Thursday, May 24, 2018

மலையகத்தில் பாதிப்புகள்

கடந்த சில நாட்களாக, மலையத்தில் ​நிலவிவரும் சீரற்ற வானிலை, இன்றும் தொடர்ந்த நிலையில், மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில், இன்றுக் காலை வரை பெய்த கடும் மழையால், 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுள் 820 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டம்
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில், 337 குடும்பங்களைச் சேர்ந்த 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி புஷ்பகுமார தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம், 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகளும் முற்றாகவும் சேதடைந்துள்ளன என்றும், இவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 6,133 குடும்பங்களைச் சேர்ந்த 24,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் எலபாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம, நிவித்திகல, களவான, எஹலியகொடை, குருவிட்ட, காவத்தை, ஓப்பநாயக்க, பெல்மதுளை, பலாங்கொடை, இம்புலபே, கொடக்கவெல ஆகிய 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 189 கிராம சேவர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இதுவரை 6 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளனவெனவும் 139 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 1,961 குடும்பங்களைச் சேர்ந்த 7,861 பேர் தத்தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும்   493 குடும்பங்களைச் சேர்ந்த 1,951 பேர், 38 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்
அத்தோடு, பதுளை மாவட்டத்தில், இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் 63 வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளன என்றும், பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார் தெரிவித்தார். அத்தோடு, 51 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர், இரண்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பசறை, ஊவா பரணகம, ஹப்புத்தளை ஆகிய இடங்களில், மேலும் 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் மழை தொடர்ந்து பெய்யுமாயின், பதுளையில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மரங்கள், மின்தூண்கள், கற்பாறைகள் போன்றவை, வீதிகளில் விழுந்துள்ளமையால், மலையகத்தின் பல்வேறு வீதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. பாரிய பாதை வெடிப்புக்கள், குடியிருப்பு வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அத்தோடு, மழையுடன் சேர்ந்து, மலையத்தில் கடுமையான குளிரான வானிலை காணப்படுவதால். தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாகலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால், மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவொன்று, நேற்று (23) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெரீக்கிலோயர் தோட்டத்தில், மண்சரிவு அபாயம் காரணமாக, அங்கிருந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்த பின்னரே, குறித்த 33 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப் பகுதியில், குடியிருப்பொன்றுக்கு அடிப்பகுதியில் நீர் ஊற்றெடுத்துச் செல்வதாகவும் இது தொடர்பில், தேசிய மண் பரிசோதனை ஆய்வாளர்களால் அப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Wednesday, May 16, 2018

மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படுகின்ற 'டிஸ்பென்சரி' எனப்படுகின்ற தோட்ட மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் சுமார் 450 தோட்ட மருந்தகங்களை விருத்தி செய்வதன் ஊடாக தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், நாட்டின் எனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற சுகாதார சேவையினை போன்று வசதிகளை தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துளளது.
தோட்டப்புற சுகாதார பிரிவினை அரச சுகாதார பிரிவுடன் இணைப்பதற்கும், அதன் கீழ் தற்போது தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற தோட்ட சுகாதார நிலையங்களை கட்டம் கட்டமாக அரசாங்கத்துக்கு கையகப்படுத்திக் கொள்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Thursday, May 3, 2018

ஓய்வூதிய பணத்தை முறையாக பெற உதவ வேண்டும்

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை, முறையாக பெற்றுக்கொள்ள முழுமனதுடன் தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என, இலங்கையின்  மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறல்களுக்கான, நுவரெலியா மாவட்ட செயலணி படையின் இணை செயலாளர் வி.யோகேஷ்வரன்  நுவரெலியா பொலிஸ் வீதியில் அமைந்துள்ள செயலணிபடை காரியாலயத்தில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயேதெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில், 55 தொடக்கம் 60 வயதை பூர்தியாக்கி, தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தொழில் விலக்கப்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் சேவைசெய்த காலப்பகுதியில் பிடிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி (ஈ.டி.எப்) ஆகியவற்றைப் பெற்றுகொள்வதில், பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருகின்றனர்.
“இந்த நிலையில், தோட்டத்தில் தொழில் புரியும் வயதெல்லயை அடைந்த உடன், தொழில் நீக்கம் செய்ய, சட்ட ரீதியாக தோட்ட நிர்வாகங்களுக்கு முடியும் என்றால், தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளுடன் ஏன் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை முறையாக பெற்றுக்கொள்ள தொழிலாளர்களுக்கு உதவ முடியாது” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும், “இந்த பிரச்சினை  நமது நாட்டிலுள்ள அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் காணப்படுவதுடன், நுவரெலியா மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
“இது தொடர்பாக, நுவரெலியா பிரதேச தோட்டப்பகுதிகள் பலவற்றில் இருந்து, எமது செயலணி படைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில், தோட்ட நிர்வாகங்களை ஆராய்ந்த பொழுது, தொழிலாளர்கள் ஓய்வூதிய பணத்தை தொழில் திணைக்களத்துடன், மத்திய வங்கியில் பெற்றுக்கொள்ள, உரிய ஆவணங்களை வழங்க, தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயற்படுவதில்லை என்பது, ஆரம்பக்கட்டத்தில் தெரியவந்தது.
“இதன் பின், தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் இயங்குவதால், தோட்ட காரியாலயங்களில் ஓய்வூதியம் தொடர்பில் செயலாற்ற உத்தியோகஸ்தர்களும், அதற்கான தனி பிரிவு ஒன்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
“இதை விட தொழில் திணைக்களத்திற்குச் சென்று, தொழிலாளி ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் விண்ணப்ப படிவத்தைப் பெற்று, பின் அதனை முறையாக நிரப்புவதற்கு, தோட்ட காரியாலயத்துக்குச் சென்றால், ‘இன்று போய் நாளை வா’ என்ற விநாயகர் வேதம் ஓதப்படுகின்றது.
“இவ்வாறாக அழைக்களிக்கப்படும் தொழிலாளர்கள், கடைசி காலத்தில் தம் உழைப்பால் சேமித்த பணத்தை, அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
“இந்நிலையில், தொழிலாளிகளான தனி மனிதர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறலில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுப்படுகின்றமை தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக தோட்ட அதிகாரிகளிடம் மனித உரிமைகள் மீறல் செயலணி படை செயலாளர் என்ற ரீதியில் கேட்டபொழுது, நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவிக்கின்ற போதிலும், நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்றங்கள் எதுவும் காணவில்லை.
“எனவே, கொழும்பிலுள்ள தலைமை தொழில் திணைக்களத்தின், நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான, தொழில் ஆணையாளரிடம் நேரடியாகச் சென்று, தோட்டநிர்வாகங்களின் செயற்பாட்டை எடுத்துரைக்கப்பட்டது.
“தொழிலாளர்களின் ஓய்வூதிய விடயத்தில், தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயல்பட, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிராந்திய ரீதியான தொழில் திணைக்களத்துடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த உறுதி மொழி மீறும் பட்சத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின், எமது செயலணிபடை, இலங்கை மனித உரிமைகள் அமைப்புடன் பாரிய நடவடிக்கை ஒன்றை எடுக்க தயாராகிவருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தரகர்கள் ஊடாக, கூடுதலான பணத்தை செலவு செய்து, ஓய்வூதிய பணத்தை பெற தொழிலாளர்கள் முயற்சிக்க, தோட்ட நிர்வாகங்கள் இடம்வழங்காது, தொழிலாளர்களுக்கு இந்த விடயத்தில் உதவ முன்வரவேண்டும் எனவும், அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கம்

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஏனைய விவசாய உற்பத்திகளுக்கான, கிளைபோசெட் பாவனைத் தடை தொடருமெனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

கிளைப்போசைட்டின் செறிவு தேயிலையில் அதிகம்
விவசாயப் பொருட்களில், தேயிலையிலேயே கிளைப்போசைட்டின் செறிவு அதிகளவில் காணப்படுவதாக அமெரிக்காவின் உயர் பல்கலைக்கழகம் ஒன்றின் சமீபத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்,சுகாதார தொழில் மற்றும் அறிவியலுக்கான மொரொக்சி கல்லூரியினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளைப்போசைட் களைக்கொல்லியாக உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில், தேயிலை,தேயிலை பை,கோப்பி,தேன் ஆகியப் பொருட்களில் கிளைப்போசைட் செறிவு அதிகளவில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

Thursday, April 26, 2018

இடி தாக்கிய இருவர் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில்- லயன் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 34 குடும்பங்களின்100 மேற்பட்டோர் பாதிப்பு

ஹட்டன் - டிக்கோயா தரவலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மீது மின்னல் தாக்கியதில் குறித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்

26-04-2018 மதியம் 3.00 மணியளவில் பெய்த இடியுடன் கூடிய மழையின் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட இருவருக்கு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்



ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாலை மேற்பிரிவு தோட்டத்தில் 25-04-2018 புதன் கிழமை இரவு பெய்த கடும் மழையின் காரணமாக 24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . 

குறித்த தோட்டத்தில் லயன் குடியிருப்பு இதற்கு முன்பு இடிந்து விழும் அபாயத்தில் காணபட்டதால் தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை அறிவித்துள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

டிக்கோயா தரவாலை மேற்பிரிவு தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள லயன் குடியிருப்பின் இரண்டு பக்கங்களிலும் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியது. 

ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அதே குடியிருப்பில் தற்காலிகமாக தங்கியிருப்பதுடன் பாதிக்கபட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொலிஸார் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Saturday, March 10, 2018

தீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும்- டக்ளஸ் தேவானந்தா

கேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி யின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :- நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும், வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை பாரிய வெற்றியாக சக கட்சிகளும் ஏனையவர்களும் கருதினாலும், என்னைப் பொறுத்தவரையில் நாம் முன்னெடுத்த சேவைகளுக்கு எமக்கான வாக்குகள் பல மடங்காக அதிகரி;த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். 
எனவே நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். ஏனைய கட்சிகள் மக்களுக்கு எதனையும் இதுவரை செய்யவில்லை. நாமோ எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களுக்கேற்ப பல மடங்கு சேவைகளை செய்திருக்கின்றோம். அதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். நாம் முன்னெடுக்கும் சரியான திசைவழி நோக்கி மக்கள் அணிதிரண்டு வருவதற்குத் தயாராகி விட்டார்கள் என்பதை சமகால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அரசியல் ரீதியாக நாம் எதிர்பார்க்கும் பலம் என்பது மக்களுக்கான பலமாகவே அமையும். ஈ.பி.டி.பி யின் வெற்றி மக்களின் வெற்றியாக அமைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

கேள்வி:- வடக்கின் ஓரிரு சபைகளைத் தவிர எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் அந்ததந்த சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் ஈ.பிடி.பி உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனவா? அது குறித்து இணக்கப்பாடெதுவும் எட்டப்பட்டதா?

பதில் :- இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. உத்தியோகப்பற்றற்ற வகையான பேச்சு வார்த்தைகளே  தொடர்கின்றன. இந்த நிலையில் முடிவுகளாக எவையும் எடுக்கப்படவில்லை. சக கட்சிகளுக்கு அரசியல் அதிகாரங்களை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ, அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை. சபைகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தேவையான புறச்சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பதானது ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்’ என்ற கதையாகவே இருக்கப் போகின்றது. 

கேள்வி :- அதிதீவிரம் பேசும் சக்திகளுக்கான ஆதரவு, நடந்து முடிந்த உள்ளராட்சிசபைத் தேர்தல்களில் வடக்கில், பெருமளவு அதிகரித்திருப்பது எதனை காட்டுகிறது? மீண்டும் இவ்வாறான ஆதரவு வடக்கில் அதிகரித்ததிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :- தீவிரமோ, அதிதீவிரமோ எதை பேசினாலும் அது போலித்தனமானதாகும். எந்தத் தரப்பு அவ்வாறு பேசினாலும் அது எமது மக்களை அழிவுக்குள்ளும், அவலங்களுக்குமே தள்ளிவிடுமே தவிர எமது மக்களை பாதுகாப்பதற்காகவோ, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்திப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு கௌரவமான தீர்வை பெற்றுத்தரவோ உதவாது. இதுவே கடந்த காலத்திலும் நடந்து முடிந்துள்ளது. 

தீவிரமோ அதிதீவிரவாதமோ பேசி உணர்ச்சியூட்டுவது வாக்குகளை அபகரிக்கவே தவிர, மக்களுக்கு சேவை செய்வதற்கல்ல. இந்த பிற்போக்குத்தனத்தை தமிழ் தலைவர்கள் என்று கூறப்படும் சேர்.பொன் இராமநாதன், தொடக்கம் ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம், பின்னர் பிரபாகரன் இப்போது சம்பந்தன் வரை. நீங்கள் குறிப்பிட்டது போன்று தீவிரத்தையும், அதிதீவிரத்தையும் பேசி மக்களை உணர்ச்சியூட்டி வாக்குகளை அபகரிக்கவும், அழிவுக்குள் தள்ளிவிடவுமே முனைந்திருக்கிறார்களே தவிர தாம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்களால் மக்களுக்கு வென்று கொடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் தாம் முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த தலைவர்களிடத்திலேயே இருக்கவில்லை. அதற்காக அவர்கள் நடைமுறைச் சாத்தியமான தன்மையுடன் உழைக்கவில்லை. அதை வென்றெடுக்கும் பொறிமுறையை ஏற்படுத்த அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை. இவ்வாறு நான் கூறுவது அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாலோ, அவர்கள் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதாலோ அல்ல. 15 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட வழிமுறையிலும், 30 வருடத்திற்கு மேலான தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வழிமுறையூடாகவும் நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தில் இருந்தே இந்த விமர்சனங்களை முன்வைக்கிறேன். 

எமது மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அது வென்றெடுக்கப்படாமல் இருப்பதற்கு தனியே இலங்கை அரசையோ, இந்திய அரசையோ மட்டும் தவறென்று கூறிவிட முடியாது. தமிழ் தலைமைகள் என்றிருந்தவர்களின் அணுகுமுறை தவறுகளும், சுயலாப அரசியல் போக்குகளும் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

கேள்வி:- புதிய அமைச்சரவையில் உங்கள் பெயரும் இடம்பெறுவதாக பேச்சுகள் அடிபட்டன. 2015ம் ஆண்டில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் இவ்வாறான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன?

கடந்த காலங்களில் நாம் மத்திய அமைச்சரவையில் பங்கொடுத்து எமது மக்களின் பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியிருக்கின்றேன். யுத்தத்தினால் அழிந்து நொறுங்கி கிடந்த எமது தாயக பிரதேசத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருக்கின்றேன். உட்கட்டமைப்புக்களை கடுமையான முயற்சிகளால் மீள் கட்டமைப்பு செய்திருக்கின்றேன். ஒரு இயல்பான சூழலில் எமது மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நேரகாலம் பாராது கடுமையாக உழைத்திருக்கின்றேன். நான் செய்ததைப் போன்று எந்த தமிழ் அரசியல் தலைமைகளும் மக்கள் சேவைகள் செய்தது கிடையாது. ஆனாலும் இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன என்பதையும் நானறிவேன்.  ஒருவேளை ஆட்சியில் நான் தொடர்ந்து இருந்திருந்தால் மிச்ச பணிகளையும் செய்து முடித்திருப்பேன். வேலை வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுக்கவும் உழைத்திருப்பேன். 

யுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுகளுடனும் இணக்க அரசியல் நடத்தி என்னால் இவ்வளவு செய்து முடிக்க முடிந்தது. யுத்தத்துக்கு முகம் கொடுக்காத இந்த அரசிடமிருந்து இன்னும் அதிகமான பலாபலன்களை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்க முடியும். துரதிஷ்டவசமாக நான் தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுக்க முடியவில்லை. இவ்வாறான எனது சேவைகைளை எதிர்பார்த்திருக்கும் மக்கள் நான் அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவதாலும், அவ்வாறு எதிர்பார்ப்பதாலும் தென்னிலங்கையில் அரசியல் பரபரப்பு தலைதூக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி;லும் எனக்கும் அமைச்சுப்பதவி கிடைக்கும் என்ற விருப்பத்தை முன்வைக்கிறார்கள்.. அதவே அடிக்கடி நான் அமைச்சுப்பதவி பெற்றுக்கொள்ள போவதாக செய்திகளாக வெளிவருகின்றன என நினைக்கின்றேன் 

கேள்வி:- உள்ளுராட்சித் தேர்தல்களையடுத்து தெற்கில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை, வடக்கின் அரசியலிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றதா?

பதில் :- தெற்கில் இனவாத முன்னெடுப்புக்கள் தலைதூக்கி இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று வடக்கு கிழக்கில் தலைதூக்கிய அதாவது நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தீவிரவாத மற்றும் அதிதீவிரவாத போக்குகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கே ஒருமித்து வெளிப்பட்டிருக்கும் தன்மையானது வட இலங்கையில் இரண்டாக பிரிந்து காணப்படுகின்றது.
தெற்காக இருந்தாலும்,வடக்காக இருந்தாலும் இனவாதமோ, தீவிரவாதமோ வாக்குகளை அபகரிக்க உதவலாமே தவிர மக்களுக்கு பயன்தரக்கூடியதாக ஒருபோதும் மாறப்போவதில்லை.

(11-03-2018 அன்று தினகரன் வாரமஞ்சரிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாமனந்தா வழங்கிய செவ்வி) 

தினகரன்-     வாசுகி சிவக்குமார்     

Thursday, March 8, 2018

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா.உ இந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடங்களையும் இந்த வருடத்தின் இதுவரையான காலகட்டத்தையும் ஆராய்ந்து பார்க்கின்றபோது, மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் சில தீய சக்திகளால் திட்மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் அண்மையில் கூறியிருந்தார்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரையில் எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்; சம்பவங்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்துள்ளன. தம்புள்ளையிலிருந்து மாவனல்லை, காலி ஜிந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, குருனாகலை என அது தொடர்ந்து அண்மையில் அம்பாறை, இப்போது திகன என மேலும் தொடரும் நிலைமைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.

அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்களின் சூடு தணியும் முன்பதாகவே திகன சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றிருந்த ஒரு சம்பவத்தின் பின்னணியாகவே இந்த  வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இச் சம்பவத்தினை ஆராய்கின்றபோது, இது முழுமனே முஸ்லிம் மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே விளங்குகின்றது.

மேற்படி சம்பவத்தின்போது பொலிஸார் தங்களால் இயன்றளவில் தங்களது கடமைகளை நிறைவேற்றியதாகவே தெரிய வருகின்றது. என்றாலும், பொலிஸாரையும் மீறிய நிலையிலேயே முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும் நகர்ப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய உட்புற குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. எனவே, இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்ப்பதற்கான காரணிகள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

அதே நேரம், இத்தகைய செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, ஏதாவதொரு சம்பவம் இடம்பெறும் வரையில் பார்த்திருந்து, அல்லது வேண்டுமென்றே ஒரு சம்பவத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆரம்பித்து இத்தகைய வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக, நான் இந்த சபையிலே ஒரு விடயத்தைக் கூற வேண்டும். அதாவது, தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மிக்கின்ற காலப்பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களில் சிங்கள மக்கள் பொருட்கள் - குறிப்பாக ஆடைகள் வாங்கக்கூடாது என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது ஒரு வழமையாகி வருகின்றது. இதன் பின்னணியில் ஒரு சில சுயலாப வர்த்தகர்களே இருக்கின்றனர் அன்றி, இதன் பின்னணியில் வேறு ஒன்றும் கிடையாது.

அந்த வகையில்தான் மேற்படி சம்பவங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வருட தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மித்து வருகின்ற காலகட்டத்திலேயே மேற்படிச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்ததைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களில் பலரும் அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்தகால யுத்தம் இதற்கொரு காரணமாகலாம். இவ்வாறு அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்படுகின்ற மக்கள் வர்த்தகங்களில் ஈடுபடுகின்றபோது, அதனையும் தாக்கி அழிக்க முற்பட்டால் அந்த மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக வேறு என்ன செய்வார்கள்? என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, தங்களது சுயலாபங்களுக்கு இனவாதத்தினை பூசிக் கொண்டு, இந்த நாட்டை பின்தள்ளிச் செல்லாது எல்லோரும் இணைந்து இந்த நாட்டினை முன்னேற்றவே முன்வர வேண்டும்.

எம்மால் எல்லாற்றையும் செய்தும் இந்த இனவாதத்தினை ஒழிக்க முடியாவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை நான் இந்தச் சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன். எனவே, தயவு செய்து எவராக இருந்தாலும் இனவாதத்தைப் பூசிக் கொண்டு திரியாதீர்கள். மனித நேயத்துடன் வாழ்ந்து பார்க்க முன்வாருங்கள் என அழைப்பு விடுகின்றேன்.