Wednesday, September 9, 2009

500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டம் தொடரும்- ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப்போவதாக இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டிக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதையடுத்து ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்


பேச்சுவார்த்தையின் போது தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் முதலாம் ஆண்டில் 330 ரூபாவாகவும், இரண்டாம் ஆண்டில் 360 ரூபாவாகவும் அதிகரித்து தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி விடுத்த கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காததையடுத்து ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப் போவதாகவும் சாதகமான முடிவு எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றார்.கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், தோட்ட நிர்வாக ஊழியர்கள், கணக்கப்பிள்ளை, மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் பணிப்புரைகளை ஏற்காமல் தாமாகவே தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.


உற்பத்தியாகும் தேயிலையை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்காது தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண அரச ஊழியர்கள் மாதமொன்றுக்கு 11,500 ரூபா முதல் 13,000 ரூபா வரை சம்பளமாக பெறுகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டு வருமானத்தை தேடித்தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வை காணும் முகமாக தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் புதிய முறையிலான ஒத்துழையாமை போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இதர சிறிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக் கொண்டார்.

No comments: