Tuesday, April 21, 2009

ஊவா மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தேர்தலுக்கு முன்பாக நிரப்பப்படுமா? - கல்விசார் சமூகம் கேள்வி

நடைபெறப் போகும் ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன்பு இம் மாகாணத்தின் தமிழ்ப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமா என கல்விசார் சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களினது நியமனமும் ஒருவருட காலமாக இழுபறி நிலையிலேயே உள்ளது. எனவே இவ்விடயத்தில் காலந்தாழ்த்தாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பரீட்சை முடிவுகளை கல்வித்திணைக்களம் வழங்கியதுடன், உடனடியாகவே தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் நியமனம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஒரு வருடத்திற்கு முன்பதாகவே தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று முடிந்தது. மத்திய அரசு அறிவித்தது போல் மாகாண பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் தேசிய பாடசாலைகளுக்கான நியமனம் வழங்கப்படவில்லை.


இது தொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊவா மாகாண கல்விக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நியமனம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அப்போது தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடம் தொடர்பாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இது விடயத்தில் கல்வியமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஊவா மாகாணத்தில் 33 சிங்கள மொழி மூல தேசிய பாடசாலைகளும் 3 தமிழ்மொழி தேசிய பாடசாலைகளும் உள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு அவை வழங்கப்பட்டன. இதில் 3179 நியமனங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை.

மத்திய மாகாணம்,சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் என்பவற்றில் குறிப்பிட்ட சில நியமனங்கள் வழங்கப்படாமல் போனதுக்கு பல காரணிகள் உள்ளன. ஊவா மாகாணத்தில் தெரிவான 521 நியமனங்களில் 494 தான் வழங்கப்பட்டது. 27 வெற்றிடங்கள் இன்னும் உள்ளது. இது தொடர்பாக மீண்டும் நேர்முகப்பரீட்சை நடந்தாலும் சில காரணத்தால் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஊவா மாகாண சபை மூலம் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையே நியமனங்களுக்கான தாமதமென தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரிய நியமனமும் 27 ஆசிரியர்களது வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நன்றி- தினக்குரல்

No comments: