Monday, February 21, 2011

பொருளாதார நெருக்கடியில் மலையக மக்கள்

இலங்கையில் அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக மலையகப் பகுதியில் தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் தெரிவித்துள்ளது.

மழையினால் மலையகப் பகுதியில் தேயிலை, ரப்பர் மட்டுமல்லாமல், காய்கறி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் பெருளாதார ரீதியாக மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அமைப்பின் தலைவர் ஓ ஏ ராமையா பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்

தேயிலை தோட்டங்களில் மழை மற்றும் கடுமையான காற்றின் காரணமாக, தேயிலை அரும்புகள் உதிர்ந்து கீழே விழுந்து விடுவதால், உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இப்படியான நிலைமை காரணமாக உற்பத்தி குறையும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த நாட்களே வேலை கிடைப்பதாகவும், அதனால் வருமானம் இல்லாத நிலையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்

அண்மைய மழையின் காரணமாக காய்கறி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பல குடும்பங்கள் வருமானம் இல்லாத நிலையில், வெளியில் கடன் வாங்கி தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் மழையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணங்கள் அரசால் உரிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் அது இந்த விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

Wednesday, February 16, 2011

மலையகத்தில் 31,000 வீட்டுத்தோட்டங்கள் அமைக்கத் திட்டம்

உலக உணவுப் பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய மலையகத்தில் 31,000; வீட்டுத் தோட்டங்களை 550 இலட்ச ரூபா செலவில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அமரநந்தன வீரசிங்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் 3,500 வீட்டுத் தோட்டங்களும் பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும், ஹரிஸ்பத்துவ பிரதேச செயலகப்பிரிவில் 8,400 வீட்டுத் தோட்டங்களும், கலகெதர பிரதேச செயலகப்பிரிவில் 5,700 வீட்டுத் தோட்டங்களும், ஹத்தரலியத்த பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில்


மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் உள்ளடங்கிய பிரதேசம் மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் புவியியல் துறை பிரதான அதிகாரி எம்.சீ.யூ மொரேமட தெரிவித்துள்ளார்.
இதில் மாத்தளை இந்து தேசிய பாடசாலை, மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலை, புஸ்வெல்ல மகா வித்தியாலயம், கம்மடுவ பாடசாலை, பம்பரகலை பாடசாலை, வெஹிகலை பாடசாலை, வாலவலை பாடசாலை மற்றும் பமுனுவ பாடசாலை ஆகிய பாடசாலைகளே இம் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழு மலையக மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் மற்றும் விசாரணைகள் நுவரெலியா,அட்டன்,பதுளை போன்ற பிரதேசங்களில் நடத்தப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றுவரையும் இலங்கை சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே ஏனைய பிரதேசங்களில் நடத்தப்பட்டதைப்போன்று மலையக பிரதேசங்களிலும் ஆணைக்குழு அதன் அமர்வுகளை நடத்தினால் இம்மக்களுக்கு தாமாகவே தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.அதேவேளை இம்மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தி அவர்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கும் வாய்ப்பாக இருக்குமென்பதுடன் ஆணைக்குழு அரசிடம் தனது பரிந்துரைகளை முன்வைக்கும்போது மலையக மக்களின் பிரச்சினைகளையும் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என மனித அபிவிருத்தி தாபன தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் இந்த ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

பசறையில் 8 தோட்டங்களில் 3,603 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை

பசறை பிரதேசத்தில் 8 தோட்டங்களில் 3,603 பேர் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளனர்.இவர்களில் சுமார் 400 பேர் மாத்திரம் கடந்த வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தற்காலிக அடையாள அட்டை பெற்றுள்ளனர்.ஏனையவர்கள் போதியளவு தெளிவின்மையால் வெறுமனே வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.இது குறித்து பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தவில்லை.இதன் காரணமாக இவர்கள் வாக்களிக்கவில்லை. இதை கவனத்தில் கொண்டு இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கிராம சேவகர் ஊடாக தேசிய அடையாள அட்டையின்றி இருப்பவர்களின் விபரம் திரட்டப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க அப் பிரதேச தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

Monday, August 30, 2010

நுவரெலியா மாவட்டமும் தமிழ்மொழியின் நிர்வாக உரிமையும்

இலங்கையின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மொழியாக தமிழ்மொழியை நுவரெலியா மாவட்டத்தின் நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்தி இன்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் தமிழ்மொழியின் நிர்வாக மொழி அந்தஸ்துபற்றி எவரும் கவனத்தில் கொள்ளாத நிலையில் தமிழ்மொழியின் உரிமை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சிந்திக்க வேண்டியவர்கள் எவரும் அது தொடர்பாகக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்குமான அரசாங்க மொழிகளாகச் சிங்களமும் தமிழும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும் ஏனைய மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமும் செயற்பட அரசியலமைப்பின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாகாணங்களில் வாழும் சிறுபான்மை மொழி பேசுவோரை மையமாகக் கொண்டு அவர்களது எண்ணிக்கையையும் கவனத்தில் கொண்டு அரசியலமைப்பின் 22 (டூ) பந்தியின் கீழ் குறிப்பிட்ட செயலகப் பிரிவுகளில் தமிழ் அல்லது சிங்களத்தை நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதியின் வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுபான்மையாகவுள்ள மக்களது மொழியும் நிர்வாக மொழியாகச் செயற்பட வழி செய்யப்படும். அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் நிர்வாக மொழியாகச் செயற்பட வழிவகை செய்யப்படும். குறிப்பிட்ட செயலகப் பிரிவுகளில் சிங்கள மக்கள் அரச அலுவலகங்களுடனான தொடர்புகளைச் சிங்கள மொழியில் மேற்கொள்ளவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உள்ள அதே உரிமையைத் தமிழ்மக்களும் அனுபவிக்க முடியும். இது சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமை.

1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் தமிழ் நிர்வாக மொழியாகச் செயற்பட வழிசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அந்த அதிவிசேட வர்த்தமானியின் இலக்கம் 1105ஃ25 ஆகும்.

நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, மாநகரசபை,நகரசபை,பிரதேசசபைகளின் உறுப்பினர்களுக்கு மேற்படி வர்த்தமானியின் விபரம் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு நுவரெலியா மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வமான நிர்வாக மொழி உரிமையைத் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அலட்சியப்படுத்தக்கூடாது,புறந்தள்ளக்கூடாது.

நுவரெலியா , அம்பகமுவ பிரதேசசபைகளுக்குட்பட்ட மக்களில் சுமார் எண்பது வீதமானவர்கள் தமிழர்கள்.பிரதேசசபைகளின் தலைவர்கள் உட்படப் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழர்கள். அவ்வாறே அட்டன் டிக்கோயா நகரசபையினதும் தலவாக்கலை நகரசபையினதும் தலைவர்களும் பெரும்பான்மையான உறுப்பினர்களும் தமிழர்களே. நுவரெலியா மாநகரசபையின் பிரதி முதல்வராகத் தமிழர் ஒருவரே செயற்படுவதுடன், தமிழ் உறுப்பினர்களும் அதிகமாகவுள்ளனர். வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேசசபைகளிலும் கணிசமான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தெரிவாகிச் செயற்படுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள தமிழ்மக்களின் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குச் சிங்கள மொழியில் சரளமாகப் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

இவ்வாறான நிலையில், நூற்றுக்கு அறுபது வீதம் தமிழ்மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தின் அரச அலுவலகங்கள், வங்கிகள், சபைகளில் போதிய தமிழ் தெரிந்த, தமிழில் பணியாற்றத் தகைமை பெற்ற அலுவலர்கள் இல்லையென்பது பகிரங்கமானது. தமிழ்ப் பொதுமக்கள் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகள் கூடத் தமது கருத்தை வெளிப்படுத்த தேவைகளைப் பூர்த்தி செய்து மக்களுக்குப் பணியாற்ற முடியாத மொழிப் பிரச்சினையுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. இதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

அரச துறைசார் அலுவலகங்கள், வங்கிகள் , கூட்டுத்தாபனங்கள், சபைகளில் இந்த நிலையென்றால் தமிழ்த் தொழிலாளர்களே பெருமளவிலுள்ள பெருந்தோட்ட அலுவலகங்களிலும் இந்த நிலையே பெருமளவில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஏழு உறுப்பினர்களில் ஐவர் தமிழர்கள். இருவர் சிங்கள இனத்தவர்கள். அவர்களில் தமிழர் ஒருவரும் சிங்களவரொருவரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள். நுவரெலியா மாவட்ட மக்கள் சார்பாக தேசியப்பட்டியல் மூலம் நியமனம் பெற்றவர்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருமாக இருவருள்ளனர்.

இந்நிலையிலே, ஆளும் கட்சியின் சார்பாக நால்வரும் எதிர்க்கட்சி சார்பாக மூவரும் பாராளுமன்றம் கூடியபோது இருந்தனர். இன்று ஆளும் கட்சியின் நுவரெலியா மாவட்டத் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாலிலிருந்து ஐந்தாக உயர்ந்துவிட்டது. ஆளும் தரப்பிலிருந்து தமிழ்மக்களின் அடிப்படை உரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக அணிதிரளும் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

எந்த அணியிலிருந்தாலும் தமிழ்ப் பிரதிநிதிகளின் கடமை தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேண நடவடிக்கையெடுக்க வேண்டியதாகும். மொழி உரிமையைப் பயன்படுத்த முடியாத சமூகம் தரம் தாழ்ந்ததாக இரண்டாம் தரப்பிரஜைகளாகவே கணிக்கப்படும். சமூக அந்தஸ்தை இழந்ததாகவே கொள்ளப்படும். மொழியென்பது ஒரு சமூகத்தின் உயிர்மூச்சு,ஆன்மா என்பார்கள். அது தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.

நுவரெலியா மாவட்டத்தின் மக்கள் தொகையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். அவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பான்மையாகவுள்ளனர். இரண்டு பிரதேசசபைகளின் தலைவர்களாகவும் இரண்டு நகரசபைகளின் தலைவர்களாகவும் நம்மவர்கள் தமிழர்கள் உள்ளனர் என்று பெருமை பேசுவதால் பெருமைப்படுவதால் சாதாரண தமிழ்மக்கள் ஒரு நன்மையும் பெறப்போவதில்லை.

சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள மொழி உரிமையைத் தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள, அனுபவிக்கத் தடையுள்ளது. தடைகளைத் தகர்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்மக்களின் பிரதிநிதிகளென்று கூறப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கேயுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் தமிழர்கள். மக்கள் சேவை என்பது என்ன என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழிகாணப்பட வேண்டும். மக்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத் தமிழ் மக்கள் குறிப்பாகப் பெருந்தோட்டத்துறையில் வாழும் தமிழ்மக்கள் உணவு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் உட்படப் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கியிருப்பது மறைக்கக்கூடியதல்ல, மறுக்கக்கூடியதல்ல.

பாரதியார் கூறியதுபோல், கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றுவதன்றி நாட்டத்தில் கொள்ளமாட்டார்கள் நம் பிரதிநிதிகள் என்று நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்கள் நமது தமிழ் அரசியல் பிரதிநிதிகளைக் கணித்துவிடக்கூடாது , மதிப்பிட்டுவிடக்கூடாது. அதனால், சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள , அனுபவிக்க வழி செய்யப்பட வேண்டும்.

மொழி உரிமையை நிலைநாட்டி தமிழ்மக்கள் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ வழிகாண வேண்டும். மொழிப் பயன்பாட்டுக்கு நிர்வாகச் செயற்பாட்டுக்குத் தடையாகவுள்ள ஏதுகளை இனங்கண்டு தகர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். அது காலத்தின் கட்டாய தேவை. தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்து உரிமையுடன் வாழ அதுவே அடித்தளமாக அமையும்.

தினக்குரல்

Sunday, August 29, 2010


இ.தொ.காவைப் பலப்படுத்துவதன் மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்


ஆசிரியராக, சமூக சேவை யாளராக இருந்து மலையக மக்கள் முன்னணியின் ஊடாக அரசியலில் பிரவேசித்த இவர், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பிரதேச சபை உறுப்பினராக இருந்த துடன் ஆசிரியர் சேவை யையும் தொடர்ந்தவர், 2000ஆம் ஆண்டு தேசி யப் பட்டியல் மூலம் பாரா ளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார். அக்கட்சியில் உப தலைவராகவும் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

கேள்வி: இ.தொ.காவில் நீங்கள் இணைந்து கொண்டதற்கான காரணம் என்ன?

பதில்: மலையகத்தில் சிறு சிறு கட்சிகள் ஆங்காங்கே முளைவிட ஆரம்பித்தன. மாகாண சபை உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து சென்று அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களை புதிதாக உருவாக்கிக் கொள்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்தவர்களும் இதனையே செய்கின்றனர்.

இவர்கள் அந்த மக்களை வைத்து வாக்கு சேகரித்து அவர்களுடன் எவ்விதத் தொடர்புகளும் இல்லாத பெரும்பான்மை இனத்தவர் கூட மாகாண சபை உறுப்பினராக வந்து தொழிற்சங்கத்தை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

மூன்றாவது சிறுபான்மையினரான மலையக மக்கள் பல கூறுகளாக பிரிந்து இருப்பதுடன் உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கு நாங்களும் கார ணகர்த்தாக்களாக இருந்துவிடக்கூடாது என்று எண்ணினேன்.
அதன் அடிப்படையில் மலையகத்தில் பிரதான அமைப்பின் தலைமையின் கீழ் முழு மலையகமும் அணிதிரள வேண்டும். அவ்வாறு ஒன்று திரண்டால் மட்டுமே மலையக மக்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது யதார்த்தமான உண்மை. அந்த யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு நான் எனது ஆதரவாளர்களுடன் இ.தொ.காவில் இணைந்து கொண்டிருக்கிறேன். பிரிந்து போன சமூகம் மீண்டும் தலைநிமிர வேண்டும்.

பல்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தலைவர்கள் தற்போது ஓரணியில் திரண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை இனமான நாம் ஒரே குடையின் கீழ் இணைவதில் எந்தவிதத் தவறும் இருக்க முடியாது.

இ.தொ.கா ஒரு தாய் அமைப்பைப் போன்றது. இலங்கை இந்திய காங்கிரஸில் இருந்து ஏற்பட்ட பிளவின் காரணமாக இ.தொ.கா தோற்றம் பெற்றாலும் மலை நாட்டில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களையும் பிரதிநிதித்து வப்படுத்துகின்ற ஒரு அமைப்பாக அது விளங்குகிறது. மறைந்த சௌமியமூர்த்தி தொண் டமான் தலைமையிலே பல உரிமைகளை பெற்ற ஒரு பலம் பொருந்திய அமைப்பு. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகிறது. இந்த அமை ப்பை பலப்படுத்துவதன் மூலம்தான் மலையகத்தைப் பலப்படுத்த முடியும்.

கேள்வி: மாற்றுக் கருத்துக்கள் கொண்ட தொழிற்சங்கங்களும் மலையகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே?

பதில்: இ.தொ.காவை விமர்சித்துக் கொண்டு இடைக்காலத்தில் புதிதாக பல அமைப்புக்கள் உருவாகியதென்பது உண்மைதான். புரட்சிகர சிந்தனைகளுடன் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு கட்சிகள் உருவான போதிலும் இதுகாலவரை அவர்கள் எதனைச் சாதித்தார்கள் என்பதை ஆழமாகச் சிந்தித்தால் புரியும். வெற்றுக் கோஷங்களால் மலையக சமூகத்தை பிளவு படுத்தியதைத் தவிர வேறு எதுவுமே இல்லை யென்றே கூறவேண்டும்.

மேலும் பல கூறுகளாகப் பிரிந்து சிறுசிறு அமைப்புக்களாக நின்று எதனைச் சாதிக்க நினைக்கிறார்கள்? கொள்கை ரீதியாக எடுத்துக் கொண்டாலும் மலையகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கை களைக் கொண்டிருப்பதாக என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் இ.தொ.கா இந்நாட்டில் ஆளும் தரப்போடு இணைந்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற அடிப்படை கோட்பாட்டை கொண்டிருக்கிறது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலத்திலிருந்து இது தொடர்கிறது.

கேள்வி: இ. தொ. காவிலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் வெளியேறிய நிலையில் நீங்கள் அதில் இணைந்து கொண்டிருக்கியர்கள். அதிலிருந்து எவ்வாறு அரசியலை முன்னெடுக்கப் போகியர்கள்?

பதில்: நான் ஏற்கனவே கூறியது போல இ.தொ.கா விலிருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள். இ.தொ.கா.வின் வெளியேற்றம் பல கட்சிகளை தோற்றுவித் திருக்கிறது. ஆனால் இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன காரணத்திற்காக பிரிந்து சென்றார்கள். ஏன் சென்றார்கள் என்ற கேள்வி எழுந்தது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடனான முதலாவது சந்திப்பின் போது இக்கேள்வியை அவரிடம் கேட்டேன். அவர் சரியானதொரு பதிலை தெரிவித்தார். இ.தொ.காவிற்குள் எவராவது பணக்காரராக வந்து ஏழையாக வெளியே சென்றதில்லை. பெரும் செல்வாக்குடன் இருந்து செல்வாக்கை இழந்து செல்லவில்லை. அப்படியென்றால் இ.தொ.கா விற்குள் இணைந்தவர்கள் தங்களுக்கு தேவை யானவற்றை சேர்த்துக்கொண்டு வெளியே போயிருக்கிறார்கள்.

இ.தொ.காவிற்கென ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அந்தக் கட்டுப் பாட்டின் அடிப்படையில் எவராவது செயற்பட்டால் அவர்கள் இ.தொ.கா.விலிருந்து வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்ற போது அவர்கள் வெளியேறுவதற்கு அதுவே கார ணமாக இருந்திருக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை நான் இ.தொ.காவில் இணைந்ததற்கான காரணம் மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1947ஆம் ஆண்டு முதல் 1977ஆம்ஆண்டு வரை எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல் இந்த சமூகத்தை கட்டிக்காத்திருக்கிறார். அந்த நேரத்தில் இந்த சமூகம் அவர் பின்னால் அணி திரண்டும் இருந்திருக்கிறது, 1977ஆம் ஆண்டு அவர் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கிறார். அதை எவரும் இல்லையென்று மறுதலிக்க முடியாது.

30 வருடங்கள் நாடற்றவர்களாக இருந்த ஒரு சமூகத்துக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுத்திருக்கிறார். பிரஜாவுரிமையை பெற்றதன் வாயிலாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்வைத்திருக்கிறார்.பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசாங்க தொழிலை பெறுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மாட்டுப்பட்டியைப் போல இருந்த மலையகப் பாடசாலைகளை மாடிக் கட்டிடங்களாகவும், மகா வித்தியாலயங் களாகவும் மாற்றியமைத்திருக்கிறார்.
படிக்காத சமூகம் என தூற்றப்பட்ட சமூகத்திலிருந்து இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் படித்தவர்கள் பெருகுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். தன்னுடைய அரசியல் சாணக்கியத்தின் மூலமாக தோட்டக் குடியிருப்புக்களையும் அதனைச் சார்ந்த பிரதேசங்களையும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக்க வேண்டும் என்ற முயற்சியை பெருமளவு மேற்கொண்டிருக்கிறார்.

அவர் செய்த பல்வேறு விடயங்கள் இந்த சமூகத்தை மாற்றியமைத்திருக்கிறது. அவ்வாறான தலைமைத்துவத்தோடு நாம் இணைந்திருப்பதில் எந்தவித தவறும் கிடையாது. அது மட்டுமல்ல தற்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமை மலையகத்திற்கு ஒரு பிரகாசத்தைக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. மறைந்த தலைவர் எமது சமூகத்திற்கு ஒரு முகவரியைக் கொடுத்திருக்கிறார். அந்த முகவரியை மேலும் மெருகூட்டி அந்த மக்களை தலைநிமிர்ந்து நிற்கும் தலைவராக இன்று ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார். அந்த தலைமையை ஏற்றுக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து வந்திருக்கியர்கள். இ.தொ.காவில் இணைந்த பின்னர் உங்களது நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது அடிப்படை நோக்கம். மலையக சமூகத்தின் இதயம் தோட்டத் தொழிலாளர்கள். வருமான ரீதியில் அவர்கள் உச்ச நிலையில் இருக்க வேண்டும். உச்ச நிலை என்பது இந்நாட்டில் இருக்கின்ற ஏனைய துறையை சார்ந்தவர்கள் பெறுகின்ற வருமானத்திற்கு சமமாக வருமானத்தை பெறும் சமூகமாக மலையக சமூகம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த சமூகத்தின் எதிர்கால வாரிசுகள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அது கல்வியாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்புக்களாக இருந்தாலும் சரி, வீட மைப்பாக இருந்தாலும் சரி அனைத்து நடவடிக்கைகளும் வருமானத்தில்தான் தங்கியிருக்கிறது. எனவே கடந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமென உரக்கக் குரல் கொடுத்ததென்பது வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக அல்ல. மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற் காகவே அவ்வாறான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான ஒரேயொரு வழி என்னவென்றால் கூட்டு ஒப்பந்தமாகத்தான் இருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தைத் தவிர தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெறுவதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லாத நிலை காணப்படுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் உச்ச அளவில் எங்க ளுடைய பேரம் பேசும் சக்தியை உருவாக்கி தொழிலாளர்களுக்கான கூடுதலான சம்பளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதும் எனது நிலைப்பாடாகும்.
இ.தொ.கா எதிர்காலத்தில் செய்யப்போகும் கூட்டு ஒப்பந்தம் கூட தோட்டத் தொழிலாளர்க ளுக்கு மிக உச்ச அளவிலான வருமானத் தையும், அவர்களுடைய சேவைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான தொழிற்சங்கங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டு களுக்கு மேல் குரல் எழுப்பி வந்திருக்கின்றன. ஆனால் இந்த 10 ஆண்டு காலப்பகுதியில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியவில்லை. குறிப்பிட்ட கூட்டு ஒப்பந்தக் காலப்பகுதியிலேயே தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்குவதும் அவர்களை உணர்ச்சிமயப் படுத்தலும், புரட்சிகர வேலைகளில் ஈடுபட வைப்பதுமாகவே இருந்தார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

கூட்டு ஒப்பந்தம் முடிந்த ஒருவார காலத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம். அல்லது வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்கப் போகின்றோம் என கூக்குரல் இடுவதுடன் அந்தக் காரியம் முடிந்ததாகவே இருக்கிறது. இருக்கும் ஒரேயொரு வழி கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதே சிறந்த வழியாகும். எதிரணிகள் எல்லாம எதற்கும் எடுபடாமல் இருக்கின்ற போது அந்த எடுபடாத கூட்டத்தில் இருக்கின்ற ஒருவராக இருப்பதை விட பேரம்பேசி சம்பளத்தை பெறுகின்ற கூட்டத்தோடு இணைந்து எனது ஆலோசனைகளையும் வழங்கக் கூடியதாக இருக்கிறது.

கேள்வி: தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராகவே செயற்படப் போகியர்களா? எதிர்காலத்தில் உங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கள் எவ்வாறானதாக அமையும்?

பதில்: மலையக அரசியல் வரலாற்றில் எனக்கென ஒரு இடம் இருக்கிறது. இ.தொ.காவில் நான் இணைந்தது எந்தவித சுயநலத்தின் அடிப்படையில் அல்ல என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். மக்களின் நலன்களின் அடிப்படையில்தான் இ.தொ.காவில் இணைந்துள்ளேன். நான் வந்த அரசியல் பாதை மிகக் கரடுமுரடானது. போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
பல்வேறு பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன். மக்களை நேரடியாக அணி திரட்டியிருக்கிறேன். இவ்வாறான பல்வேறு வேலைத் திட்டங்களின் அடிப்படையில் தான் அரசியல் நிலைக்கு உயர்த்தப்பட்டேன். சிலர் அரசியல் கட்சிகளின் செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். நான் கட்சிகளுக்கு செல்வாக்கை உயர்த்தி அதன் மூலம் வந்தேன் என்பதுதான் உண்மை.

இதை இ.தொ.காவின் உயர்மட்ட தலைமைகள் நன்கு உணர்ந்திருக்கின்றன. என்னை இ.தொ.கா விருப்பத்தோடு உள்வாங்கி யிருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கட்சியின் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனக்கு எவ்வாறான பொறுப்புக்களை வழங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதும் எனக்குத் தெரியும். அவர்களுக்கு அவகாசத்தை வழங்கி அவர் வழங்கும் பொறுப்புக்களை ஏற்று செயற்படுவேன். மலையகத்திலே சிதறிக் கிடக்கின்ற பல்வேறு அமைப்புக்குள் கட்டுண்டு கிடக்கின்ற மக்களுக்கு ஏன் அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி அவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்பதே எனது எதிர்காலத் திட்டமாகும்.

கேள்வி: உங்களின் வரவால் இ.தொ.காவில் நீண்டகாலமாக இருப்போரின் மனநிலைகளில் ஏதேனும் மாற்றங்கள் .....?

பதில்: அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் நட்பு ரீதியாகப் பழகுகிறார்கள்.
அந்த அமைப்புக்குள் வந்து சேர்ந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்கள். என்னுடைய இ.தொ.கா பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள், மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட அங்கத்தவர்கள் வரை அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்,அதேநேரத்தில் கட்சியில் இருக்கின்ற எவருக்குமே நான் போட்டியாக திகழப் போவதில்லை. எனது திறமையை அக்கட்சிக்கு வழங்கி அதன் மூலமாக வளர்வேனே தவிர இ.தொ.கா உறுப்பினர்களின் இடத்தைப் பிடித்து வளர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

இ.தொ.காவில் இருக்கின்ற எனது நண்பர்கள் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் என்னை எவ்வளவு சந்தோஷமாக ஏற்றுக் கொண் டிருக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாக நடந்து அக்கட்சியை கட்டிக்காப்பதுதான் எனது பிரதான நோக்கம்.

கேள்வி: இ.தொ.காவில் இணைந்ததன் மூலம் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

பதில்: இ.தொ.காவில் இணையப் போகும்போது பல்வேறு பயமுறுத்தல்கள் எனக்கு வந்தன. அங்கிருக்கின்ற தலைமைத்துவம் உள்வாங்கி விட்டு பின்னர் கிடப்பிலே போடுவார்கள். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சர் முத்து சிவலிங்கம், உயர்மட்ட உறுப்பினர்களான செந்தில் தொண்டமான், சென்னன் போன்றோருடன் பேசிய போது சுமுகமாக, சந்தோஷமாக ஜனநாயக ரீதியிலே யதார்த்தத்துடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்கிருந்தது.

இ.தொ.காவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இ.தொ.காவின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆதங்கமாக இருந்தது. அந்த ஆதங்கத்தை நான் நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன்.


தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
நேர் கண்டவர் : பி. வீரசிங்கம்