Wednesday, February 13, 2019

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக மூன்று மாத நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கவில்லை என்றும், தொழிற்சங்கங்களும் அதனைக் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை சபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்ததில் 500 ரூபா அடிப்படை வேதனமும், 140 ரூபா வரவுக்கான கொடுப்பனவும், 60 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவும், 30 ரூபா தேயிலை நிர்ணய கொடுப்பனவும் என 730 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அடிப்படை வேதனம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, விலைக்கான கொடுப்பனவு 50 ரூபா அடங்களாக தொழிலாளர்களுக்கு 750 ரூபா நாளாந்த வேதனமாக வழங்குவதற்கு இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு 730 ரூபாவாக வழங்கப்பட்ட நாளாந்த வேதனமானது இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாவாக வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஆயிரம் ரூபா அடிப்படை வேதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஒருமீ உள்ளிட்ட ஆயிரம் இயக்கம் என்பன கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபா வேதன அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.
எனினும், இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அடிப்படை வேதனம் 40சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் தெரிவித்திருந்தன.
இந்த அளவான அடிப்படை வேதன உயர்வு சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், மூன்றுமாத கால நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 100 மில்லியன் ரூபா வழங்குவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறிருப்பினும், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கூறியபடி 40 சதவீத அதிகரிப்பு மற்றும் நிலுவைக் கொடுப்பனவு போன்ற அறிவிப்புகள் உண்மைக்குப் புறம்பானவைபோன்று அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கருத்து அமைந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா வேதன அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத நிலுவைக்கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கவில்லை என்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று விளக்கமளித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தம் மூன்று மாதகாலம் மாத்திரமே தாமதமாகியது.
இதில் 730 ரூபாவிலிருந்து 750 ரூபா என 20 ரூபா சிறிய வித்தியாசமே காணப்படுகிறது.
எனவே, அதனை நிலுவைத் தொகையாக வழங்குவதற்குத் தாங்கள் கருதவில்லை என்னும், தொழிற்சங்கங்களும் இவ்வாறு கோரவில்லை என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்தால், 20 ரூபாவிற்கான நிலுவைக் கொடுப்பனவையே வழங்க வேண்டும்.
இது மிகவும் நகைப்புக்குரியதாகும்.
தேயிலை சபையின் பணத்தை இதுபோல வீண்விரயம் செய்வதற்கும் தாம் விரும்வில்லை என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி-தேனீ

Tuesday, February 12, 2019

சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வாக அவர்களது நாள் சம்பளத்துடன் ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கு அரசாங்கத் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இத் தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்கலந்துரையாடுவது என்றும் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று இந்தப் பேச்சவார்த்தை நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், அரவிந்த் குமார் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னைய கோரிக்கையின்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பதை பேச்சுவார்த்தையின்போது அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தற்காலிக தீர்வாக அரசாங்கத் தரப்பில் நாள்சம்பளத்துக்கு ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கும் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் மேற்படி தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, February 2, 2019

ஒப்பந்தமா அடிமை சாசனமா ?

புதிய கூட்டு ஒப்பந்தம் கடந்த 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு விட்டது. அப்பாடா! கண்டத்திலிருந்து தப்பினோம் பிழைத்தோம் என்ற உள்ளூரக் களிப்பில் சிலர் வாய்க்கு ருசியாக வக்கணையாய் சாப்பிடலாம் என்று நின்றவர்கள் வாய்க்கரிசி மெல்லும் நிலைக்கானதாக வருத்தப்படுவோர் பலர். நடுவில் நின்று நடப்பது யாவும் நன்றாக நடக்கட்டும் என்று நகைகொள்வோரும் உளர். கோரினோம். 1000 ரூபா வாங்கித்தருவோம் என்று கூறினோம். கிடைத்ததைக் கொண்டு ஆறுதல் கொள்வதே தவிர வேறு வழியில்லை. மனம் மாறினோம் என்ற ரீதியில் இன்று கைக்கெட்டச் செய்திருப்பது 750 ரூபா சம்பளம்.
700 ரூபா அடிப்படைச்சம்பளம். தேயிலை விலைக் கொடுப்பனவு 50 ரூபா. மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவு 40 ரூபா. இனி EPF, ETF நிதியத்துக்காக 105 ரூபா வழங்க இணக்கம். ஒப்பந்தம் காலதாமதத்துக்குமான 3 மாத நிலுவைப் பணம் வழங்க உடன்பாடு. ஆக, தினமொன்றுக்கு 750 ரூபா உறுதி. இறுதியாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் நாளொன்றுக்கான நிர்ணயம் 730 ரூபா. அப்படியென்றால் தற்போதைய புதிய ஒப்பந்தத்துக்கூடான தினசரி அதிகரிப்பு 20 ரூபாதானா என்று வினாக்கள் எழுப்பப்படுகின்றன.
வடிவேலுவின் காமெடி ஒரு படத்தில் இப்படி இருக்கும்: 'இருந்தாலும் அவனுங்க ரொம்ப நல்ல மனுஷனுங்க. வலிக்குதா வலிக்குதான்னு கேட்டு கேட்டுத்தான் அடிச்சானுங்க' என்றிருக்கும். புதிய கூட்டு ஒப்பந்தம் பற்றிக் கேட்டபோது நண்பரொருவர் இதைத்தான் ஞாபகப்படுத்தினார். பெருந்தோட்ட மக்கள் 700 ரூபா சம்பள ஏற்பாட்டை ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறாா்கள். 1000 ரூபா ஆசையை வளர்த்துவிட்டு இப்பொழுது அம்போவென்று ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கம். தோட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம். வீதிகள் தோறும் பேரணி. கடுமையான தொனியில் கண்டனம். வேட்கையுடனான விமர்சனம். ஏன் இந்த ஏமாற்றம்? மக்களுக்குப் புரிவதாய் இல்லை. போராட்டங்களில் சகல தொழிற்சங்க உறுப்பினர்களும் பங்கேற்று தமது வெறுப்பைக் காட்டினார்கள். சில இடங்களில் இ.தொ.கா. உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் அதன் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் மட்டும் புறக்கணித்தார்கள்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த ஒப்பந்தம் மூலம் பெருந்தோட்ட மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இத்தனைக்கும் இந்த கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் இடம் பெற்றிருப்பதை இது கண்டிக்கின்றது. தவிர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தச் சம்பளப் பிரச்சனையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சாடி இருக்கின்றார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தற்போது 700 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய தொகையை அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு இ.தொ.கா தலைமைப் பணிமனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவித்தார். எம்மால் முடிந்ததைப் பெற்றுத் தந்திருக்கின்றோம். இதைவிட அதிகமாக வங்கித்தர எவருக்காவது முடியுமானால் எல்லா உதவிகளையும் வழங்க தாம் தயாராயிருப்பதாக அவர் கூறினார். 1000 ரூபா கிடைக்கா விட்டால் தான் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக கூறிவந்த அவர், தற்போது 20 ரூபா சம்பள அதிகரிப்புக்கு இணங்கியதை நியாயப்படுத்த முனைவதாக புத்திஜீவிகள் கவலைத் தெரிவிக்கின்றார்கள்.
தவிர கூட்டு ஒப்பந்ததை கேள்விக்குட்படுத்திட யாருக்குமே முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்புகள் விரும்பினால் மட்டுமே அதனை ரத்துச்செய்ய இயலும். இந்தக் கூட்டு ஒப்பந்தம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் ஒன்றுக்கமைய உருவானது. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்புகள் இதனை கம்பனிகளுக்குச் சாதகமான வகையில் சரத்துக்களைப் புகுத்தி கையாண்டு வருவதாக நெடுங்காலமாகவே குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகின்றன. அமைச்சர் பழனி திகாம்பரம் கூறுவது போல் நீதிமன்றமே தலையிட முடியாதபடி இறுக்கமான விதிகள் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். இந்த ஒப்பந்தமானது தோட்ட மக்களை அடிமை சாசன குடிகளாக எடைபோடுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகத்துடன் ஆரம்பமான சம்பளப் போரட்டம் இன்னும் ஒயவில்லை என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றார்கள்.
எனவே தான் இந்த ஒப்பந்தம் குறித்து பலரும் அதிருப்தியடைந்துள்ளளார்கள். இதை உறுதிப்படுத்துவது போலவே செய்து கொள்ளப்படும் ஒவ்வொரு ஒப்பந்தமும் பெருந்தோட்ட மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே காணப்படுகின்றது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பை முன்வைத்தது மலையக தொழிற் சங்கங்கள்தான். அதை அடைவதே எமது இலட்சியம் என்று அவர்கள் எழுப்பிய உறுதிமொழிகள் இறுதிவரை தொடரும் என்பது தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் முடிவில் நடந்ததோ வேறு. 500 ரூபா அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாக உயர்வு என்று விளக்கம் தரப்படுகின்றது. மேலோட்டமாக பார்த்தால் 200 ரூபா தினமொன்றுக்கு அதிகரிப்புப் போலவே தோன்றும். 500 ரூபா அடிப்படைச் சம்பளம் அமைந்தபோது தினசரி கிடைத்த வேதனம் 730 ரூபா. ஆனால் 700 ரூபா அடிப்படைச் சம்பளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி சம்பளம் 750 ரூபா எப்படி ஆகும்? இதுதான் ஒப்பந்த சூட்சுமம். 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவு 140 ரூபாவும் வருகைக்கான கொடுப்பவு 60 ரூபாவும் சாதுரியமாக கத்தரிக்கப்பட்டுவிட்டது.
சமூகப் பார்வை இல்லாத எதுவுமே சாதகமான விளைவுகளை உற்பவிக்கப் போவதில்லை. கூட்டு ஒப்பந்தம் எப்போதோ அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. தாம் வழங்கும் சந்தாப்பணம் சிலரின் சொகுசு வாழ்கைக்கு கரம் கொடுக்க தாம் சதா மனப்பாரத்தோடும் தாளா துயரத்தோடும் அல்லாடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டு ஒப்பந்தம் செய்யும் உரிமையை விட பலமான ஆயதம் தம்மிடம் இருக்கின்றது என்ற புரிதல் மலையகம் எங்கும் பரவலாக பற்றி வருகின்றது.
மலையத்துக்கு அரசியல் வேண்டும். அது மனித நேயமிக்க அரசியலாக அமைய வேண்டும். அரசியல் பாதையின் இலக்கு மக்களை பணயம் வைக்கும் பம்மாத்தாக இருக்க முடியாது. அந்த வகையில் கூட்டு ஒப்பந்த முறைமை சந்தர்ப்பவாத அரசியலுக்கும் தனி மனித அபிலாஷைகளுக்கும் உதவவும் கூடாது அப்பாவி பெருந்தோட்ட மக்களை மேலும் மேலும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிட வும். சிந்திப்போம்.

Thursday, January 31, 2019

பெருந்தோட்டக் காணிகளை அரசு கையேற்க நடவடிக்கை


கூட்டுக் கமிட்டியை ஒதுக்கிவிட்டு ஒப்பந்தம் செய்ததன் அவசரம் என்ன?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி, உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறாத நிலையில், அதனை ஒதுக்கிவிட்டு அவசர அவசரமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை மிகத் தவறானதென மக்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உடன்படிக்கை நகல் வரைவில் குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி கைச்சாத்திட வருகை தராதபோது, அதுபற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஏனைய இரண்டு சங்கங்களும் கைச்சாத்திட் டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தக் கமிட்டி முன்வருமாக இருந்தால், பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா தினகரனுக்குத் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மீண்டும் 140 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவைக் கோரி பேச்சுவார்த்தை நடத்தப்படுமாக இருந்தால், அது மீளவும் சம்பள விவகாரத்தை மலினப் படுத்துவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். 140 ரூபாகொடுப்பனவையேனும் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் இராமநாதனையும் அழைத்துக்கொண்டு செல்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. எவ்வாறெனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 140 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், அதனை மீண்டும் பெற்றுக் கொடுத்துவிட்டதாக எவரும் திருப்தியடைய முடியாது. அதனைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அதுவே ஒரு தீர்வாக அமையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட தம்பையா, சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிப்பதற்கு வெளிப்படையாக முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகளுக்குத் தமது சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் தொழிற்சங்கங்கள் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தெளிவான முடிவுடன் செல்ல வேண்டும் என்றும் இதுபற்றித் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதனுடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் தம்பையா மேலும் கூறினார்.

Wednesday, January 16, 2019

1,000 ரூபாய் கோரிக்கை நியாயமானதே

பெருந்தொட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானதெனத் தெரிவித்துள்ள மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரத்ன, சம்பந்தப்பட்டத் தரப்புகள், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயைப் பெற்றுக்கொடுத்து, வீழ்ந்திருக்கும் பெருந்தோட்டத் துறையை உயர்த்துவதற்கு முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.  
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரித்துத் தருமாறு, ​பெருந்தோட்ட நிறுவனங்களிடம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதென, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரனவை தெரிவித்தார்.  
​மத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மைத்திரி குணரத்னத்தை வரவேற்கும் நிகழ்வு, ஹட்டன் - டிக்கோயா நகர சபையில் நேற்று (13) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  
இலங்கையிலிருந்து டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையானது, அந்நாட்டில் கலப்படம் செய்யப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு அதிக விலையுடன் ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.  
200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து, பாதிப்படைந்துள்ள தேயிலைத் துறையை முன்னேற்றுவதற்கு, மலையகப் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.  
அத்துடன் ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்ட பதவியில், அரசியல் செய்யாமல், மக்களுக்காக தான் கடமையாற்றவுள்ளதாகத் தெரிவித்த அவர், ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் குப்பைப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
Courtesy- Tamil Mirror