Friday, May 1, 2009

தொழிலாளர்கள் எல்லா துறைகளிலும் முன்னேற இன்றைய நாளில் உறுதி பூணுவோம்- எம்.எஸ்.செல்லச்சாமி

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் நமது இந்திய வம்சாவளி பாட்டாளி தோட்டத் தொழிலாளர்கள் எல்லாத் துறைகளிலும் தொடர்ந்தும் முன்னேற்றம் காண இன்றைய உலகத் தொழிலாளர் வெற்றித் திருநாளில் உறுதி பூண வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போஷகரும், பிரதி தபால் அமைச்சருமான எம்.எஸ்.செல்லச்சாமி மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட போராட்டங்களை நினைவு கூர்ந்து நமது அமைப்புகளை பலமுள்ளதாக மாற்றும் நோக்குடனும் சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான போராட்டம். உறுதி எடுக்கும் புரட்சிகர நாளாகவும் உலகம் பூராவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் பொருளாதார உயர்ச்சிக்கு நமது தொழிலாளர்கள்; 200 ஆண்டுகளுக்கும் மேலாக வியர்வையைச் சிந்தி கடுமையாக உழைக்கின்றனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்களின் வியர்வை உரமாக மாறியது.
நாட்டுக்கு நாளாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணியினைத் தேடிக்கொடுக்கும் நம் மக்கள் தேயிலைத் தோட்டங்களில் காலமெல்லாம் வியர்வை சிந்திப் பாடுபடுகின்றனர். அவர்கள் வாழ்வில் உயர்ச்சி பெற வேண்டும். தமது வாழ்வை முன்னேற்ற மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை உயர்ச்சி காணச் செய்ய நாமும் பெரிதும் பாடுபட்டு வருகிறோம். எமது சக்தியை மென்மேலும் நாம் அதிகரிக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் உயர்ச்சி விரைவாகவர வேண்டும்.
இன்றைய தினத்தை அரசியல் தலைவர்கள் சிலர் தமது அரசியல் வாழ்வை முன்னெடுப்பதற்காகப் பயன்படுத்தி வருவது வேதனைக்குரியது. மே தினத்தின் மகத்துவத்தைப் புரியாத உணராத சக்திகள் கூட மேதினத்தைக் கொண்டாடிக் கொண்டிருப்பது ஒரு வேடிக்கையான சூழல். இந்த வித்தியாசத்தைப் பாட்டாளி வர்க்கம் உணர்ந்து தமது ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை உண்மையாக மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments: