Monday, April 6, 2009

இருந்த பிரதிநிதித்துவங்களையும் இழந்து விட்ட களுத்துறை தமிழர்கள்

மேல் மாகாணத்தில் பெருந்தோட்டங்களைக் கொண்ட மாவட்டமாகக் களுத்துறை மாவட்டம் உள்ளது. தேயிலை, இறப்பர் தோட்டங்களைக் கொண்ட இம்மாவட்டம் அகலவத்தை, பண்டாரகமை, பேருவளை, புளத்சிங்கள, தொடங்கொடை, ஹொரண, இங்கிரிய, களுத்துறை, மதுராவளை, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, பாணந்துறை, வலல்லாவிட்ட, ஆகிய பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுள்ளன. இவை அனைத்திலும் சிங்கள மக்களே பெரும்பான்மையினராகவுள்ளனர்.

இவற்றுள் அகலவத்தை,புளத்சிங்கள, தொடங்கொடை, ஹொரண, இங்கிரிய, மதுராவளை, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட ஆகிய பத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தமிழர்கள் இரண்டாமிடத்திலும் பண்டாரகம, பேருவளை, களுத்துறை, பாணந்துறை ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இரண்டாவது இடத்திலுமுள்ளனர் என்பதை 2001 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீடு காட்டுகின்றது.
இம்மாவட்டத்தின் 2001 ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த சனத்தொகை 1,060,800 ஆக இருந்துள்ளதுடன் சிங்களவர்கள் 923,893 பேராகவும் (87.1) தமிழர்கள் 42, 296 பேராகவும் (4%) ஆகவும், முஸ்லிம்கள் 8.8%ஆகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை நகரம் இம்மாவட்டத்தின் தலைநகராகவுள்ளதுடன் இங்கு கதிர்வேலாயுத சுவாமி கோயில் என்ற பிரசித்தமான இந்துக் கோயில் உள்ளது. அதேபோன்று பாணந்துறை நகரில் கந்தசுவாமி கோயிலும் முக்கியமானது. தற்போது இக்கோயில் நிர்வாகம் இந்து சமய விவகாரத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளது. குளோடன் முத்து மீனாட்சியம்மன் கோயில் இங்கிரிய குறிஞ்சி மகாமாரியம்மன் கோயில், றைகம மாரியம்மன் கோயில், எலதுவ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், சென்.ஜோர்ஜ் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில், டெல்கித் முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல இந்துக்கோயில்கள் இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்றவைகளாகவுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் முப்பத்தெட்டு தமிழ்ப் பாடசாலைகளிருந்த போதிலும் எந்தவொரு பாடசாலையிலும் உயர்தர வகுப்புகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் இல்லாமையும் மத்துகம சென்.மேரிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் கலை, வர்த்தகப்பிரிவுகளுள்ள அதேவேளை, உயர்தர வகுப்புள்ள டெல்கித், மில்லகந்த ஆகிய இரு தமிழ் மகாவித்தியாலயங்களிலும் கலைப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. குளோடன் நவோதய தமிழ் வித்தியாலயத்தில் தற்போது 111 வரையான வகுப்புகள் இயங்குகின்றன. இப்பாடசாலையை இம்மாவட்டத்தின் சகல வசதிகளும் கொண்ட கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான பிரிவுகளை உள்ளடக்கிய தரமான தமிழ்ப் பாடசாலையாக உருவாக்க கூடிய வசதிகளுள்ளன. இடவசதியும் அதிபர், ஆசிரியர் விடுதிகளும் கொண்ட இப்பாடசாலை மாணவர்களுக்கான விடுதி வசதிகள் கொண்ட இப்பாடசாலை மாணவர்களுக்கான விடுதிவசதிகள் கொண்ட பாடசாலையாக அமையக்கூடிய வசதிகள் செய முடியும். களுத்துறை மாவட்டத்தில் தரமான தமிழ்ப்பாடசாலையாக உருவாக்கக்கூடிய பொருத்தமான வசதிகள் இங்கு உள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த சி.ஜெயக்குமார் இப்பாடசாலையின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இப்பாடசாலையின் அதிபராக விருப்புடன் செயற்படும் இவ்வேளையில் அவரது ஆர்வமிக்க நோக்கத்தைப் பூர்த்தி செய முன்வர வேண்டியது பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். 1981 ஆம் ஆண்டில் 5.2 வீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 4 வீதமாகக் குறைவடைந்துள்ளது. அதேபோன்று 1981 ஆம் ஆண்டில் 87.2 வீத சிங்களவர்களின் எண்ணிக்கை 87.1 வீதமாகவும் முஸ்லிம்களின் வீதம் 7.4 இலிருந்து 8.8 ஆகவும் மாற்றமடைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராகவுள்ள ஒரே உள்ளூராட்சி நிறுவனம் பேருவளை நகர சபை மட்டுமே. பேருவளை நகரசபை நகரசபையில் முஸ்லிம்கள் 76 வீதமாகவும் சிங்களவர்கள் 21.2 வீதமாகவும், தமிழர்கள் 2.1 வீதமாகவும் உள்ளனர். ஆனால், பேருவளை பிரதேச செயலகப் பிரிவில் 2ஃ3 பங்கினருக்கு அதிகமாக சிங்களவர்களேயுள்ளனர்.
தமிழர்களைப் பொறுத்தவரை பின்வரும் வீதத்தினராக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள இங்கிரிய 9.5, புளத்சிங்கள 12.8, தொடங்கொடை 13, மத்துகம 9.5, மதுராவளை 10.3, பாலிந்தநுவர 9, மில்லனிய 3, வலல்லாவிட்ட 2.1, அகலவத்தை 2.7, ஹொரண 2.2, களுத்துறை 1.3 என்ற வீதத்தில் 2001 ஆம் ஆண்டு கணிப்பீட்டின் படி இருந்தமை உறுதிப்படுத்தப்படுகின்றது.

சுமார் இருபதாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ள இம்மாவட்டத்தில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றுமுழுதாக இழக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் உள்ளூர் அரசியல் அமைப்புகளில் தமது பிரதிநிதித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டுள்ள போதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பறிகொடுத்துவிட்டனர்.
தமிழ்பேசும் முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த போது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் அரசியல் ரீதியான பிரதிநிதித்துவ சக்தி இருந்தது. முஸ்லிம்களிடம் ஏற்பட்ட பிளவும் தமிழ் வாக்காளரைப்பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்காமையும் இதற்கான காரணமாயமைந்துவிட்டது.

எவ்வாறாயினும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் அவர்கள் வாழும் சகல பிரதேச செயலகப் பிரிவுகளினும் நகரசபைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது. இழந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்களுடன் இணைந்து மீட்டெடுக்க முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் சிந்திப்பர் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த உள்ளூர் அதிகார சபைகளான பிரதேச, நகரசபைத் தேர்தலுக்கு முந்திய தேர்தலின் போது ஐந்து தமிழர்கள் பிரதேச சபைகளுக்குக் களுத்துறை மாவட்டத்திலிருந்து தெரிவு செயப்பட்டிருந்தனர். ஆனால், இறுதியாக நடைபெற்ற தேர்தலில் ஒரு தமிழர் கூட தெரிவாகவில்லை. தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்பட்டுவிட்டது.

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாது முழுமையாக வாக்களிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து பேர் பிரதேச சபைகளில் உறுப்பினராக முடியும். இதை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தமிழர்களின் எண்ணிக்கை தெளிவாகக் காட்டுகின்றது. களுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே பெரும்பான்மையாக வாழ்வதால் அவர்களிடம் தொழிற்சங்கம் நடத்தி சந்தா வசூலிப்பதிலேயே தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றனவே அன்றி அரசியல் ரீதியாக வழிகாட்டுவதாயில்லை.

மலையகத் தமிழ்த் தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகளாக மாறியபின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் பற்றியே கனவு காண்கின்றன. பிரதேச செயலகப் பிரிவுகளில் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் தொடர்பில் சிந்திப்பதில்லை. இன்று அரசியல் அமைப்புகளாக மாறியுள்ள தொழிற்சங்கங்கள் சந்தா வசூலிப்பதைவிட தொழிற்சங்க ரீதியாகச் செயலிழந்துள்ளன என்பதே உண்மை நிலையாகும்.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். கல்வி, தொழில், இருப்பிட, சுகாதாரம் உட்பட பல சமூக தேவைகளும் சமூக பாதுகாப்பும் அற்ற நிலையில் பெரும்பாலான தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு பரிகாரம் காணப்பட வேண்டியதேவை உள்ளது. சில தோட்டங்களில் வாழும் மக்கள் எந்தவொரு அடிப்படைத் தேவைகளையும் அடைய முடியாத அவல நிலையில் உள்ளமையைச் சுட்டிக்காட்ட வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்குவேட்டையாட களமிறங்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிவதில் ஆர்வம் இல்லை. இதுவே யதார்த்தம். இதுவே உண்மை.

களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த, இழந்த தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை மீட்டெடுக்க வழிவகை காணப்பட வேண்டும். தமிழர் வாக்குகளை பிரித்துக்காட்டிப் பலப்பரீட்சை நடத்தும் தமிழ் அரசியல் செயற்பாடுகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அப்போது தான் விடிவு ஏற்படும்.

முற்றாக அரசியல் பிரதிநிதித்துவங்களைத் தமது திட்டமில்லா, தூரநோக்கில்லா சிந்தனைகளாலும் செயற்பாடுகளாலும் இழந்துவிட்ட களுத்துறை மாவட்ட தமிழ் மக்களுக்கு சரியான, தெளிவான வழிகாட்டல் இன்று தேவையாகவுள்ளது. அரசியல் ரீதியாக ஏற்படுத்திக்கொள்ளும் பலமே கல்வி, இருப்பிடம் உட்பட சகலவற்றிற்கும் ஆதாரமாகும். இதைப்புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது வாக்காளர்களின் பொறுப்பு.

இன்று சகல தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அரசியல் அதிகாரம் தேவை. எனவே, களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் வாக்காளர்கள் தமது எதிர்கால நலன்களையும் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இருப்பையும் கணிப்பீட்டையும் எதிர்காலத்தில் நிலை நாட்ட களுத்துறைத் தமிழ் மக்கள் சிந்தித்து, தெளிவான முறையில் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

த.மனோகரன்

நன்றி- தினக்குரல்

No comments: