்டும் என்றார்.


எஸ். ராஜசிங்கம் (48)

நான் வெளியில் வேலை செய்து நாளொன்றுக்கு 275 ரூபா முதல் 300 ரூபா வரையில் உழைத்து வருகிறேன். தோட்டத்தில் ஏழு வருடகாலம் வேலை செய்த போதிலும் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.தனியார் தோட்டங்களில் நடக்கும் அநீதியை யாரும் தட்டிக்கேட்பது கிடையாது.


தமிழ் அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் இருந்தும் பயனில்லை. ஒரு கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களிடம் மூன்று மாதம் அலைய வேண்டியுள்ளது. அவர்களைச் சந்திக்கச் சென்றால் ஐயா குளித்துகொண்டு இருக்கிறார். சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அல்லது செய்தி கேட்கிறார், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியான பதில்கள் தான் கிடைக்கின்றன என்றார்

இங்கிரிய மூர்த்தி


நன்றி- தினகரன்
சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுகோள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிர்ணயித்து தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டதால் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர் தொழில் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரத்னவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால் தொழிலாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்னைய சம்பள அதிகரிப்பின்போதும் அவர்களுக்கு வாழ்வதற்கு போதுமான சம்பள உயர்வு வழங்கப்படாமையினாலும்,அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் தோட்டத் தொழிலாளர் நாளுக்கு நாள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தோட்டத்தொழிற்துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்வாதாரப் போராட்டத்துடன் தோட்டங்களில் தொழில்புரிகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வழங்குவதாக வாக்குறுதியளித்த நிவாரணம் கூட அம்மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை ஓரளவாவது நிவர்த்திசெய்யும் வகையில் அரசாங்கத்தினதோ, முதலாளிமாரினதோ ஒத்துழைப்பு கிடைக்காது அவர்களது சம்பளத்தை சட்டபூர்வமாக அதிகரித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை தொடர்ந்து பிற்போடுவது தோட்டத்தொழிற்துறைக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இவ்விடயத்தில் நம்பிக்கை இழந்திருக்கும் தொழிலாளர்கள் வாழ்வதற்குப்போதுமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருமாறு பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேயிலை, இறப்பர் தொழிற்துறை உற்பத்திகள் குறைந்தன. இதனால், தேசிய வருமானத்துக்கும் பாதிப்பேற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். எனவே தான் இதனை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
2006 ஆம் ஆண்டு சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்கப் போராட்டம் 3 மாதங்களாகத் தொடர்ந்தன. அத்தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் 3.300 மில்லியன் நட்டமேற்பட்டதாக முதலாளிமார் தெரிவித்திருந்தனர்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைக்குப் போதுமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாக இருந்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கவேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் இதனை கவனத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கும் நிலையிலும் முதலாளிமார் அதனை தள்ளிப்போட்டு வருகின்றனர். தேயிலை வர்த்தகச் சந்தையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்டத்துறை நல்ல நிலையிலேயே உள்ளது. தேயிலை ஒரு கிலோ 450 ரூபாவாகவும் இறப்பர் ஒரு கிலோ 250ரூபாவாகவும் உயர்ந்த விலையில் இருப்பதனால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதுவித தடையும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களை நம்பிக்கை இழக்கச்செய்யாது சுமார் நான்கு இலட்சம் தோட்டத்தொழிலாளிகளுக்கு வாழ்க்கைக்குப்போதுமானளவு சம்பளத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கும்படி முதலாளிமார் சம்மேளனத்தை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். இதற்காக அரசாங்க பிரதிநிதி என்ற வகையிலும் தொழில் தொடர்பு மற்றும் மனிதவள அமைச்சர் என்ற வகையிலும் நீங்கள் துரித தலையீடொன்று செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். – நன்றி – தினக்குரல்

Monday, June 29, 2009

பசறை பிரதேச அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா

பசறை பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, புதிய பஸ்தரிப்பு நிலையம், இரு வழிப்பாதை, குடிநீர் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கமநெகும, மகநெகுமபோன்ற திட்டங்கள் ஊடாக பசறை மடூல்சீமை லுணுகலை பிரதேசத்தில் பல பாதைகள் பல படிக்கட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பசறையில் பஸ்தரிப்பு நிலையம், அமைக்கப்பட்டு பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது. இந்த பஸ்நிலையம் மிக விரைவில் திறக்கப்படும். அதற்கான அனைத்து வேலைகளும் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பசறை நகரம் குறுகிய இடவசதிக்குள் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக இருவழிப்பாதை மிக விரைவில் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மற்றும் மில்லபெத்த பகுதியிலிருந்து பசறை நகரம் வரைக்கும் நீர்;திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கான திட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகும்

பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க தவறினால் தமிழர் பிரதிநிதிதித்துவம் பறிபோகக்கூடிய அபாயம் உள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி..வி. சென்னன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையில் ஏற்கெனவே ஐந்து தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர். நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமாக தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்துவிடக்கூடாது. பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது. இதனை கருத்தில்கொண்டு அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும்
அடைமழையால் வெள்ளப்பெருக்கு, மணிசரிவி அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய அடை மழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் நிரம்பிக் காணப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படுமென இடர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, சில இடங்களில் மண்சரிவு ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி காவத்தை பிரதான வீதியில் கெட்டேதென்ன என்னுமிடத்தில் கடந்த 27-06-2009 மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் வசித்து வந்த இரு பெண்கள் படுகாயமடைந்து காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில். ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இப்பகுதி மக்களுக்கு மண்சரிவு வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரத்தினபுரி எல்லாவெல மகா வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள மலை சரிந்து வருவதாக எகலியகொடை பிரதேச சபையினர் தெரிவிக்கின்றனர். அடை மழை காரணமாக இந்த மலையின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளதால். இப்பகுதியிலுள்ள சுமார் 14 குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு எல்லாவெல மகா வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா
மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படாதது கவலையளிக்கிறது

பெருந் தோட்டத்துறைச் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இதுவரை காலமும் தீர்க்கப்படாமலிருப்பது கவலைதரக் கூடிய விடயமென ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் முதுகெலும்பான தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு முகங்கொடுத்து அதற்குத் தீர்வு காண்பதில் எமக்குப் பங்குண்டு. அரசாங்கத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் இவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தோட்டப்புற பகுதியிலுள்ள வெற்றுக் காணிகளையெல்லாம் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென அரசு வெள்ளையறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சிறுபான்மை மக்களின் தீர்மானமிக்க வளம் குறைக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையொன்று உருவாகும். கடந்த 200 வருடங்களாக குளிரிலும் பலத்த காற்றின் மத்தியிலும் வேலை செய்து நாட்டின் வருமானத்தின் பிரதான தூண்களாக இருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை முகவரி கிடையாத சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புக்கோ,சுயநலனுக்காகவோ மூடி மறைக்கப்படாமல் பகிரங்கப்படுத்த என்றும் தயங்கக்கூடாது.
இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூபா 200 மில்லியன்

சகல வாகனங்களுக்குரிய ரயர்களையும் உள்ளுரிலேயே உற்பத்தி செய்யும் வகையில் இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஏதுவாக 200 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையாக முன்வைப்பதாக தெரிவிதத்த கைத்தொழில் அமைச்சர் குமார்வெலகம
வருடாந்தம் ரயர் இறக்குமதிக்கென 3 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. தேசிய மட்டத்தில் 44 வீதம் இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. 7 வீதம் அல்லது 9 வீதம் செயற்கை இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. தேசிய மட்டத்தில் ரயர் உற்பத்தியை அதிகரிக்கும் போது வெளிநாட்டுக்குச் செல்லும் எமது பணத்தை மீதப்படுத்த முடியுமென்ற நோக்கத்திலேயே உள்ளுரிலேயே ரயர் உற்பத்தி மேற்கொள்ளவும் இதற்கு நவீன தொழில்நுட்பமும் தேவைப்படுகிறது என்றார்













அப்புகஸ்தனை திபட்டன் தோட்டம்


காடு மண்டிய தோட்டம் தேயிலை மலையாவது எப்போது?



180 ஏக்கர் பரப்பளவில் தேயிலைக் காடாகக் காட்சியளித்த இத்தோட்டம் இன்று காடு மண்டிக் கிடக்கிறது. 175 குடும்பங்கள் வாழ்ந்த இத் தோட்டத்தில் இன்று சில குடும்பங்களே பலத்த எதிர்பார்ப்புக்களுடன் நாட்களை கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு விடிவு எப்போது யாரால் வரும்?’
மஸ்கெலியா நகரிலிருந்து நோட்டன் வழியில் செல்லும்போது சுமார் 18 கி.மீற்றர் தூரத்தில் அப்புகஸ்தனை தோட்ட திபட்டன் பிரிவு இருக்கிறது. தனியார் துறைக்குச் சொந்தமான திபட்டன் பிரிவானது 180 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தேயிலைத் தோட்டமாகும். சுமார் 175 குடும்பங்கள் இத்தோட்டத்தில் வசித்து வந்தன. தேயிலை உற்பத்தியே பிரதான தொழிலாகும். சிறந்த முறையில் இயங்கி வந்த இத்தோட்டம் அப்புகஸ்தனையுடன் இணைக்கப்பட்டு அரச பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது
பெருந்தோட்டங்கள் மீண்டும் நீண்டகாலக் குத்தகைக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தேயிலைச் செடிகளுக்கிடையே வாகை இன மரங்கள் நடப்பட்டன. 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவிலான வாகை கன்றுகள் நாட்டப்பட்டன. எஞ்சிய 80 ஏக்கர் நிலப்பரப்பில் தனியே தேயிலைச் செடிகள் வளர்ந்திருந்தன. எனினும் தேயிலையை உற்பத்தி செய்தவற்கான எந்தவொரு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலா காலத்திற்கேற்றவாறு உரமோ, மருந்துகளோ இடப்படாமல், சரியான முறையில் பராமரிக்காமல் தேயிலைக் கொழுந்தை மட்டும் எடுத்து வந்தது, புற்கள், மரம், செடி, கொடிகள் வளர்ந்து இன்னும் 10 வருட காலப்பகுதிக்குள் திபட்டன் தோட்டம் காடாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகை மரங்கள் பெரிதாக வளர்ந்து விட்டதால் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே போகிறது. பாரிய வாகை மரங்கள் வெட்டப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்தால் தொழிலாளர்களாகிய எமது வாழ்வு சிறப்பாக அமையும். நிர்வாகத்திற்கு பெருமளவு இலாபம் தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்றார் பெருமாள் ஜயசேகரன். தோட்ட நிர்வாகம் தேயிலை உற்பத்தியில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும். தரிசு நிலப்பகுதியில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நிர்வாகங்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேவேளை தேயிலைக் செடிகளுக்கு இடையே பாரியளவில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மலைப்பகுதியில் பெரிய மரங்கள் வளர்வதால் அதிகளவு நீரை உறிஞ்சுவதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுக்கள் இல்லாமல் போகலாம். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லாத வகையில் தோட்ட நிர்வாகம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார் ஜயசேகரன்
அதே தோட்டத்தில் கீழ் பிரிவில் இருக்கும் அஜித்குமார், குடியிருப்புக்கள் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்தை கடப்பதற்கான பாதை நீண்டகாலமாக கவனிப்பாரற்று குன்றும் குழியுமாக காட்சி தருகிறது. ஒரு நோயாளியை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்ல முடியாதுள்ளது.
இவ் வீதியை புனரமைப்பு செய்வதற்கென அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இன்று வரை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தோட்ட நிர்வாகமும் எதனையும் கண்டுகொள்வதில்லை என்றார் புஷ்பகுமார். பெண் தொழிலாளியான சுசிலா, கருத்து தெரிவிக்கையில், தேயிலைச் செடிகள் இருந்த போதிலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர். புற்கள் தேயிலைச் செடிகளுக்கு மேலாக வளர்ந்து காடுகள் போல காட்சி தருகிறது. ஏனைய மூன்று நாட்களிலும் அப்புகஸ்தனை மேல் பிரிவில் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வேலைக்கு போனால் மாலை 6 மணிக்கு வீடு வந்து சேருகிறோம் என்றார்.
மழைக்காலங்களில் அட்டைக்கடியால் பெரிதும் சிரமப்படுவதாக புஷ்பவதி தெரிவிக்கிறார். தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. எமது தோட்டத்தில் வைத்தியசாலை இருந்தும் அங்கு வைத்தியர் ஒருவர் இல்லாததால் அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைகளை நாடவேண்டியிருக்கிறது. தோட்ட வைத்தியர் மாலை 5 மணிவரை வைத்தியசாலையில் இருப்பார். நாங்களும் ஆறு மணியாவதற்குள் வீட்டுக்கு சென்றால்தான். அதன் பின்னர் தனியே செல்ல முடியாது பன்றி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது.
எமது தோட்டத்தினூடாக பிரதான வழியை சென்றடைவதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அல்வா லக்சபான தோட்ட மற்றும் மக்கள் இவ் வீதியையே பெரிதும் பபயன்படுத்துவதுண்டு. மத்திய மாகாண உறுப்பினர் ஒருவர் தோட்ட வழியாகச் செல்லும் ஆற்றை ஊடறுத்து பாலம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தார். எனினும் 25 சதவீத வேலைகள் நடைபெற்று பாதியில் முடங்கிவிட்டது. நாளொன்று ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீதியையும் பாலத்தையும் பயன்படுத்துவதால் அதனை புனரமைப்புச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் புஷ்பவதி.
1987ம் ஆண்டில் ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்தபோது எமது தோட்டப் பகுதியிலுள்ள ஒரு சமதரையான 40 ஏக்கர் காணியில் விமானத்தளம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இறுதியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. திபட்டன் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் 16 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடியிருப்புக்கள் 150 வருடகால பழைமை வாய்ந்தவை. தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே அதில் வசித்து வருகின்றன. ஏனையோர் வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அக்குடியிருப்பின் கூரைத்தகடுகள் ஓட்டையாகி சல்லடைபோல தோன்றுகின்றன. மின்சார வசதியிருந்தும் மின் இணைப்பை பெறுவதற்கான போதிய பணமில்லாத நிலையில் வாழும் இத்தோட்ட மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது நமது அரசியல் தலைவர்களின் கடமையாகும்.


இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் லயன் காம்பராக்களை தகர்த்து புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொண்டுக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முன்வர வேண்டும். இவ்வாறான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்பதே தோட்ட மக்களின் அவாவாகும். தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வாக்கு கேட்பார்கள் நாங்களும் வாக்குகளை அளித்து அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்புகிறோம். ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லையென அப்பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செ. தி. பெருமாள்
நன்றி- தினகரன்